Header Ads



திருமண வீட்டில் ஆடிக் கொண்டிருந்த, திருமணமாகாத யுவதி திடீரென மரணம்


ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.


வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


“என் மகளால் பருப்பு, கொண்டைக்கடலை சாப்பிட முடியாது. அவற்றை சாப்பிடும் போது  ஒவ்வாமை ஏற்படுகிறது. அவற்றை சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால்தான் என் மகள் அந்த உணவை எடுத்துக் கொள்ள முடியாது” என மஞ்சரியின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயார் தெரிவித்தார்.


உயிரிழந்த பெண் ஹொரணையில் உள்ள கோணபொல நிகழ்வு மண்டபத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் திருமண வைபவம் ஒன்றிற்கு வேறு நபர்களுடன் சென்றுள்ளதுடன், அங்கிருந்த குழுவினருடன் உல்லாசமாக நடனமாடியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


உயிரிழந்த பெண் மேலும் இரு யுவதியுடன் நடனமாடிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹொரணையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் அறிவுறுத்தியதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


யுவதியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், யுவதியின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகும், அவர் உண்ட உணவு சுவாச பாதைக்குள் நுழைந்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக ஹொரண ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சுமேதா குணவர்தன தீர்மானித்துள்ளார்.


ஹொரணை ஆதார வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் பணித்த செனவிரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.


அங்கு சாட்சியமளித்த இறந்த யுவதியின் தாயார் மேலும் கூறியதாவது,


“எனது மூத்த மகள் இறந்து விட்டார். அவர் 1998ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 14ஆம் திகதி பிறந்தார். என் மகளுக்கு 25 வயதாகின்றது. என் மகள் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு மேல் வீட்டுக்கு வருவார்.


இறந்த மகளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. திடீரென ஏற்படும். அந்த நேரத்தில் அவர் இன்ஹேலரைப் பயன்படுத்துகிறார். அவர் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. தேவைப்படும் போது இன்ஹேலர்கள் பயன்படுத்துவார்.


என் மகளால் பருப்பு, கொண்டைக்கடலை சாப்பிட முடியாது. அவற்றை உண்ணும்போது ஒவ்வாமை ஏற்படுவதுடன் ஆஸ்துமா ஏற்படுகின்றது. அப்போது மருத்துவரிடம் காண்பித்து மருந்துகளை பெற்றுக் கொள்வோம். மற்ற உணவுகளை சாப்பிடும்போது அவ்வாறு நடக்குமா என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.


மகள் மிகவும் நன்றாக இருந்தார். காலை 9 மணியளவில் மகள் திருமண நிகழ்விற்கு தனியாக புறப்பட்டார். அங்கு சென்ற பிறகு அவரிடம் பேசவில்லை. மாலை 3.45 மணியளவில் எனது மகள் பணிபுரியும் இடத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மகள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.


மருத்துவமனைக்குச் சென்று உடலை அடையாளம் காட்டினேன். மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.