நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய், மருந்தை வழங்கிய சம்பவம்
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோயாளிகளுக்குரிய மருந்துகளை தனியார் மருந்தகம் வழங்கியதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இங்கிரிய மேல் ஊராகல பிரதேசத்தில் வசித்து வந்த அறுபத்திரண்டு வயதான திருமதி பி.எம்.சோமாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்படி, கடந்த 31ம் திகதி அவரது கணவர் மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை எடுத்து வர நோயறிதல் அறிக்கைகளுடன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவமனையில் இருந்து சில மருந்துகளை கொடுத்துவிட்டு,மருத்துவமனையில் இல்லாத சில மருந்துகளை தனியார் மருந்தகத்தில் வாங்கச் சொன்னார்கள்.
அதன்படி இங்கிரியில் உள்ள தனியார் மருந்தகத்தில் பெறப்பட்ட மருந்துகளை சுமார் ஒரு வார காலம் பயன்படுத்திய போது திருமதி சோமாவதி சில சிரமங்களை அனுபவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் டபிள்யூ. லீலாரத்ன,இது தொடர்பில் தெரிவிக்கையில்,
"வாய் புண்ணாகி, தண்ணீர் கூட குடிக்க முடியல. அதுக்கு அப்புறம் வயிறு வீக்கம், சிறுநீர் கழிக்க சிரமம், வயிற்றுளைவு வந்துடுச்சு. எல்லாம் அல்சர் ஆகி உடம்பு வீக்கமாயிடுச்சு."என்றார்.
கடந்த 10ஆம் திகதி திடீரென சுகவீனமடைந்த திருமதி சோமாவதியை உடனடியாக வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில், அவரது நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டது.
"அவருக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்று தாதி சரிபார்த்துள்ளார். அந்த நேரத்தில்தான் தவறான மருந்தை மருத்துவமனை அடையாளம் கண்டுள்ளது."
அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த திருமதி பி.எம்.சோமாவதியின் மருமகள்,
"அம்மாவுக்கு புற்று நோய்க்குரிய மருந்து தனியார் மருந்தகத்தில் கொடுக்கப்பட்டது. அந்த மருந்தைக் குடித்து ஒரு வாரமாகி விட்டது. அந்த மருந்தின் விஷத்தால் இன்று அவரைப் பிரிந்து விட்டோம்."என்றார்.
திருமதி சோமாவதியின் உறவினர்கள் இங்கிரிய காவல்துறையில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment