சந்திரனில் வீடா கட்டப் போகிறீர்கள் என்பவர்களின் கவனத்திற்கு
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.$
நிலவில் மென்மையாகத் தரையிறங்கிய நான்காவது நாடாக இருந்தாலும், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இத்தகைய பெருமையைப் பெற்றிருந்தாலும், சிலர் ‘ஏன் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும். அங்கு என்ன வீடா கட்டப் போகிறீர்கள்? அதற்குப் பதிலாக அந்தப் பணத்தை மக்கள் நலனுக்காக அரசு செலவிடலாமே’ என்று கேட்கலாம்.
சந்திரயான் போன்ற விண்வெளித் திட்டங்கள் சந்திரனை பற்றி மட்டுமே ஆராய்வதில்லை. மாறாக, இதுபோன்ற விண்வெளி ஆராய்ச்சிகளால், இதுவரை நாம் பெற்றுள்ளவை ஏராளம். இந்த ஆராய்ச்சிகளின் மூலம் நாம் பெற்றவையால், தற்போது நம் வாழ்க்கை மிகவும் வசதியானதாகவும், சுலபமானதாகவும் மாறியுள்ளது.
விளம்பரம்
இத்தகைய விண்வெளி ஆராய்சிகளாலும், விண்வெளிப் பயணங்களாலும், நாம் பெற்ற ஐந்து விஷயங்களைப் பார்ப்போம்.
நாசாவின் அப்பல்லோ பயணத்தின்போது ஒரு கணினி முதன்முதலில் சூட்கேஸில் பொருத்தும் வகையில் சிறியதாக வடிவமைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் தங்களின் வீட்டு அறை முழுவதையும் அடைக்கும் அளவுக்குப் பெரிய கணினி இருந்ததாக மக்கள் சொல்வார்கள்.
“ஆனால், 1960களில் நிலாவுக்கான பயணங்கள் துவங்கியதும், மக்கள் தங்கள் கணினிகள் எவ்வளவு சிறியதாகவும் கச்சிதமாகவும் இருக்கின்றன என்று பேசத் தொடங்கினர்,” என்கிறார் டிஜிட்டல் அப்பல்லோ புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் மைண்டெல்.
நாசாவின் அப்பல்லோ பயணத்தின்போது ஒரு கணினி முதன்முதலில் சூட்கேஸில் பொருத்தும் வகையில் சிறியதாக வடிவமைக்கப்பட்டது.
அந்த கணினியில் ஒரு திரை இருந்தது, உள்ளீட்டு விசைப்பலகையையும் கொண்டிருந்தது(Keyboard). அதன் மூலம், பூமியில் இருந்து சுமார் 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள ராட்சத விண்கலத்தை மனிதர்கள் கட்டுப்படுத்தினர். இந்த கணினி தான் முதன்முதலில் டிஜிட்டலாக திசைமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவி.
இந்தத் தொழில்நுட்பம்தான் டிஜிட்டல் ஃப்ளை-பை-வயர் (fly-by-wire) தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இது இன்று ஒவ்வொரு விமானத்திலும் உள்ளது. அதற்கு என்ன பொருள்?
முந்தைய ஹைட்ராலிக் சாதனங்கள் மின்னணு கட்டுப்பாட்டு சாதனத்தால் மாற்றப்பட்டன. இதுவே விமானத்தை டிஜிட்டலாக கட்டுப்படுத்திய முதல் கருவி.
நாட்டின் மொத்த மின்சுற்று (electric circuit) உற்பத்தியில் 60% அப்பல்லோ மிஷனுக்காக பயன்படுத்தியது அமெரிக்கா
தற்போது, டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு, காணும் இடமெல்லாம் கணினிகளும் வந்துவிட்டன. நாசா சார்பில் 1969ஆம் ஆண்டில் நிலாவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ 11 விண்கலத்தில் ஒரு கணினி இருந்தது. அந்த கணினியின் உதவியுடன்தான் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலாவில் முதலில் அடி எடுத்து வைத்தனர்.
இந்த கணினியின் விவரங்களைத் தற்போது தெரிந்துகொண்டால், வியப்பாக இருக்கும். அவை சுமார் 74KB ROM மற்றும் 4KB RAM நினைவகத்தைக் (Memory) கொண்டிருந்தது. ஆனால், தற்போது உங்கள் கைப்பேசியில் அதை விடவும் மில்லியன் மடங்கு நினைவகம் அதிகம் இருக்கும்.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போர் மற்றும் விண்வெளிப் போட்டியை கருத்தில் கொண்டு, அமெரிக்கா தனது விண்வெளிப் பயணங்களை விரிவுபடுத்தியது. அதற்காக, நாட்டின் மொத்த மின்சுற்று(electric circuit) உற்பத்தியில் 60% அப்பல்லோ மிஷனுக்காக பயன்படுத்தப்பட்டது.
இதுகுறித்து டேவிட் மைண்டெல் கூறுகையில், “சிலிக்கான சிப்களும்(chips) மற்றும் ஒருங்கிணைந்த சுற்றிகள்(circuit) அதிநவீன தொழில்நுடப்மாகக் கருதப்பட்டன. நாசா தங்களது விண்கல்தில் அவற்றைப் பயன்படுத்தியதால், அமெரிக்கா சிலிக்கான் புரட்சியை தொடங்கியது என மற்ற நாடுகளுக்கும் செய்திகள் பரவின. அப்பல்லோ திட்டம்தான் இந்த தொழில்நுட்பத்தின் பயனை உலகிற்கு உணர்த்தியது,” என்றார்.
இதுவே தற்போது நமது கைகளில் தவளும் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள சிறிய, சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன சிப்கள் உருவாக காரணமாக இருந்துள்ளது.
1996இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் ரிசார்ஜ் செய்யும் வகையிலான பேட்டரி தொழில்நுட்பம் குறித்து தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது.
விலை உயர்ந்த ஹெவி டியூட்டி லேண்ட்லைன்கள் முதல் நவீன கால ஸ்மார்ட்போன்கள் வரையிலான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயணம் நீண்டது.
இதில், பேட்டரி தொழில்நுட்பம் மிகவும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்றே சொல்லலாம். ஆனால், இந்த தொழில்நுட்பம் விண்வெளி பயணங்களில் இருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
நாசா சார்பாக நிலாவுக்கு அனுப்பிய ஒரு கருவியில், அந்தக் காலத்தில் இருந்த பேட்டரிகளிலேயே மிகவும் இலகுவானதாக, ஒரு சிறிய ரக வெள்ளி துத்தநாக பேட்டரி இருந்துள்ளது. ஆனால், அந்த பேட்டரிகள் ரீசார்ஜ் செய்ய முடியாதவை. அதை நீண்ட காலம் நாசா ஆராய்ச்சி செய்தது, இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இறுதியாக, 1996இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் நிறுவனம் சார்ஜ் செய்துகொள்ளும் செய்யும் வகையிலான பேட்டரி தொழில்நுட்பம் குறித்து தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது.
அவர்கள் செவிப்புலன் கருவிகளில் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம்-அயன்(lithium-ion)பேட்டரிகளை வைக்க விரும்பினர். ஆனால், அவை வெப்பமடையக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தன.
இறுதியாக, அந்த நிறுவனம் 1000 முறை ரீசார்ஜ் செய்யக்கூடிய சில்வர் துத்தநாக பேட்டரியை உருவாக்கி வெற்றி பெற்றது. இந்த பேட்டரிகளை பயன்படுத்தி, 1999ஆம் ஆண்டில் ரீசார்ஜ் செய்யக்கூடிய முதல் செவிப்புலன் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
பல அடுக்கு மைலர்கள் (Mylars), இலகுரக பிளாஸ்டிக் மற்றும் உலோகக் கலவையால் ஆன பொருள், வெப்பம், வேறு எந்தப் பொருளாலும் வழங்க முடியாத பாதுகாப்பை ஒலி, ஒளி உள்ளிட்டவற்றிடம் இருந்து வழங்குவதாக நாசா உணர்ந்தது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதை விண்வெளி வீரர்களின் விண்வெளி உடைகளாக பயன்படுத்தியது.
இன்று, அதே மைலர்(Mylars) ஃபேஷன் தொழில், தீயணைப்பு முகாம், குளிர்பதனக் கிடங்கு மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கும் மீட்புக் குழுக்களில்கூட பயன்படுத்தப்படுகிறது.
டிஜிட்டலாக புகைப்படம் எடுப்பது தொடர்பான ஆராய்ச்சியை 1960களிலேயே நாசாவின் ஜெட் ப்ரோபுல்ஷன் ஆய்வகம் (Jet Propulsion Laboratory) தொடங்கிவிட்டது
கணினிகளைப் போலவே, ஆரம்பகால கேமராக்களும் ஒரு அறைக்குத் தேவையான இடத்தைப் பிடித்தன. இன்று உங்கள் மொபைலில் குறைந்தது மூன்று கேமராக்கள் உள்ளன.
முதல் டிஜிட்டல் கேமரா 1975இல் கோடாக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, ஆனால், டிஜிட்டலாக புகைப்படம் எடுப்பது தொடர்பான ஆராய்ச்சியை 1960களிலேயே நாசாவின் ஜெட் ப்ரோபுல்ஷன் ஆய்வகம் (Jet Propulsion Laboratory) தொடங்கிவிட்டது.
புகைப்படம் எடுக்கும்போது, ஒவ்வொரு ஃப்ரேமும் (Frame) பல நுண்ணிய துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு புகைப்பட உணரிகளைத் (photo sensors) தாக்கி, அவை டிஜிட்டல் படத்தை உருவாக்குகின்றன.
கடந்த 1965ஆம் ஆண்டில் இந்தத் துண்டுகள் ஒவ்வொன்றும் பிக்சர் எலிமெண்ட் அல்லது பிக்சல்(Picture Element or Pixel) என்று பெயரிட்டார் பிரடெரிக் பில்லிங்ஸ்லி.
பின்னர், எரிக் போசம் தலைமையின் கீழ் அதே தொழில்நுட்பம் நுண்செயலிகள் மற்றும் சிப் தொழில்நுட்பத்துடன் மேலும் சிறியதாக மாற்றப்பட்டன. இன்றைக்கு நம் கைகளில் பொருத்தும் அளவுக்கு சிறிய டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டன. அதற்கு இந்தத் தொழில்நுட்பமே காரணம்.
ஆனால், மற்றொரு தனியார் நிறுவனமான ஹாசல்பிளாட் டேட்டா கேமரா (HDC) 1969இல் நிலவில் ஒரு வரலாற்று புகைப்படத்தை எடுத்தது. அவை தற்போது பல ஃபோன்களிலும் உள்ளன.
இந்த நிலவுப் பயணங்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்கியுள்ளன. ஆம், இந்த விண்வெளிப் பயணங்கள் பல தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தியுள்ளன, முன்னேற்றியுள்ளன.
BBC
Post a Comment