தேரருக்கு வட்டிலாப்பம் வழங்கிய மௌலவிகள் - நோன்புக் கஞ்சி குடிப்பதற்கும் ஆசையாம்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
நாட்டு மக்களை ஒரு போதும் பிளவுபடுத்தக்கூடாது’’ என உமந்தாவ குளோபல் (உலகளாவிய) பெளத்த கிராமத்தின் மத குரு ஸ்ரீ சமந்தபத்ர தன்னைச் சந்திக்க வந்த சுமார் 80 மெளலவிகள், மத்ரஸா மாணவர்களிடம் தெரிவித்தார்.
மெல்சிரிபுர மாஹிவல உஸ்வதுல் ஹஸ்னா மத்ரஸா மாணவர்கள், மெளலவிகள் தேரருக்கு வட்டிலாப்பம் தானமாக வழங்கினார்கள். அவர்களை அன்புடன் வரவேற்ற ஸ்ரீ சமந்தபத்ர தேரர் அவர்கள் மத்தியில் மத்தியில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
‘நட்புறவுக்கு உதாரணமாக நீங்கள் வட்டிலப்பம் சுமந்து வந்திருக்கிறீர்கள். நான் மன நிறைவுடன் இதனை ருசி பார்க்க விரும்புகிறேன். இது கருத்தடை வட்டிலாப்பம் அல்ல. முஸ்லிம்களின் வட்டிலாப்பம் உண்பதற்கும், நோன்புக் கஞ்சி குடிப்பதற்கும் நாம் மிகவும் ஆசைப்படுகிறோம். இதுதான் எமது ஒற்றுமை. இப்படித்தான் நாம் வாழ்ந்து பழகியுள்ளோம்.
இன்று சுமார் 80 மெளலவிகள் என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். இதனை கருத்தடை உணவு என்று பொய் கூறாதீர்கள். இப்படிக்கூறி மக்களுக்கிடையில் சண்டை மூட்டாதீர்கள். நாங்கள் நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனுமே வாழ விரும்புகிறோம். எங்களை பிளவுபடுத்திவிடாதீர்கள். இவ்வாறான ஒற்றுமையே எங்களுக்குத் தேவை.
நீங்கள் எப்போதென்றாலும் இங்கு வரலாம். நாங்களும் உங்களைப் பார்க்க வருவோம். இந் நாட்டில் நாங்கள் இரு சாராரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவுமே இருக்கிறோம். நாமனைவரும் ஒரே நாட்டின் மக்கள். நாங்கள் பிளவுபட்டிருக்கக்கூடாது. எங்களுக்குள் ஒற்றுமை நிலவாவிட்டால் எங்கள் நாடு முன்னேற்றமடையாது.
நாட்டு மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் உணவில் ஒருபோதும் விஷம் கலக்க மாட்டார்கள். கருத்தடை கொத்து, உணவு என்று பொய் கூறவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் அனைவரும் அபிவிருத்தியை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம் என்றார்.
நல்லெண்ண விஜயத்தில் பங்கு கொண்ட மாஹிவல உஸ்வதுல் ஹஸ்னா அரபுக்கல்லூரியின் ஆசிரியர் ஏ.எச்.ஹம்ஸா (ஹாஷிமி) இது தொடர்பில் ‘விடிவெள்ளி’க்குக் கருத்துத் தெரிவிக்கையில்;
உமந்தாவ குளோபல் பெளத்த கிராமத்தின் பன்சலையின் ஸ்ரீ சமந்தபத்ர தேரரை எமது மத்ரஸாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். தேரர் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கருத்தடை கொத்துரொட்டி போன்ற பொய் பிரசாரங்களுக்கு பதில் வெளியிட்டார். எதிர்ப்புத் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையி் மனக்கசப்புகளுக்கு இடமேயில்லை என்றார். இவ்வாறான நல்லிணக்க விஜயங்கள் நாட்டின் நலாபுறமும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கம் பலப்படுத்தபட வேண்டும் என்றார்.
குறிப்பிட்ட விஜயத்தில் மாணவர்களுடன் உஸ்வதுல் ஹஸ்னா அரபுக்கல்லூரி அதிபர் எச்.எம்.முஸ்தாக் (ரஹ்மானி) உட்பட ஆசிரியர்கள் ஏ.எச்.ஹம்ஸா (ஹாஷிமி), எம்.எஸ்.எம்.நிஹார்தீன் (வுஸ்வி) ஏ.ஆர்.எம். இம்ரான் (நூரி), எம்.ஜே.எம்.இம்ஷாத் (இஹ்ஸானி), எம்.சி.எம்.அக்ரம் (ஹாஷிமி), ஏ.எல்.எம்.அஸ்லி (ஹாபிலி), எம்.டப்ளியு. எம். நிம்ஷாத் (வுஸ்வி), எம்.எஸ்.எம்.நபீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli
Post a Comment