செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும்
- பு.கஜிந்தன் -
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் உரிய தரப்பினர்கள் அறிவுறுத்தல்களை செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் ஒரு கப் பால் தேனீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் அரசாங்க அதிபரை செவ்வாய்க்கிழமை (22) தொடர்பு கொண்டு வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிற்றுண்டி உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் உணவகத்தினர் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சார்ந்தவர்களுடனான உயர் மட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் உணவு பண்டங்களின் மாறுபட்ட விலைகள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் உணவக உரிமையாளர்கள் தமக்குள்ளே ஒரு சங்கமாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி விலைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு அறியத் தருமாறு கூறினேன். அதற்கான கால எல்லையும் முடிவடைந்த நிலையில் பதில் தரவில்லை.
நல்லூர் சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரை சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்” என்றார்.
Post a Comment