Header Ads



கொழும்பில் உள்ள தமிழ் Mp க்களிள் வீடுகளுக்கு முன் போராட்டம், குருந்தூர்மலையில் கல் ஒன்றை காட்டி இந்து கோவில் என்கிறார்கள்


ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வரும்போதெல்லாம் வடக்குக், கிழக்கில் உள்ள பௌத்த வழிபாட்டு இடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கொழும்பில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இனவாதத்தைக் கக்கியிருக்கிறார்.


குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வைத்து அண்மையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.


இதனைத் தடுத்து நிறுத்த இனவாதிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.


இந்த பின்னணியிலேயே உதய கம்மன்பில, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.


“குருந்தூர்மலையில் தமிழர்கள் பொங்கல் வைத்து வழிபாடுகளை மேற்கொள்ளும்போது அதற்கு எவரும் தடை ஏற்படுத்தக்கூடாது என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்றிருந்தார்.


கஜேந்திரகுமார் ஒரு இனவாதப் பரம்பரையில் வந்தவர். குருந்தூர்மலையில் பௌத்த விகாரை இருந்தமைக்கான அதாரங்கள் பல இருக்கின்றன. ஆனால், குருந்தூர்மலையில் இந்து ஆலயம் ஒன்று இருந்தமைக்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.


அங்கிருக்கும் வட்டமான கல் ஒன்றை சிவலிங்கம் என்று கூறிக்கொண்டு அதனை காட்டி இங்கு இந்து கோவில் ஒன்று இருந்ததாக கூற முயற்சிக்கிறார்கள்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வரும்போதெல்லாம் வடக்குக், கிழக்கில் உள்ள பௌத்த வழிபாட்டு இடங்களுக்கு தமிழ் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.


இதேவேளை, தாத்தா, அப்பா, மகன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூன்று பரம்பரையாக கொழும்பிலேயே வாழ்ந்து வருகிறார்கள். கொழும்பில் வாழ்ந்துகொண்டு வடக்குக்கு சென்று இனவாதத்தை தூண்டுகிறார்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமல்ல கொழும்பில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு சுமந்திரன் உள்ளிட்டப் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்குக்கு சென்று இனவாதத்தைக் கக்கி வருகிறார்கள்.


தமிழ் அரசியல்வாதிகள் பலர் தெற்கில் சிங்களவர்களுடன் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அதற்கான சுதந்திரத்தை சிங்கள மக்கள் தந்திருக்கிறார்கள். ஆனால், வடக்குக்கு சென்று சிங்கள மக்களுக்கு உள்ள சுதந்திரத்தை இவர்கள் பறிக்கிறார்கள்.


எனவே, வடக்கில் சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொழும்பில் வசிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முன்பாக போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.


இதன் முதற்கட்டமாக கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.


இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்” என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.