Header Ads



மாபெரும் வெற்றிகளுக்குப் பின்னால், இருக்கும் எளிய மனிதர்கள்


அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலக கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவி வெள்ளி பதக்கத்தை வென்ற தருணம் மிகவும் கனமானது.


சென்னை பாடி பகுதியில் அவரது வீட்டு கதவு உள்புறத்தில் தாளிட்டிருந்தது. போட்டி முடிவுகள் வெளியாகி சுமார் 15 நிமிடங்கள், பிபிசி தமிழ் உள்பட கூட்டம் கூட்டமாக ஊடகத்தினர் குவிந்திருந்தனர். பிரக்ஞானந்தாவின் குடும்பத்தினரின் வெளிப்பாடுகளை அறிய காத்திருந்தனர்.


சுற்றிலும் மௌனம். ஒரு சிலர் கதவை தட்டி முயற்சித்தனர். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவின் அலைபேசி எடுக்கப்படவில்லை. 20 நிமிடங்கள் கழித்து, பிரக்ஞானந்தாவின் தந்தை மற்றும் சகோதரி வைஷாலி கதவை திறந்தனர்.


இருவர் முகத்திலும் பளிச் புன்னகை. ''பிரக் குட்டியின் அழைப்புக்காக காத்திருந்தோம். அதனால்தான் நாங்கள் திறக்கவில்லை. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எங்கள் குட்டி கடுமையான சவாலாக இருந்தான். வெள்ளி பதக்கத்தை அள்ளி வந்திருக்கிறான்,''என்றார் சகோதரி வைஷாலி.


வைஷாலியும் செஸ் வீரர் மற்றும் பிரக்ஞானந்தா பங்குபெற்ற அதே பிடே உலக கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவில் இடம்பெற்றிருந்தார். மூன்று சுற்றுகள் வரை போட்டியிட்டு பின்னர் வெளியேறியவர் என்பதால், பிரக்ஞானந்தாவை நகர்வுகளை நுணுக்கமாக கண்காணித்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்.


''தொடர்ந்து 20 நாட்களாக உலக கோப்பை போட்டியில் பிரக் விளையாடிக்கொண்டிருந்தான். உலகக்கோப்பை போட்டிக்கு வருவதற்கு முன்னர் ஹங்கேரியில் விளையாடினான். அதாவது ஒரு மாதமாக தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டிருந்தான். சிறு அயர்வு அவனுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த தோல்வி அவனை மேலும் உற்சாகப்படுத்தும் என்றுதான் நம்புகிறோம். அவன் செஸ் விளையாட்டில் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. செஸ் விளையாட்டில் உலக அளவில் தன்னுடைய முதல் நகர்வை அவன் தொடங்கியிருக்கிறான்,'' என்றார் வைஷாலி.


தொடர்ந்து பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு பேசுகையில், எந்தவித பதற்றமும் அவரிடம் வெளிப்படவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். செஸ் விளையாட்டைப் பற்றி ஆரம்பத்தில் எதுவும் தெரியாது என்றாலும், வைஷாலியும், பிரக்ஞானந்தாவும் தொடர்ந்து செஸ் போட்டிகளில் தேசிய அளவில் மற்றும் உலக அளவில் பங்குபெற தொடங்கியதால், ரமேஷ் பாபு செஸ் ரசிகர் ஆகியிருந்தார்.


வைஷாலியும் செஸ் வீரர் மற்றும் பிரக்ஞானந்தா பங்குபெற்ற அதே பிடே உலக கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவில் இடம்பெற்றிருந்தார்.


போட்டியின் இறுதிக் கட்டம் பற்றி பேசிய அவர், ''கடைசி இரண்டு நாட்களில் போட்டி பல முறை ட்ரா ஆனது. மேக்னஸ் கார்ல்சன் இறுதிப் போட்டிக்கு முன்னர் பேசியபோது, பிரக்ஞானந்தாவுடன் விளையாடுவதால், பொறுத்திருந்துதான் விளையாட போவதாக பேசியிருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து செஸ் உலகக்கோப்பை போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்குபெற்ற பின்னர், தற்போது எங்கள் பிரக்ஞானந்தா அதே இடத்திற்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி,''என்றார் ரமேஷ் பாபு.


பிரக்ஞானந்தா தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வார் என்று கேட்டபோது, மெலிதான புன்னகையை அவர் உதிர்த்தார். ''பிரக் எப்போதும் செஸ் விளையாடுவதை விருப்பத்துடன் செய்வான். வெற்றி, தோல்வி என்பது அவனை பெரிதும் பாதித்ததில்லை. இதுவரை நாங்கள் அவனை அப்படிதான் பார்த்திருக்கிறோம். விளையாட்டில் அடுத்த முறை தன்னை எப்படி மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவன் இருந்திருக்கிறான். அதனால், இதனை பாடமாகதான் அவன் எடுத்துக்கொள்வான்,''என்கிறார் ரமேஷ் பாபு.


பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் என இருவரும் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு உருவபொம்பையை காண்பித்தார் தந்தை ரமேஷ் பாபு. ''இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவருமே செஸ் விளையாட்டின் மீது தீராத விருப்பம் கொண்டவர்கள். அதனால், ஒருவரை ஒருவர் வெற்றிகொண்டார் என்பதைவிட, செஸ் விளையாட்டு இருவரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்,''என்கிறார் அவர்.


சிறு வயதில் வைஷாலி டிவி பார்ப்பதை குறைப்பதற்காக செஸ் வகுப்பில் சேர்த்திருந்தார். வைஷாலியை பார்த்து, விளையாட தொடங்கிய பிரக்ஞானந்தா, தற்போது சர்வதேச அரங்கில் போட்டியில் பங்குபெறும் நிலைக்கு சென்றுள்ளது தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார் ரமேஷ் பாபு.



பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் என இருவரும் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு உருவபொம்பையை காண்பித்தார் தந்தை ரமேஷ் பாபு.


கூட்டுறவு வங்கி அதிகாரியான ரமேஷ் பாபு தனது சொந்தங்கள், நண்பர்கள், ஊடகத்தினரின் அழைப்புகள் என தொடர்ந்து வந்த அலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் சோர்ந்துபோகவில்லை.


பிரக்ஞானந்தாவின் எளிமையான வீட்டில், இரண்டு அறைகள், ஒரு சமையல் அறை மற்றும் ஒரு சிறிய ஹால். அந்த ஹாலில் பாதி இடத்தை கோப்பைகள் அடங்கிய ஷோகேஸ் அடைத்துக்கொண்டிருந்தது. வைஷாலியும், பிரக்ஞானந்தாவும் மாறி மாறி பெற்ற பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் எல்லா ரேக்களிலும் தேங்கி, வீட்டை நிறைந்திருந்தன.


அடுத்ததாக பிரக்ஞானந்தாவின் இல்லத்தில் மிகவும் நெகிழ்ச்சியான மனுஷியாக இருந்தவர் பிரக்ஞானந்தாவின் பாட்டி மதுரவள்ளி. ''என் பேரனுக்காக எத்தனையோ பேர் வாழ்த்துகள் சொல்கிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் என் பேரனுக்காக பிரார்த்தனை செய்தார்கள் என்று மொபைல் போனில் காட்டினார்கள். எனக்கு ரொம்ப சந்தோசம். அவனுக்கு நடந்தது எல்லாமே நன்மைதான். எங்க குழந்தைகளை நல்ல வளர்த்திட்டோம்னு நிறைவா இருக்கு,''என கண்ணீர் பொங்க பேசினார்.


பிரக்ஞானந்தா இந்தியாவில் இருந்து கிளம்பியது முதல் இறுதிச்சுற்றில் பங்குபெற்றதுவரை அவருடன் கூடவே இருந்தது அவரது தாயார் நாகலட்சுமி. சமூகவலைத்தளங்களில் அவரது படங்கள் வைரலாக பரவின. சேலை கட்டிய ஒடிசலான தோற்றம் கொண்ட அந்த பெண்மணி, சுவற்றில் தன்னை பதித்துக்கொண்டு நிற்கிறார். இறுதி போட்டியில் முடிவு தெரிந்ததும், அவர் தனது மகனை அரவணைத்துக்கொண்டார்.


"எங்க குழந்தைகளை நல்ல வளர்த்திட்டோம்னு நிறைவா இருக்கு,''என கண்ணீர் பொங்கினார் பாட்டி மதுரவள்ளி.


அம்மா நாகலட்சுமி பற்றி பேசிய வைஷாலி, ''நானும், பிரக்கும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் அம்மா கடுமையான உழைப்பாளி. நாங்கள் போட்டியில் பங்குபெற, ஊட்டச்சத்தான உணவு தேவை. நாங்கள் கடல் கடந்து செல்லும் தேசத்தில் என்ன கிடைக்கும், சரியான உணவு கிடைக்குமா என்று யோசித்ததில்லை. எங்கள் வீட்டில் சாப்பிடுவது போல, பல பொருட்களை தயார் செய்து, எங்களை அம்மா கவனித்து கொள்வார். அப்பா போலியோ பாதிப்பால் முடங்கவில்லை. எங்கள் பயணத்திற்காக விமான டிக்கட், எந்த விடுதியில் தங்கினால், குறைந்தபட்ச கட்டணம் அதேநேரம் எங்கு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று தேடிதேடி பதிவு செய்வார். நாங்கள் விளையாடுவதற்கு எங்கள் பெற்றோரின் உறுதிதான் காரணம்,''என்கிறார் வைஷாலி.


நாம் பிரக்ஞானந்தாவின் வீட்டில் செலவிட்ட நேரத்தில், ரமேஷ் பாபு மற்றும் வைஷாலியிடம் பலர் நேரடியாக வந்து வாழ்த்து சொல்வதை பார்த்தோம். அண்டை வீட்டார் பலரும் குழந்தைகளுடன் வந்து வாழ்த்திவிட்டுப் போனார்கள்.


பிரக்ஞானந்தாவின் வீட்டு ஹாலில் பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் அடிக்கடி விளையாடும் செஸ் போர்டு இருந்தது. உலகக்கோப்பை போட்டி முடிந்து, ஜெர்மனியில் நடைபெறும் மற்றொரு சர்வதேச ரேபிட் போட்டியில் பங்குபெற பிரக்ஞானந்தா கிளம்பியிருக்கிறார். ஆனால் அவர் ஊர் திரும்பியதும், பழைய செஸ் போர்டில் அவருடன் விளையாட காத்திருக்கிறார் வைஷாலி. BBC

No comments

Powered by Blogger.