Header Ads



யாழ்ப்பாணத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுடைய அவதானத்திற்கு


யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.


500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொழிற்சந்தையில் பங்கேற்கவுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று (11.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து குறித்த வேலைவாய்ப்பு தொழிற்சந்தையை ஒழுங்கமைத்துள்ளன.


இந்த தொழிற்சந்தையானது எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் காலை 8.00 மணி முதல் பி.ப 1.00 மணிவரை முன்னெடுக்கவுள்ளது.


இதன்போது கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, சந்தைப்படுத்தல் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணினித்துறை பயிற்சிநெறி, தாதியர் பயிற்சிநெறி, ஆடைத்தொழிற்சாலை, பாதுகாப்புச் சேவை, சுப்பர் மார்க்கெட் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சந்தையில் கலந்துகொள்ளவுள்ளன.


மேலும், கடந்த ஆண்டு இடம்பெற்ற தொழிற்சந்தையில் 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 200 க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளையோருக்கு குறித்த தொழிற்சந்தை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.