Header Ads



நூற்றுக்கு 10 , 15 பள்ளிவாசல்கள்தான் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கின்றன


 -இக்பால் அலி-


பள்ளிவாசல்களின் வக்பு சொத்துக்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். முறையற்ற விதத்தில் நடப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம். பைஸல் தெரிவித்தார்.


கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  பல்வேறு விசேட நிகழ்வுகள் பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதியும் இலங்கை ஒலிப்பரக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் சபை உறுப்பினரும் பள்ளிவாலின் தலைவருமான அப்ஸால்  அஹமட் மரைக்கார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம். பைஸல் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்


இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களில் காணப்படும் பிரச்சினைகளில் மிக முக்கியமான பிரச்சினை  வக்பு சொத்துக்களைப் பராமரித்தல் ஆகும். அநேகமான பள்ளி வாசல்களுக்கு வருமானம் கிடைக்கக் கூடிய  வக்பு பண்ணப்பட்ட கடைகள், சொத்துக்கள் உள்ளன. இவைகளை ஒரு சிலர் கூலிக்கு பெற்றுக் கொண்டு அதற்கு உரித்தான அறவீடுகளைச் செலுத்தாமல் பல விதமான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள் என்று நிறைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டி மாவட்டத்திலே அல்லது வேறு இடங்களிலே இடம்பெற்று இருக்குமாயின் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். தற்போது எங்களது திணைக்களத்தினால் இது ஒரு முக்கியமான வேலைத் திட்டமாகக் கொண்டு பள்ளிக்கு உரித்தான அசையும் அசையா சொத்துகள் பற்றி முழுமையான தகவல்களைப் பெற்று முறையற்ற விதத்தில் கையாளப்படுகின்ற சொத்துக்களுக்காக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம்.  


நாங்கள் ஒரு சில மாவட்டங்களில் நீதி மன்றங்களில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளோம். வெகு விரைவில் கண்டி மாவட்டத்தில் நிலவும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம். அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் எம்மிடம் முறைப்பாடுகளை பதிவு செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.


கண்டி மாவட்டத்தில் பல அழைப்புக்கள் வந்த போதிலும் அவைகளுக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமை போனதையிட்டு நான் மனம் வருந்துகின்றேன். இன்றைய நாள் அதற்கான வாய்ப்பைத் தந்த அல்லாஹ{வுக்கே எல்லாப் புகழும் ஆகும்.  பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்று கருதும் போது இலங்கையில்  மிகச் சிறந்த பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்று கண்டி மாவட்டச் சம்மேளனத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.  அடுத்தது,  காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றன. இந்த இரு சம்மேளனங்கள் செயற்படுவதைப் போன்று ஏனைய மாவட்டங்களிலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் பள்ளிகளில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை சுமுகமாக தீர்வு கண்டு ஒரு முன்னேற்றப் பாதையில் செல்லாம் என்று நான் கருதுகின்றேன்.


இங்கு அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு ஒரு முன்னுதாரணமாக காட்சியளிக்கின்றது. இங்கு வருகை தந்த போது  பல விடயங்களை அவதானித்தேன். விசேடமாக   பள்ளிவாசலின் வளாகத்தில் டி. பி. கனணி தொழில் நுட்ப  கூடம் அமைந்துள்ளது. இது மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள விடயமாகும். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு கல்விக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் டி. பி கல்விக் கூடத்தை முஸ்லிம் பெண் மாணவிகளும் வந்து கலந்து கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை அளித்தால் இன்னும் சிறப்பாக அமையும் என நான் கருதுகின்றேன்.  


எனவே பெண் பிள்ளைகளுக்கும் சில மணித்தியாலயங்களை ஒதுக்கி அவர்களும் இங்கு வந்து கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது மிகச் சிறந்த பயனுள்ள விடயமாக இருக்கும். எனவே இவை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நான்  கேட்டுக் கொள்கின்றேன்.


நாட்டில் மக்களுக்கிடையே நல்லிணக்கம் சகவாழ்வு குறித்து மிகவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.  புத்தசாசன மத கலாசார அமைச்சின்  கீழ்  அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் , இந்து சமய கலாசாரத் திணைக்களம், பௌத்த சமய கலாசாரத் திணைக்களம் ஆகிய சர்வ சமய நல்லிணக்கச் செயற்பாட்டை கருத்திற் கொண்டு செயற்பட்டு வருகின்றன. அதற்கேற்ற வகையில் இப்பள்ளிவாசலில் நல்லிணக்க நிலையம் அமைந்துள்ளதையிட்டு நான் சந்தோசம் அடைகின்றேன். அதனை மேன் மேலும் திறன்படச் செய்வதற்கு  பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.


அதே போன்று ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தி கொடுப்பதில்  இந்த பள்ளி நிர்வாகம் முன்மாதரியாகத் திகழ்ந்து வருகிறது.  கொரோனா காலத்தில் ஜனாஸா நல்லடக்க விடயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பெரும் பங்களிப்பை இப்பள்ளி நிர்வாக சபையினர் வழங்கினர். அதே போன்று இப்பள்ளி வளாகத்தில் சிறந்த அரபு மத்ரஸாவினையும் காணக்  கூடியதாக இருக்கின்றது.


கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயத்தில் எமக்கு அறிவுறுத்தப்பட்ட முக்கியமான கருத்து யாதெனில்  இலங்கையில் காணப்படக் கூடிய சகல அரபு மத்ரஸாக்களுக்கும்  ஒரே பாடத் திட்டம் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த வருடத்திற்குள் சகல அரபு மத்ரஸாக்களிலும் ஒரே பாடத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பாடத்திட்டத்தின்  தயாரிப்பு வேலைகள் இறுதித் தருணத்தில் உள்ளது. சகல அரபு மத்ரஸாக்களது பாடத்திட்டத்தை வெகு விரைவில்  அமுல்படுத்துவதற்காக எங்களது  திணைக்களம் ஈடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அதே போன்று கண்டி பேராதனை வைத்தியசாலைகளில் மரணம் அடைந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் இப்பள்ளிவாசல் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி செயற்பட்டு வருகிறது. இலங்கையில் 3500 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. நூற்றுக்கு 10 , 15 பள்ளிவாசல்கள் தான் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கின்றன. 90 விகிதமான பள்ளிவாசல்களில்  நிர்வாகத் தெரிவு உட்பட எல்லா விடயங்களிலும் கருத்து முரண்பாடுகளும், பிரச்சினைகளும்  காணப்படுகின்றன. இது ஒரு கவலை தரும் விடயமாகும். இது குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம். இப்படியான பிரச்சினைகள் இருந்தால் மக்களுக்கான சேவைகளை வழங்க முடியாது.  பள்ளி நிர்வாகம் என்பது என்ன என்ற கேள்விக் குறியும் ஏற்படுகிறது. இவை எல்லாவற்றும் ஒரு முற்றுப்புள்ளியாக இந்தப் பள்ளிவாயல் நிர்வாகம்  இலங்கையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்களுக்கு ஒரு முன்மாதரியான நிர்வாகத்தை செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையிலேயே இப்பள்ளிவாசலை நோக்குகின்ற போது  எமது உள்ளம் பூரிப்படைகின்றது.  


கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கண்டி மாவட்டத்தில் எல்லாப் பள்ளிவாசல்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணி  பள்ளிவாசல்களில் சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்புவதில் அயராது பாடு பட்டு வருகின்றனர். அதே போன்று பள்ளி வாசல்கள் சமேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் மற்றும் அதன் நிர்வாகத்தினர்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடனும் இணைந்து சகல  விடயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பேரீச்சம் பழம் விநியோகம் முதல்  ஏனைய எல்லா விடயங்களிலும் எம்மோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒத்துழைப்பும் பங்களிப்பும்  மேலும் அதிமாகக் கிடைக்க வேண்டும். அதேவேளையில்  கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் குறித்து ஏனைய பள்ளிவாசல்கள் சம்மேளனங்களுக்கு  அறிமுகம் செய்ய வேண்டிய  நிலையில் சிறந்து விளங்குகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இக்பால் அலி

No comments

Powered by Blogger.