முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதி அக்கறை கொள்ள வேண்டும் - மகஜர் கையளிப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டோரை நினைவு கூரும் வருடாந்த பிரார்த்தனை நிகழ்வு சனிக்கிழமை 12.08.2023 இடம்பெற்றது.
தெருக்களில் வெள்ளை கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததோடு அன்றைய தினம் கடைகள் பூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் காட்டுப்பள்ளிவாசலில் அதிகாலை தொடக்கம் பிரார்த்தனை நிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இறுதியில் கவன ஈர்ப்பு அமைதிப் பேரணி இடமட்பெற்றது.
தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொதுமுகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, அகில இலங்கை வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய உப தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை உட்பட ஊர்ப் பிரமுகர்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உற்றார் உறவினர்கள், தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் செயற்பாட்டாரள்கள், மார்க்கப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர கலந்து கொண்டனர்.
ஏறாவூர் நகரிலும் அதனை அண்டியுள்ள கிராமங்களிலும் நித்திரையிலிருந்தபோது பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீவைத்தும் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்த வருடாந்த பிரார்த்தனை கவன ஈர்ப்பு நிகழ்வு இடம்பெறறது.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி நடுநிசிக்குச் சற்று முன்னராக ஏறாவூருக்குள் புகுந்த ஆயுதக் கும்பலால் ஆற்றங்கரை, சுரட்டையன்குடா, ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடா வீதி, ஐயன்கேணி, சத்தாம்ஹ{ஸைன் ஆகிய கிராமங்களில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயலின் புறம்பான பகுதியொன்றில் சுஹதாக்கள் (தியாகிகள்) பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கவன ஈர்ப்பு அமைதிப் பேரணியின் இறுதியில் ஜனாதிபதிக்குச் சேர்ப்பிப்பதற்காக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதில் நாட்டின் முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதி அக்கறை கொள்ள வேண்டும்; என்று நாம் கருதுகின்றோம். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் கரிசனைகள் உள்வாங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக்கள் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
Post a Comment