அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஸாகிப் மௌலானாவுக்காக பிரார்த்திப்போம்
- ஏ.எம்.முஹாஜிரீன் -
உம்றாக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகையில் இடம்பெற்ற ஐவர் உயிரிழந்த துயர்மிக்க சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.
தம்புத்தேகம பிரதேசத்தில் நிகழ்ந்த இவ் வாகன விபத்தில் அந்த சிறிய ரக வானில் பயணித்த மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப்பேரில் மூன்று சிறுவர்கள் மாத்திரம் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள போதிலும் அதில் ஒரு சிறுவனான செல்வன் ஸாகிப் மௌலானா (தரம் 01 , கஹட்டகஸ்திகிலியா அல்ஹுதா மு.வி. மாணவன்) தொடர்ந்தும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார். இச்சிறுவனின் தாயும், தந்தையும் (அப்துல் ஹக் மெளலானா, திருமதி அப்துல் ஹக் மெளலானா (பாத்திமா வபா), இந்த எதிர்பாராத கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்தில் உயிரிழந்த அப்துல் ஹக் மெளலானா, ஆதம்லெப்பை றபாய்தீன், நஸீம் (வான் சாரதி) திருமதி பாத்திமா வபா அப்துல் ஹக் மெளலானா, பாத்திமா ஆபிதா உள்ளிட்ட ஐவரின் ஜனாஸாக்களும் கஹட்டகஸ்திகிலியா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஐவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மிக நெருங்கிய உறவினர்களாவர்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஐவரில் ஒருவரான மர்ஹூம் அப்துல் ஹக் மௌலானாவை இப்பிரதேசத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிச்சயமானவர். சுய முயற்சியினால் உழைத்து முன்னேறி தொலைத்தொடர்பு நிலையமொன்றை கஹட்டகஸ்திகிலியா நகரில் நடாத்தி வந்தவர். பள்ளிவாசல் மற்றும் பாடசாலை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த இவர் நீண்ட காலம் பள்ளிப்பரிபாலன சபையின் பொருளாளராக (மரணிக்கும் வரை) கடமையாற்றி வந்தார். சமூக சிந்தனையும், தூரநோக்கும் கொண்ட மர்ஹூம் ஹக் மௌலானா பிரதேச கல்வி வளர்ச்சியிலும், சமூக பொருளாதார முன்னேற்றத்திலும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளமையை இக்கிராம மக்கள் சான்று பகர்கின்றனர்.
“ஹக் ஓர் அரிதான ஆளுமை கொண்ட அரிய சொத்து, அதேபோன்று இந்த விபத்தில் உயிரிழந்த ஆதம் லெப்பை (றபாய்தீன்) ஒரு சிறந்த நிர்வாகியும் சமூக சிந்தனையாளரும் ஆவார். நீண்ட காலம் பள்ளிப்பரிபாலன சபையின் செயலாளராக கடமையாற்றிய இவர் நிருவாக சபையில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இவர் கிராமம் பற்றியும் இக்கிராம மக்கள் பற்றியும் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு தகவல் களஞ்சியம். இவர்கள் இருவரும் இக்கிராமத்தின் முக்கியமான இரு தூண்கள். இவர்களின் இழப்பு இக்கிராமத்திற்கு மாத்திரமல்ல இப்பிரதேசத்திற்கே ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பாகும் என கஹட்டகஸ்திகிலிய பள்ளிப்பரிபாலன சபையின் தலைவர் எம்.ஏ. இஸ்ஸதீன் தெரிவித்தார்.
தான் வாழுகின்ற சமூகத்தின் மீது கொண்டிருந்த பற்று மற்றும் கரிசனை போன்றே இவர் தனது குடும்பத்தின் மீதும் அளவு கடந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே இள வயதிலேயே கணவனை இழந்த தனது சகோதரியை உம்றாக் கடமையை நிறைவேற்றுவதற்காக அழைத்துச் செல்வதற்கான அலுவல்களை மேற்கொண்டார். இதன் முதற்கட்டப் பணியே கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வது. இந்த ஏற்பாடுகளுடன் அவரது மனைவியும் இணைந்து கொண்டார். மர்ஹூம் ஹக் மௌலானாவும் ஒரு அனுபவம் உள்ள சாரதி என்றாலும் தூரப் பயணம் என்பதால் உறவினரும் நண்பருமான நஸீமையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். மர்ஹூம் நசீம் தனியார் பஸ் வண்டி ஒன்றில் பஸ் நடத்துநராக கடமையாற்றியவர். இவர்களோடு உறவினரான ஆதம்லெப்பை (றபாய்தீன்) இன்னும் மூன்று சிறார்களும் என எட்டுப்பேர் இப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
புனித உம்றாக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைவேறப்போகின்றது என்ற ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் முதற்கட்ட ஏற்பாடாக கடவுச்சீட்டை எடுப்பதற்காக கஹட்டகஸ்திகிலிய நகரிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்ட இவர்கள் சென்ற வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் இவ்வாறான ஒருகோர விபத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
ஒரு நல்ல நோக்கத்திற்காகச் சென்று திரும்புகையில் இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் இறைவன் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் அனைவரையும் மேலான சுவனத்தில் குடியிருக்கச் செய்யவேண்டுமெனவும், இந்த விபத்தில் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்ற ஸாகிப் மௌலானா விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தனை செய்வோமாக.- Vidivelli
Post a Comment