Header Ads



குருணாகலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே முஸ்லிம் எம்.பி. ஹாஜி ஏ.எச்.எம்.அலவி


- என்.எம்.அமீன் -


விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்  தெரிவாகும் வாய்ப்புள்ள ஒரு மாவட்டமே குருணாகல் மாவட்டமாகும்.


 91.9 சதவீதமான  பெரும்பான்மை மக்கள் வாழும் குருணாகல் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் 8.3 சதவீதமாகும். அதாவது 2012ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி 1,431,632 பௌத்தர்களும் 14,721 இந்துக்களும் 118,305 முஸ்லிம்களும் 43,711 ரோமன் கத்தோலிக்கர்களும் குருணாகல் மாவட்டத்தில் வாழ்கிறார்கள். இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள க் கூடிய ஒரு மாவட்டமாக குருணாகல் மாவட்டம் திகழ்கின்றது. இந்த மாவட்டத்தில் 29 முஸ்லிம் கிராமங்கள் உள்ளன.  முஸ்லிம் கிராமங்களை விசிநவ என்ற பெயரில் வரலாற்றுக் காலம் முதல் அழைக்கப்படுகிறது.  கம்பஹா மாவட்டத்தில் உள்ள திஹாரிய விசிநவய அடுத்து சிங்களத்தில் திஹாரிய என்று அழைக்கப்படுவதாக வரலாற்றுத தகவல்கள் கூறுகின்றன. 


குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்றனர்.  பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரிந்து செயற்படுவதனால் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வய்ப்பினை இழந்து வருகின்றனர். இந்தச் சவாலை வென்றெடுத்த ஒரேயொருவர் மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அலவி ஆவார். குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல வலயத்தில் முஸ்லிம்கள் ஓரளவு கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். பம்மன்ன என்ற முஸ்லிம் கிராமத்தில் 1952ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி வர்த்தகரும் சமூக சேவையாளருமான அஹமத் ஹஸன் மர்யம் வீவி தம்பதிகளின் புதல்வராக அலவி பிறந்தார். பம்மன்ன முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு வரை தமிழ் மொழியில் கற்ற இவர், பின்பு லப்பல சிங்கள மகா வித்தியாலயத்தில் இணைந்து க.பொ.த. உயர் தரம் வரை கற்றார்.  


இவரது தந்தை பிரதேசத்தில் உள்ள பிரபலமான வர்த்தகராகவும் சமூக சேவையாகவும் இருந்ததனால் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் அலவிக்கு போட்டி இடும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தேர்தலில் அலவி ஏக மனதாகவே தெரிவானார். 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபையின் முதலாவது தேர்தலில் வடமேல் மாகாண சபைக்கு இவர் தெரிவாகி தேசிய அரசியலில் பிரவேசித்தார். முதலாவது மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு விகிதாசார தேர்தல் முறையில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார். வடமேல் மாகாண சபைக்குத் தெரிவான முதலாவது முஸ்லிம் உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்


1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். குருணாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக இவர் தனது பெயரை வரலாற்றில் பதித்துள்ளார். மாவட்ட சிங்கள மக்களது ஆதரவு காரணமாக இவருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு முன்போ இவருக்குப் பின்போ குருணாகல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் எவரும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. 1994 ஆம் ஆண்டுக்குப் பின் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது இவரால் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின் இவர் மாகாண சபை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு பலமுறை தெரிவானார்.  அப்போதைய முதலமைச்சர் காமினி ஜய விக்கிரம பெரேராவின் நெருங்கிய சகாவாக இருந்த இவர், 2004 முதல் 2015 வரை வடமேல் மாகாண சபை உறுப்பினராகப் பணி புரிந்தார். 


2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது பல அரச நிறுவனங்களில் பல பதவிகளை இவர் வகித்தார். நிலையான வளர்ச்சி மற்றும் வனவிலங்கு அமைச்சில் ஒருங்கிணைப்புச்செயலாளராகவும்., 2017இல் இலங்கை சீனிக் தொழிற்சாலையில் பணிப்பாளராகவும் 2018 இல் கஹட்டகஹா க்ரபைட் லங்கா லிமிடெட்டின் நிர்வாக இயக்குனராகவும் பணி புரிந்தார். 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை அபேட்சராகப் இவர் போட்டியிட்ட மை குறிப்பிடத்தக்கது. குருணாகல் மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் உறவைக் கட்டி எழுப்புவதில் ஹாஜி அலவிக்கு முக்கிய பங்கு உண்டு. இன மத வேறுபாடு பாராது இவர் சேவையாற்றியதனால் சிங்கள மக்களது விருப்புக்குரியவராகத் திகழ்ந்தார். 1990களில் இடம்பெற்ற ஜே.வி.பி. கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையிலும் உதவினார். பின்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகுவதற்கு இவர் ஆற்றிய சேவை உதவியாக அமைந்தது. மர்ஹும் அலவி, சாதாரண மக்களுக்கு என்றும் உதவினார். அதுவே அவரது வெற்றிக்கு உதவியது என குருணாகல் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபையின் உறுப்பினருமான அப்துல் சத்தார் தெரிவித்தார். நாம் இருவரும் மாவட்டத்தில் இரு வேறு அடிகளில் இருந்து அரசியல் செய்தாலும் எப்போதும் சகோதரர்களாகவே செய்யப்பட்டோம் சகோதரர் அலவி பல நெருக்கடிகளை எதிர்நோக்கிய போது அந்த நெருக்கடிகளிருந்து மீளுவதற்கு என்னால் உதவ முடிந்தது என்றும் அப்துல் சத்தார் தெரிவித்தார். சகோதரர் அலவியின் மறைவு என் மனதில் இன்னும் ஒரு வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது எனவும் சத்தார் தெரிவித்தார். சிங்கள முஸ்லிம் உறவை வளர்த்த ஓர் அரசியல்வாதி அலவியாவார். கடந்த புனித ஹஜ்ஜின் போது மக்கா சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றித் தாயகம் திரும்பிய ஓரிரு தினங்களில் நோய்வாய்ப்பட்டு மர்ஹும் அலவி ஜுலை மாதம் 12ஆம் திகதி இறைவனடி எய்தினார்.


தனது 36ஆவது வயதில் தொடங்கிய அரசியல் வாழ்க்கையை இறக்கும் வரை தொடர்ந்தார். 07 பிள்ளைகளின் தந்தையான மர்ஹும் ஏ.எச்.எம்.அலவி குருணாகல் மாவட்டத்தில் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் பாடுபட்டுழைத்த ஓர் அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக!


No comments

Powered by Blogger.