Header Ads



கத்தோலிக்க ஆயர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை


அரசியல் நாடகங்களை விடுத்து மக்களின் துன்பத்தை ஒரு சுமையாகக் கருதுமாறு அதிகாரிகளை அன்புடன் கேட்டுக்கொள்வதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.


அப்படிச் செய்தால், ஏழைகளும் பாதிக்கப்பட்டுள்ள மக்களும் குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்துகொள்வார்கள் என பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நாளாந்தம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நாளாந்தம் உணவளிக்க சிரமப்படுவதாகவும், பல குடும்பங்கள் ஒரு வேளை உணவை உண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல மருத்துவமனைகள் மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியதையும், மருத்துவமனைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதையும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. 

நாட்டை விட்டு வெளியேறியுள்ள, வெளியேறி வரும் தகுதிவாய்ந்த வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு போதிய மருந்துகள், ஏனைய வைத்திய உபகரணங்களின் விநியோகம் இன்மையினாலும், தமது சுகாதார தேவையை பூர்த்தி செய்ய முடியாத பலர் காணப்படுவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

போதிய ஊட்டச்சத்து, சரியான உடை, தேவையான புத்தகங்கள், எழுதுபொருட்கள் இல்லாமல் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வன்முறைச் செயல்களால் சட்ட ஆட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் அவசர அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு தெளிவான பார்வை இருப்பதாகத் தெரியவில்லை எனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மேலும் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.