தமிழ் அதிகாரிகளினாலும், அரசியல் வாதிகளினாலும் சிங்களவருடைய உரிமைகள் பறிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் விகாரைகளை அமைக்க பிரதேச செயலாளர்கள் அனுமதி வழங்காத பின்னணியில், சிறிலங்கா புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் மனுவொன்றை சமர்ப்பித்ததன் பின்னர் அந்த அமைப்பின் சட்டத்தரணி நுவன் வெல்லன்துடாவ இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு கிழக்கில் இன்று நாம் விகாரைகளை அமைத்து வழிபாடுகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளது. விகாரைகளை அமைப்பதற்கான அனுமதி பிரதேச செயலாளர்களால் வழங்கப்பட வேண்டும். அதற்கான அனுமதி அவர்களிடம் உள்ளது.
சிறிலங்காவின் அரசியலமைப்புக்கமைய புத்த மதத்தை பாதுகாக்கும் மற்றும் விரிவு படுத்துவது அரச கடமையாக அமைந்துள்ளது. அதனால் அனைத்து அரச அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு அமைய செயல்பட வேண்டும்.
விகாரைகளை அமைப்பதற்கான அனுமதியை பிரதேச செயலாளர்கள் வழங்க வேண்டும். எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மத மற்றும் இனவாதிகளால் அங்கு விகாரைகளை அமைத்து மதவழிபாடுகளை நடத்த முடியாமல் உள்ளது.
குறிப்பாக மன்னார் போன்ற பிரதேசங்களில் வேற்று மத குழுக்கள், தமிழ் இனவாத குழுக்கள் மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் மிக மோசமாக செயற்படுகின்றன. இவர்களின் செயற்பாடுகளால் எமக்கு விகாரைகளை கட்ட முடியாமல் உள்ளது.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த இராச்சியம். இந்த பௌத்த இராச்சியத்தை பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த நாட்டில் விகாரைகள் அமைக்க எந்தவொரு சட்ட தடையுமில்லை.
பௌத்த விகாரை அல்லாத ஏனைய வழிபாடு ஸ்தலங்களை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் போன்ற இனவாத குழுக்கள் மற்றும் மதவாதிகளின் ஆதிக்கம் காரணமாக பௌத்த விகாரைகளை அமைக்க பிரதேச செயலாளர்கள் அனுமதி வழங்குவதில்லை.
பிரதேச செயலாளர்களிடம் இருக்கும் இது தொடர்பான அதிகாரங்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அங்குள்ள அனைத்து தேரர்களையும் இந்த விடயம் தொடர்பில் நாம் தெளிவுபடுத்துவோம்.
அத்துடன், பௌத்த மக்களையும் இது தொடர்பில் தெளிவுபடுத்தி அனைவரையும் அழைத்துக் கொண்டு மிக விரைவில் இதே இடத்திற்கு வருவோம். வடக்கு கிழக்கில் சிங்களவர்களை வாழவிடாமல் பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள்.
அங்குள்ள பிரதேச செயலாளர்களால் மற்றும் அரசியல் வாதிகளால் சிங்கள மக்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிங்கள மக்களுடைய சொந்த மண்ணில் சிங்கள மக்கள் அனாதரவாக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம்." என தெரிவித்துள்ளார்.
Post a Comment