மலையுச்சியில் பெண்ணின் சடலத்தை மீட்கச்சென்ற இராணுவ வீரர் உயிரிழப்பு
கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டுவரச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் வனப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக இந்த இராணுவ கோப்ரல் வனப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மூன்றாம் சிங்கப் படையணியில் கடமையாற்றிய கோப்ரல் கே.என்.எஸ்.கே ஹேரத் என்ற 36 வயதுடைய அனுராதபுரத்தைச் சேர்ந்த அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து கொண்டு வருவதற்காக வனப்பகுதிக்குள் பிரவேசித்த போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை இந்த இராணுவ கோப்ரல் பின்தொடர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வந்த இருவர், இராணுவ அதிகாரி ஒருவர் வனப்பகுதியில் கிடப்பதாகத் தெரிவித்ததையடுத்து, இராணுவப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கோப்ரலை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கோப்ரல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரில் முகாமிட வந்த சிலர், மலையின் ஒருபுறம் உள்ள குன்றின் அருகே ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் சஞ்சய் வீரசேகரவின் மேற்பார்வையில் நுவரெலியா பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் லிந்துலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலத்தை குன்றின் மீது இருந்து எடுத்து வெளியே கொண்டு வந்தனர்.
மலை உச்சியில் இருந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஒரு குழுவோ அல்லது ஒரு நபருடன் வந்த பெண், உயிரை மாய்த்துக் கொண்டதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் அல்லது நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் லிந்துலை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் உறவினரை லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இன்று முதல் அனுமதியின்றி கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட அனுமதிக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரைப் பார்வையிட அல்லது மலை உச்சியில் முகாமிட்டுச் செல்வதற்கு உரிய முறைமை தயாரிக்கப்படும் என மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment