ரணில், நாமல் , அமைச்சர்கள் அவர்களது மனைவிகளது எதிர்காலம் ஆபத்தில் உள்ளது
சிலர் கூறுவது போல் தாம் ஒரு சதவீதமேனும் மக்களை ஏமாற்றியிருந்தால், தம்மை சிறையில் அடைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜே.வி.பி கடல் கடந்த கணக்குகளை பராமரித்து வருவதாக சிலர் கூறுவதாகவும், அத்துடன் தம்மை குறைந்தபட்சம் ஒரு நாளாவது சிறையில் அடைக்க வேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளதாகவும் அனுரகுமார நினைவுப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் “தாமோ தமது கட்சியை சேர்ந்த எவருமோ ஒரு சதவீதமேனும் மக்களை ஏமாற்றியதில்லை, அப்படிச் செய்திருந்தால், இன்று அரசியல் செய்ய முடியாது. எதிர்காலத்தில் ஜே.வி.பிக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுக்கள், வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் சேறு பூசுவதை எதிர்பார்க்கலாம்” என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டின் அரசியல் பாதையை மாற்றும் ஜே.வி.பியின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை “நாட்டில் இதுவரை இரண்டு அரசியல் முகாம்களுக்குள் மட்டுமே அதிகாரப் பரிமாற்றம் நடந்தது. இப்போது இரண்டு பிரதான முகாம்களும் ஒரே பக்கம் இருப்பதால் அதிகாரம் கடத்தப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க மட்டுமல்ல நாமல் ராஜபக்ச, அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் போன்ற சகல அரசியல்வாதிகளின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது” என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
Post a Comment