அதிர்ச்சித் தகவல்களை அம்பலப்படுத்திய ஹக்கீம் - மர்மத்தை துலக்குமாறு கோரிக்கை
அண்மையில் நடந்த , பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கான அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனை குழுக் கூட்டத்தின்போதே அவர் மேற்படி வேண்டுகோளை பிரேரணையாகச் சமர்ப்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் 22 ஆம் திகதி அல்லது அண்மித்த நாளொன்றில் அக்குரணை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அவசர தொடர்பு இலக்கமான 118 க்குக் கிடைக்கப்பெற்றதன் நிமித்தம் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்டபடி நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் அவ்வாறான தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை .அதைத்தொடர்ந்து தகவல் வழங்கிய நபர் சம்பந்தமாக விசாரணைகள் நடத்த இரகசிய பொலிசாருக்கு பொலிஸ்மா அதிபர் கட்டளையிட்டதன் பிரகாரம் சாஜித் மௌலவி என்பவர் கைது செய்யப்பட்டதோடு ,முக்கிய சந்தேக நபராகவும் அவர் அடையாளப்படுத்தப்பட்டார்.
"சிறிய முதலீடு ஒன்றினால் அதிகபட்ச இலாபம் அடையும் வழி " என்ற தலைப்பில் வலையத்தளமொன்றைப் பயன்படுத்தி முகநூலில் இயங்கும் திட்டமிட்ட பட்ட ஒரு கும்பலின் வேண்டுகோள் பிரகாரமே மேற்படி குண்டு தாக்குதல் சம்பந்தமான தகவலை 118 ஆம் இலக்கத்துக்கு தொலைபேசி ஊடாக வழங்கியதாகவும், அதற்கு காரணமாகிய விடயம் பூகொடை, தண்டாவெளி, புறக்கோட்டை, கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளைகளிலும், அழுத்கம மக்கள் வங்கி கிளையிலும் மேற்படி முதலீட்டுக்கான பல இலட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டதாகவும் ,பின்னர் அந்த கும்பலின் வங்கி அட்டையும் போலியானதென தெரிய வந்ததால் தன்னால் வைப்பில் இடப்பட்ட பணத்தை மீட்டு தருமாறு கோரிய போது, பணத்தை மீட்டு தர வேண்டுமாயின், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 ஆம் இலக்கத்துக்கு பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் சம்பந்தமான தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதாக கூறியதாகவும், அவ்வாறு செய்யுமாறு தன்னைத் தூண்டியதாகவும் மேற்படி சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிய வருகின்றது.
அவசரத் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு குறித்த தகவலை வழங்கும் படி தலையீடு செய்த தனியார் வங்கிக் கிளைகளின் மற்றும் அழுத்தம மக்கள் வங்கி கிளையின் கணக்கு உரிமையாளர்கள் பற்றி எவ்வித விசாரணைகளும் இன்றி, மேற்படி தகவல் வழங்கிய நபருக்கு எதிராக மாத்திரம் வெவ்வேறு சட்டங்களின் பிரகாரம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தி,நடவடிக்கை மேற்கொள்ள வழிகோலிய காரணம் என்ன?
அவசர தொலைதொடர்பு நிலையத்துக்கு குண்டு தாக்குதல் சம்பந்தமான தகவல் கிடைக்கப்பெற்ற நாளிலும் ,அதனை அண்மித்த நாட்களிலும் இது விடயமாக ஊடகங்களின் பிரசாரத்தினால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் பாரதூரமானது.
ஒருவர் மூலம் இலக்கம் 118 க்குத் தகவலை வழங்க வைத்து, இது சம்பந்தமான ஊடகப் பிரசாரத்தின் ஊடாக விஷமச் செயல்பாட்டு கும்பல் எதிர்பார்த்த விடயம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி, இந்த பாராளுமன்ற குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்தலும் மேலும் இது விடயமாக உண்மை தன்மையை நாட்டுக்கும்,பொது மக்களுக்கும் தெளிவுபடுத்தலும் அவசியமாகும்.
மேலும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நடுநிலையான,பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு ,குறிப்பிட்டுள்ள வங்கி வைப்பாளர்கள் உட்பட பொறுப்பு கூற வேண்டி நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(வங்கிக் கணக்கு இலக்கங்களும் பாராளுமன்ற உ றுப்பினரால் கொடுக்கப்பட்டுள்ளன.)
Post a Comment