இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி..? என்ன படிப்பது.? எங்கே..? எப்படி சேர்வது..?
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவின் இந்த மாபெரும் சாதனைக்கு அச்சாணியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் திகழ்கின்றனர். சந்திரயான் திட்டத்தின் காரணமாக மாணவர்களிடையே விண்வெளி ஆய்வுகள் குறித்த ஆர்வமும், இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுகின்றன.
மாணவர்களிடம் சரியான திட்டமிடல் இருந்தால் இஸ்ரோ விஞ்ஞானிகளாக அவர்கள் ஆக முடியும். இதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? எப்படி திட்டமிடுவது? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இஸ்ரோ விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை முழு ஈடுபாடுடன் படிக்க வேண்டும் என்கிறார் சந்திரயான் 1 திட்டத்தின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
“கணிதம், அறிவியல் பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். கணிதம் தான் அடிப்படை. அல்ஜிப்ரா, ஜியோமெண்ட்ரி ஆகியவை முக்கியமானவை. புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதையும் தாண்டிய வாசிப்பும் அவசியம். கேள்விக்கான பதிலை படிப்பதைவிட நீங்களே கேள்விகளை உருவாக்கி அதற்கு விடைகளை காண வேண்டும். சிறுவயதில் இருந்தே இந்த பழக்கத்தை வசப்படுத்திக் கொள்ள வேண்டும். ” என்று அவர் கூறுகிறார்.
ஒன்றை உருவாக்குவதன் மூலம் மகிழ்ச்சி அடையும் தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதும் விஞ்ஞானி ஆவதற்கான அடிப்படைகளில் ஒன்று என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார்.
“ஓவியர்கள் எப்படி ஓவியத்தை உருவாக்குகிறார்களோ, கவிஞர்கள் எப்படி கவிதையை படைக்கிறார்களோ அதேபோல், விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புபவர்களும் எதையாவது உருவாக்குவதில் ஆர்வம் செலுத்த வேண்டும் ” என்கிறார் அவர்.
உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும்போது அறிவியல் சார்ந்த படப்பிரிவுகளா அல்லது பொறியியல் தொடர்பான பாடப்பிரிவுகளா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
“அறிவியல், பொறியியல் ஆகிய இரண்டு பிரிவுகளின் மூலமும் விஞ்ஞானியாக முடியும். உங்கள் விருப்பம், திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது எந்த பாடப்பிரிவு என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். ஜேஇஇ தேர்வு எழுதி ஐஐடி போன்ற கல்வி நிலையங்களில் பி.இ,பி.டெக் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கலாம். திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலை பல்கலைக்கழகம். இங்கு பி.டெக், எம்.டெக், எம்எஸ்சி, பி.எச்டி போன்ற பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன.
வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதன் மூலமும் உங்களின் விஞ்ஞானி கனவை நினைவாக்க முடியும் என்றாலும் சிறு வயதில் இருந்தே முயற்சிக்கும்போது, ஐஐடி, ஐஐஎஸ்சி ஆகியவற்றில் படிக்கவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துக்கொள்வது நல்லது.
விஞ்ஞானி ஆவதற்கு என்று தனிப்பட்ட படிப்புகள் எதுவும் இல்லை என்று கூறுகிறார் விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன். பிரேக்த்ரோ(Breakthrough) அறிவியல் கழகத்தின் உறுப்பினரான விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கங்களை அளித்து வருகிறார்.
“இஸ்ரோவில் பணியாற்றுபவர்கள் அதற்காகவே தனியாக எந்த படிப்பையும் படிக்கவில்லை. பி.டெக் முடித்துவிட்டு, எம்.டெக் போன்ற படிப்புகளை படித்துவிட்டு அங்கு பணியாற்றுவார்கள். ஒரு திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட பின் அதற்கான படிப்பை அவர்களே சொல்லிக் கொடுப்பார்கள், பயிற்சி அளிப்பார்கள். எனவே, மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பில் நிபுணத்துவத்துடன் இருக்க வேண்டும். கணிதத்தில் வலுவாக இருக்க வேண்டும் ” என்று அவர் கூறுகிறார்.
விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று விரும்பினால் இஸ்ரோ மட்டுமல்லாது ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவிக்கிறார்.
“இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், சாகா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் நியூக்ளியர் பிசிக்ஸ், சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்தமெட்டிக்கல் சயின்ஸ் போன்ற உயர்ந்த ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இங்குதான் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.
விண்வெளியை பற்றி இவர்கள்தான் நிறைய ஆய்வு செய்வார்கள். அறிவியல் குறித்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களும் இவர்கள்தான். எனவே விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் இஸ்ரோவை தாண்டி இதுபோன்ற நிறுவனங்களிலும், தேடலிலும் கவனம் செலுத்த வேண்டும். ”
இஸ்ரோவுக்கு விஞ்ஞானிகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
இஸ்ரோவுக்கு சொந்தமாகவே இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் என்ற பல்கலைக்கழகம் உள்ளதால் இங்கு படிப்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறும் மயில்சாமி அண்ணாதுரை, அதற்கு ஜேஇஇ தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்கிறார்.
“உங்களின் மதிப்பெண்களை பொறுத்தே பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க முடியும். அங்கு படிக்கும்போதே இஸ்ரோ என்றால் என்ன, அதில் என்னென்ன பிரிவுகள் உள்ளன, எத்தகைய பணிகளை அவர்கள் செய்கிறார்கள் போன்றவற்றை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். படிப்பில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பட்டப்படிப்பு முடிந்த பின்னர் இஸ்ரோவுக்கு நீங்கள் தேர்வாகக்கூடும். இஸ்ரோவுக்குள் நுழைவதற்கான சிறந்த வழி இதுதான். ”
இஸ்ரோ சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு தொடர்பான தேர்வுகளை எழுதியும் இஸ்ரோவில் பணியில் சேர முடியும்.
இஸ்ரோவிற்கு தேர்வான பின்னர் எந்த பிரிவில் நீங்கள் பணியமர்த்தபடுகிறீர்களோ அந்த துறையில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கு ஒதுக்கப்படும் பணியை விட கொஞ்சம் கூடுதலாக வேலையை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாமலை ஆலோசனை வழங்குகிறார்.
“உங்களுக்கு ஒதுக்கப்படும் பணியை நீங்கள் சிறப்பாக செய்ய வேண்டும். அதனுடன் கூடுதலாக நீங்கள் வேலை செய்யும்போது தலைமையின் பார்வை உங்கள் மீது விழும். `இவர் சிறப்பாக பணி செய்கிறார், கூடுதல் பொறுப்பை வழங்கலாம்` என்று அவர்கள் கருதுவார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது. எனக்கு ஒதுக்கப்பட்ட துறை நான் விரும்பியதுபோல் இல்லை என்று கூறி சிலர் தேங்கிவிடுவார்கள். எந்த துறையாக இருந்தாலும் அதில் முழு அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணியாற்றுவது இஸ்ரோவில் உங்களை உயரத்துக்கு அழைத்து செல்லும். ”
விஞ்ஞானிக்கான எதிர்கால தேவை எப்படி?
விஞ்ஞானிகளுக்கான தேவை வருங்காலத்தில் அதிகமாகவே இருக்கும் என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.
“இஸ்ரோ மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் தனியார் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். எனவே, விஞ்ஞானிகளுக்கான தேவை இருக்கும். என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும். வேலை செய்வது என்பதை தாண்டி சுயமாக தொழில் தொடங்குவது, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவை மூலமும் விஞ்ஞானிகள் முன்னேற்றம் அடைய முடியும். ” BBC
Post a Comment