"என் மகனை எனது இரண்டாம் மகன், இரத்தக்கறையோடு தூக்கிக்கொண்டுறியாது நின்றதைக் கண்டு பதறிப்போனேன்’’
“தண்ணீர் பவுஸர் டயரில் சிக்கி உயிரிழந்த என் மகனை எனது இரண்டாம் மகன் இரத்தக்கறையோடு தூக்கிக் கொண்டு செய்வதறியாது நின்றதைக் கண்டு நான் பதறிப்போனேன்’’ என வாழைச்சேனை விபத்தில் உயிரிழந்த ருஷ்திக் எனும் சிறுவனின் தந்தை சரீப் முகம்மது சாதீக் கோர விபத்தின் வலிகளை சொல்லி அழுதார்.
தண்ணீர் பவுஸர் விபத்தில் முகம்மது சாதீக் ருஷ்திக் எனும் ஆறு வயது சிறுவன் ஒருவன் மரணமான சம்பவம் வாழைச்சேனை பிரதேசேத்தை கடும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை 29 ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
“எனது மகன் என்னை ஒரு நாளும் காணாமல் இருப்பதில்லை. அவர் பாடசாலை முடிந்து வரும்போது எனது கடைக்கு வந்து ஜுஸ் வாங்கி குடித்து விட்டுத்தான் வீடு செல்வது வழக்கம். அதேபோன்றுதான் அவர் மரணித்த அன்றும் வீடு ஒன்றில் நடைபெறும் பிரத்தியேக வகுப்பு முடிந்து எனது கடைக்கு வரும்போது விபத்தில் சிக்கி எனது பிள்ளை மவுத்தாகி விட்டார் என்று கண்ணீர் மல்க தனது மகன் மரணமான சம்பவத்தை விபரித்தார் சலீம் என அழைக்கப்படும் சரீப் முகம்மது சாதீக்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சலீம் ரிதிதென்னையில் கோழிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
அன்றைய தினம் ஆசூரா நோன்பு என்பதால் சலீமின் குடும்பத்தினர் நோன்பு நோற்றுள்ளனர். நோன்பு திறப்பதற்கான சாப்பாடுகளை பெற்றுக்கொள்ள எனது கடையை நோக்கி எனது இரண்டாவது மகனுடன் துவிச்சக்கர வண்டியில் வரும் போது தான் ருஸ்திக் பவுஸர் விபத்தில் மரணமடைந்தார்.
நான் வீட்டில் இருந்து கடைக்கு செல்லும்போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பவுஸர் சாரதியும், நடத்துனரும் மது அருந்திக் கொண்டு நின்றதைக் கண்டேன்.
எனது பிள்ளைகள் துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது முன்னோக்கிச் சென்ற பவுஸர் திடீரென பின்னோக்கி வந்ததில் தான் எனது மகன் பவுஸர் டயருக்குள் அகப்பட்டு சம்பவ இடத்தில் மவுத்தாகியுள்ளார்.
விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாருமில்லை. சைக்கிள் ஓடி வந்த ஒன்பதாம் தரத்தில் படிக்கும் எனது இரண்டாவது மகன்தான் இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த எனது மகன் ருஸ்திக்கை மரணித்த நிலையில் செய்வதறியாமல் தூக்கியவாறு நின்றுள்ளார் என்றார் தந்தை சலீம்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு சாரதியும், நடத்துனரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து பவுஸருக்கு தீ வைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார் உடனடியாக தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பவுஸர் முற்றாக தீயில் எரிந்ததுடன், சாரதியையும், நடத்துனரையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
மரணமடைந்த சிறுவன் ருஸ்திக் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வருகிறார்.
அமைதியான சுபாவம் கொண்ட இவர் கல்வியில் மிகவும் ஆர்வமிக்கவர் என்று பொறுப்பாசிரியர் மிப்றாஸ் தெரிவித்தார்.
பாடசாலை சூழலில் மென்மையாக நடந்து கொள்ளும் சிறுவனின் இழப்பு பாடசாலை சமூகத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பாடசாலையில் அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார்.
ரிதிதென்ன பகுதியில் மண் களஞ்சியசாலையில் மண்ணுக்கு தண்ணீர் தெளிக்கும் பவுஸர் வண்டியே இவ்வாறு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் இதனால் முறையற்ற விதத்தில் சிறிய வீதிகளில் கனரக வாகனங்கள் மனித உயிர்களை அச்சுறுத்திச் செல்வதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த விபத்தில் மரணமடைந்த சிறுவனின் ஜனாஸா வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவன் ருஸ்திக்கின் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 6 மணியளவில் ரிதிதென்ன புதிய கிராமம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli,-எச்.எம்.எம்.பர்ஸான்-
Post a Comment