Header Ads



தேங்காய் பறிப்பவர் மரணம் - முழு கிராமமும் சோகம்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


தென்னை மரம் ஏறி தேங்காய் பறித்த கூலித் தொழிலாளியான குடும்பஸ்தர் பிடி நழுவி மரத்திலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் இளநிலா குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


ஞாயிறு(06)  மாலை   இடம்பெற்ற இச்சம்பவத்தில் முழங்காவில் அன்புபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  46 வயதுடைய குணராசா ஞானரூபன் என்பவர் மரணடைந்துள்ளார்.


சம்பவதினத்தன்று கூலிக்குத் தேங்காய் பறிப்பதற்காக இளநிலா குடியிருப்புப் பகுதியிலுள்ள தென்னை மரத்தில் இவர் ஏறிய பொழுது தென்னை மரத்தில் குளவிக் கூடுகளை அவதானித்துள்ளார்.


குளவிக் கூடுகளைக் கண்ட மாத்திரத்தில் சடுதியாக இறங்க முற்பட்ட அவர் தென்னை மரத்திலிருந்து பிடி நழுவி தென்னை மரத்தின் கீழே பூமரக்கன்றில் விழுந்துள்ளார். அந்நேரம் கீழே இருந்த பூக்கன்றின் தடி இவரின் விலாப் பக்கத்தைத் துளைத்துக் கொண்டு உடலில் புகுந்துள்ளது.


அதனால், அலறியவரின் குரல் கேட்டு உதவிக்கு விரைந்தோர் ஓடிச்சென்று அவரை முழங்காவில் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். எனினும் அவர் அதிக இரத்தப் போக்கு காரணமாக ஏற்கெனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சடலம் உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பரிசோதனைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களால் செவ்வாய்க்கிழமை 08.08.2023 அடக்கம் செய்யப்பட்டது.


கிராமத்திலுள்ள அனைவரோடும் மிகவும் இங்கிதமாகப் பழகும் பண்பாடு கொண்ட இந்த குடும்பஸ்தரின் மரணம் அந்தக் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.