Header Ads



பிரமிட் MTFE SL மீது நீதிமன்றம் தடை - தலைவர் தப்பியோட்டம், கிரிக்கெட் போட்டி அனுசரணையாளரானது எப்படி..?


பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட MTFE SL குழுமத்தின் நான்கு தலைவர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று -12- வௌிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.


நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் விளைவாக, விசாரணை அதிகாரிகள் இன்று -12- காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் இன்று அதிகாலை துபாய்க்கு சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


பிரமிட் குற்றச்சாட்டுகள் தொடர்பில் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழும் விசாரணைகளை ஆரம்பிப்பது உசிதமானது என மத்திய வங்கி முன்னதாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.


இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்புள்ளதால், அவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பெறுவது பொருத்தமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


MTFE SL குழுமம் தற்போது நாட்டின் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் மேற்படி நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் கீழ் நிறுவனத்தின் செயற்பாடுகள் உள்ளதாக நம்பும் தகவல்கள் வௌியாகியுள்ளதாகவும்  மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் நாங்கள் வினவியபோது, இந்த நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என ​​இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் தெரிவித்தது.


இதற்கிடையில், MTFE SL குழுமம், இந்த ஆண்டுக்கான ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அனுசரணையாளர்களாக இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தொடர்பில் இன்று தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.