இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை வடக்கு கிழக்குடனும், முஸ்லிம் கட்சிகளுடனும் சுருக்க வேண்டாம்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் தரப்பை சந்திக்கும்போது, முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளை மாத்திரம் சந்தித்து பேச்சு நடத்தாமல், அனைத்து முஸ்லிம் தரப்புகளையும் இணைத்தே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுன்வர வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கு பொறுப்பான உறுப்பினருமான அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை வடக்கு கிழக்குடனும், முஸ்லிம் கட்சிகளுடனும் சுருக்கிக் கொள்ளாது தேசிய ரீதியில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். எனினும், குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் தாமதமாகிறது.
அத்தோடு, முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளை மாத்திரம் அவர் சந்திக்க முற்படுவாரானால் அது ஒரு சார்பு நிலைக்கு கொண்டு செல்லும், குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளைவிட அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டிருக்கிறது. எமக்கே, பெருவாரியாக முஸ்லிம் மக்கள் தமது ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனவே, மக்கள் ஆணையை ஜனாதிபதி மதித்து அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கி சந்திப்புகளை நடத்த வேண்டும்.
மேலும், முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் பெருவாரியாக வடக்கு கிழக்கு மாகாணங்களையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். வடக்கு கிழக்கிற்கு வெளியேதான், மூன்றில் இரண்டு சதவீத முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் அபிப்பிராயம் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் உள்ளீர்க்கப்படாமல் இருந்தால், அது நியாயமான தீர்வாக அமையாது.
வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களை இன வன்முறைகளும், 30 வருடகால யுத்தமும் கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. அதேபோன்று, யுத்த காலத்திலும் சரி, அதற்கு பின்னரும் வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம் மக்கள் பேரினவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டு நசுக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமான இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு இங்குள்ள முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்கின்றனர். அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதிலும் தெற்கு முஸ்லிம்களுக்கு பெரும் சவால் இருக்கின்றது. எனவே, ஜனாதிபதி தெற்கிலுள்ள முஸ்லிம்களை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவதானது பெரும் அநீதியாக அமைந்துவிடும்.
ஆகவே, இந்த விடயத்தை புரிந்துகொண்டு அவர் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.– Vidivelli
Post a Comment