Header Ads



உரிமை கோரப்படாத உடல்களை இழுத்துச்செல்லும் நாய்கள்


- பு.கஜிந்தன் -


யாழ்ப்பாணம் - ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி எதிர்வரும் 16.08.2023 அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம், கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் இருந்து நேற்றைய தினம் (10.08.2023) சிதைவடைந்த நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் (10.08.2023) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இதன்போது போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள், சத்திர சிகிச்சையின்போது அகற்றப்படும் உடல் உறுப்புக்கள் என்பவை மாநகர சபை ஊடாக கோம்பயன்மணல் மயானத்திலேயே புதைக்கப்பட்டு வந்துள்ளது.


அவ்வாறு புதைக்கப்படுவதை மாநகர சபை பணியாளர்கள் உரிய முறையில் புதைப்பதில்லை, அதனால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் அவற்றை இழுத்துச் செல்வதாகவும், அதனால் அப்பகுதியில் துர்நாற்றங்கள் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.


இந்நிலையிலையே யாழ் ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் , அப்பகுதிக்கான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கோம்பயன்மணல் மயானத்திற்குப் பொறுப்பான உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.