Header Ads



படுகொலைகள் தந்த துயரங்களும், கற்றுக் கொண்ட பாடங்களும்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


1990ம் ஆண்டு என்பது இலங்கையில் இனப்படுகொலைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் அகதி வாழ்க்கைக்கும் பெயர் போன இருண்ட காலகட்டமாக இன்றளவும் பார்க்கப்படுகின்றது.


இனப்படுகொலைகள் நடந்து இப்பொழுது 33 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்தத் துயரங்கள் ஏற்படுத்திய இதயக் காயங்கள் இன்னமும் மாறாமல் மறையாமல் நெஞ்சை நெருடுகின்றது.


ஒரு கால கட்டத்தில், நினைவு தினங்கள் வரும்போதே பயங்கரங்கள்  நடுங்க வைக்கும் சூழ் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைக்கு அவ்வாறான பயங்கரம் இல்லை என்பது ஆறுதலளிக்கும் விடயம்.


மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பயணிக்கும்போது சுமார் 12 கிலோமீற்றர் தொலைதூரத்தில் அமைந்திருக்கிறது ஏறாவூர் நகரம்.


இந்த ஊர் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுடன் சுமார் 50 ஆயிரம் சனத்தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது.


ஏற்கெனவே ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவுடன் ஏறாவூர் நகரிலுள்ள மக்களின் அரச  நிருவாகக் கடமைகள் இடம்பெற்று வந்துள்ளபோதிலும் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்முறைகளையும் முஸ்லிம்கள் மீதான கூட்டுப் படுகொலைகளையும் தொடர்ந்து ஏறாவூர் பகுதி திறந்தவெளி அகதி முகாம்போலவும் அங்கிருந்து வெளியில் நகரமுடியாத உயிரச்சுறுத்தல் இருந்ததாலும் ஏறாவூர் நகர மக்கள் அரச நிருவாகக் கடமைகளுக்காக பிரதேச செயலகம் அமைந்திருந்த ஏறாவூரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றருக்கும் குறைவாகவுள்ள  செங்கலடிக்குச் செல்ல முடியாமற் போனது.


ஆயுதம் ஏந்திய, தமிழர் உரிமைப் போராட்டம் என்று கூறிக் கொண்ட அமைப்பினரால் 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட  கூட்டு இனப்படுகொலையின் பின்னர் ஏறாவூர் மக்கள் தமது நிருவாக ரீதியான கருமங்களுக்காக ஊரை விட்டு வெளியேறமுடியாத நிலைமை ஏற்பட்டபொழுது ஏறாவூர் நகருக்கென தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது.


ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலமைந்துள்ள மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பகுதிகளிலேயே வாழ்வாதாரத்துக்கான பூர்வீகக் கிராமங்களும் உள்ளன.


ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள், சேனைப் பயிர்த் தோட்டங்கள், பல்லாயிரக்கணக்கான கால்நடைகள், நன்நீர் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத் துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.


1985 ஏப்ரலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் பலர் அவ்வப்போது ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


கிராமங்களில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்புச் செய்து விரட்டியடிக்கப்பட்டதனால் அவர்கள் அருகிலுள்ள ஏறாவூரிலும் அயல் மாவட்டங்களான பொலொன்னறுவை அம்பாறை மாவட்டங்;களின் முஸ்லிம் பகுதிகளுக்கும் இடம்பெயரலாயினர்.


இவ்வாறிருக்கும் தறுவாயிலேயே முன்னதாக 1990ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏறாவூர் நகரில் அமைந்திருந்த பொலிஸ் நிலையம் எல்ரீரீஈ இனரால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டது.


அங்கிருந்த பொலிஸாரின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கடமையிலிருந்த தமிழ் பொலிஸாரை விடுவித்த எல்ரீரீஈ இனர், ஏனைய முஸ்லிம் சிங்களப் பொலிஸாரை தம்வசம் அழைத்துச் சென்று படுகொலை செய்திருந்தனர். பொலிஸ் நிலையத்தையும் தாக்கி அழித்துவிட்டே அவர்கள் சென்றிருந்தனர்.


எனவே, ஏறாவூர் முஸ்லிம் நகரம் பாதுகாப்பு எதுவுமற்ற நகரமாக இருந்தது.


இவ்வாறிருக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் நகரங்களில் ஒன்றான ஏறாவூரிலும் இனச்சுத்திகரிப்புச் செய்து அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் முஸ்லிம்கள் மீது கூட்டுப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டது.


1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு 9 மணியளவில் ஏறாவூருக்குள் புகுந்த ஆயுததாரிகள் கர்ப்பிணியின் வயிற்றைக் கீறிக்கிழித்து சிசுவை வெளியே எடுத்து அம்மியில் வைத்து அடித்துக் கொன்றதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போதும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


ஏறாவூரில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிகள் என வயது வரம்பு வித்தியாசமின்றி 121 பேர் சுட்டும், வெட்டியும், குத்தியும், எரித்தும் அடித்தும் கொல்லப்பட்டிருந்தனர்.


இருநூறிற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானார்கள். படுகாயமடைந்தவர்களில் பலர் பின்னாட்களில்  சிகிச்சை பயனின்றி மரணத்தைத் தழுவியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


நடுநிசியில் நித்திரையிலிருந்தபோது சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீவைத்தும் கொல்லப்பட்ட பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு எதுவித பங்கமும் விளைவிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.


ஏறாவூரின் பல கிராமங்கள் 1990ஆம் ஆண்டின் ஓகஸ்ட் 11ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னர் இரத்தத்தில் தோய்ந்தன. தமிழர் உரிமைப் போராட்டத்தின் பிரதான குழுவான  எல்ரீரீஈ எனும் ஆயுதக் குழுவே இவ்வாறான இன சம்ஹாரத்தைச் செய்தது.


கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி; ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்த 30 வருட கால ஆயுத வன்முறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட இடர்கள்பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும் அந்த அறிக்கையில்,


“இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படும் பாதிப்புக்கள் இரு வகையினதாகும். முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மைத் தமிழர்கள் மத்தியில் சிறுபான்மையினராக இருக்கின்ற அதேவேளை சிங்கள பெரும்பான்மையினர் மத்தியிலும் சிறுபான்மையினராகவே இருக்கின்றனர்.


இதனால், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான முரண்பாடுகளுக்கிடையில் அகப்பட்டு சிக்கிக் கொள்கின்றனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் சமூகத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள்பற்றி கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி; ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழீழப் புலிகள் துப்பாக்கி முனையில் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கையால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் ஆணைக்குழுவின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (ஆணைக்குழு அறிக்கை 8.167) தொடர்ந்து செல்லும் முஸ்லிம் சமூகத்தின் மனக்குறைகள் தொடர்பாக   ஆவன செய்வதுபற்றி ஆணைக்குழு குறிப்பான சிபார்சுகளைச் செய்துள்ளது.


வெளியேற்றப்பட்டவர்களாகிய முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் முரண்பாட்டின் பின்னர் நல்லிணக்கம் காண்பதில் பெரும் சிக்கல் வாய்ந்தனவாயுள்ளதாக ஆணைக்குழு அவதானித்துள்ளது.


வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நன்கு ஒழுங்குபடுத்தி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முறையில் இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றப்பட்டுள்ளனர். (அறிக்கை 5.137)


இலங்கையின் முரண்பாடுபற்றிய வரலாற்று ஆவணங்களில் முஸ்லிம்கள்  தமது பூர்வீக இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுபற்றி சரியான முறையில் எழுதப்படவில்லையென முஸ்லிம்கள் உணருகின்றனர்.


எல்ரீரீஈ இனரால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செய்திகளை இலங்கை அரசாங்கம் போதியளவு அங்கீகரிக்கவில்லை எனவும் முஸ்லிம்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


உதாரணமாக வடபகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இனச்சுத்திகரிப்புச் செய்து பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பில் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்யுமாறு முஸ்லிம்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.


ஒவ்வொருவருக்கும் தமது பரம்பரை வாழ்விடங்களில் சென்று மீளக்குடியேறுவதற்கான இடம்பெயர் சுதந்திரம் சர்வதேச ரீதியான சட்டங்களின் தத்துவங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றபோதும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் தமது பூர்வீகப் பகுதிகளை விட்டுப் பிரிந்து வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அவர்களது பாரம்பரிய இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு அரசாங்கம் ஒழுங்கு முறையான எந்தத் திட்டங்களையும் மேற்கொள்ளாததால் தற்துணிவில் மீளக் குடியேறும் ஒரு சில முஸ்லிம்களும் பல இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர்.


இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துதல் தொடர்பிலான அரசின் கொள்கையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துதல் தொடர்பில் அவர்களுக்கு உதவுதல்பற்றிய எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை.


பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்காக அவர்களுடனும் அவர்கள் இடம்பெயர்ந்தபின் அங்கு வந்து வாழும் சமூகத்தாருடனும் கலந்தாலோசித்து நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வினையும் அதற்கான அரச கொள்கைகளையும்பற்றிப் பரிசீலிப்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும்.


வெளியேற்றப்பட்டு இன்றுவரை தமது பூர்வீகப் பாரம்பரிய இடங்களை பறிகொடுத்துவிட்டு பரிதவித்திருக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு சீரான அரச கொள்கை தேவை”


என்று தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தேசிய சமாதானப் பேரவையின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கைக்கான ஒரு வழிகாட்டி நூல் ஜுன் 2013)


இவ்வாறான படுகொலை நிகழ்ந்த ஏறாவூர் சுஹதாக்களின் (தியாகிகள்) 33வது வருட நினைவு கூரல் வருடா வருடம் ஓகஸ்ட் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.


அதேபோல 1990 ஓகஸ்ட் 03ஆம் திகதி காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹ_ஸைனியா பள்ளிவாயலில் இரவு நேர இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது எல்ரீரீஈ இனர் துப்பாக்கிச் சூடு நடத்தி முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேரைக் கொலை செய்தனர். அந்தத் தாக்குதலில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.


33 வருடங்கள் கழிந்தாலும் காத்தான்குடி  பள்ளிவாசல் சுவர்களில் முஸ்லிம்களைக் கொன்றொழித்த துப்பாக்கி துளைத்த ஓட்டைகள்  மாறாத வடுக்களாக இன்னமும் காணப்படுகின்றன. அதேபோல ஏறாவூரில் தியாகிகள் பூங்கா யுத்த கால வன்முறை அநீதிகளின் அத்தாட்சியாக இன்றும் விளங்குகின்றன.


கறைபடிந்த வரலாறாகியுள்ள தியாகிகள் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிக்கும் வேளையில்  ஜனாதிபதி சிறுபான்மைச் சமூக அரசியல் கட்சிகளோடு பேசி வருகின்ற இந்தத் தறுவாயிலே முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்; என்று நாம் கருதுகின்றோம்.


எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் வகிபாகம் மிக முக்கியமானது. அதில் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களையும் உள்ளடக்க வேண்டும்.


முஸ்லிம்களைப் புறந்தள்ளி விட்டு எடுக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் நாட்டில் ஒருபோதும்  நிரந்தர அமைதிக்கு வழிகோலப் போவதில்லை. இதனை அரசாங்கமும் அனைத்து சமூக அரசில் தலைமைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப்.


இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்திற்கு நாம் ஒரு மகஜரைச் சமர்ப்பிக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


சுஹதாக்கள் நினைவு கூரல் தொடர்பாக  தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்துல் லத்தீப், “தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரு தரப்பாருக்குமிடையிலான ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இடையில் அகப்பட்ட  முஸ்லிம் சமூகம், எல்ரீரீஈ உட்பட இன்ன பிற தமிழர் உரிமைப் போராட்டக் குழுக்களினால் இலக்கு வைக்கப்பட்டு தமது உயிர்களை மட்டுமல்ல அசையும் அசையாச் சொத்துக்களையும் நிலபுலன்களையும் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் வாழும் உரிமையையும் இழந்து நிற்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்.


தமிழர் உரிமைப் போராட்ட இயக்கங்களினால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களாகிய நாம் 1983ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக பல இழப்புக்களைச் சந்தித்து வந்திருக்கின்றோம். அதில் முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழ்வாதார குடி நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இழப்புகளுக்கெல்லாம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நிவாரணங்களும் கிடைக்கவில்லை.


எனவே, இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு, வாழும் உரிமை என்பன ஏற்றங்கீகரிக்கப்பட வேண்டும்.” என்றார்.


2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி இரவு மூதூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் முஸ்லிம்களை வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து விட்டு எறிகணை வீச்சு நடத்தி 54 முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர் என்று உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள்.


எந்தவகையிலும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் தோன்ற இனியொருவரும் இடமளித்துவிடக் கூடாது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரார்த்தனையாக முன்வைக்கின்றார்கள்.


மனிதத்தை இருத்தி மகிழ்சியைத் தரிசிக்க மனித மனம் கொண்டோருக்கு வரவேற்பளிப்போம் வாருங்கள். என்று அறைகூவல் விடுக்கின்றார் கவிஞரும் ஐக்கிய சமாதான சகவாழ்வு சமூகத்தை விரும்பும் ஆர்வலருமான தற்போது ஜேர்மனில் வசிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர் முகில்வாணன் ராசப்பா அவர்கள்.


அரசியல் வாதிகளின் நடிப்பிலும் ஆயுததாரிகளின் அதிகாரத்திலும், மத வியாபாரிகளின் விளம்பரங்களிலும் மயங்கி, மானிட நேசத்தைச் சிதைத்தவர்களே! உடைந்து போன உறவு மடிந்து போகும் முன்பே ஒட்டி எடுப்போம் வாருங்கள்! அறுந்து போன அன்பு இறந்து போகும் முன்பே முடிச்சுப் போடுவோம் வாருங்கள்.


இனவாத, இயக்கவாத, மதவாதப் பேய்கள் மனிதரை வருத்தி, போரை நடத்தி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தன. அந்தக் கொடுமைகள் இனியும் தொடராமல் இருக்க ஒன்றாய் உழைப்போம் வாருங்கள்! என்ற அவரது அறைகூவல் ஆதங்கமாய் அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.