Header Ads



நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறேன் - ரணில்


நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப்  போக்குகளைப் போன்றே  காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை பூஸ்ஸ  கடற்படை உயர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. 


இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தற்போதைய சவால்களை ஆயுதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உயர் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட பாதுகாப்பு படையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன் மற்றும் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், புதிய தேசிய பாதுகாப்பு மீளாய்வில் இதனை உள்ளடக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பூஸ்ஸா கடற்படை பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதி ரியர் அத்மிரல் தம்மிக குமார ஆகியோர் வரவேற்றனர்.


அதனைத் தொடர்ந்து  ஜனாதிபதிக்கு விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி அணிவகுப்பை பார்வையிட்டார்.


இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி  வர்ணம்  சூட்டியதுடன், வர்ணக் கொடிகளும் ஜனாதியால் கையளிக்கப்பட்டன.


அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வர்ணமயமான கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார் .


மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:


“சுதந்திரத்திற்கு முன், ரோயல் கடற்படையின் தொண்டர் சேவையாக ஆரம்பிக்கப்பட்ட கடற்படைக்கு  இரண்டாம் உலகப் போரின் போது கொழும்பு துறைமுகத்தை பாதுகாக்கும் பணி  ஒப்படைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நிரந்தர கடற்படை உருவாக்கப்பட்டது. இன்று நீங்கள் அத்தகைய வரலாற்றைக் கொண்ட சிறப்புவாய்ந்த இராணுவக் குழுவில் இணைகிறீர்கள்.


ஆரம்பத்தில் எங்களுக்கு கடல்சார்ந்த அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை. இந்து சமுத்திரம் முழுவதுமாக பிரிட்டிஷ் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் கடற்படை இந்து சமுத்திரத்தை விட்டு வெளியேறிய பிறகு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் 1983இற்குப்  பிறகு நாம் ஒரு போரை எதிர்கொள்ள நேரிட்டது. அன்று எல்.ரீ.ரீ.ஈ  அமைப்பு  படகுகள்  மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியது. கடல் அவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கவில்லை. ஆனால் எங்களுக்கு  கடலைப் பற்றி கற்க வேண்டியிருந்தது. சில காலத்திற்குப் பிறகு, எமது பாதுகாப்புப் படைகளின் அர்ப்பணிப்பும் திறனும் காரணமாக  கடற்புலிகள்  அமைப்பை ஒழிக்க முடிந்தது. நமது கடற்படைக்கு  இத்தகைய போர்களை செய்ய திறமையிருப்பதாக அங்கீகாரம் கிடைத்தது. 


சோமாலியாவில் இத்தகைய குழுக்களைக் கட்டுப்படுத்த, உலகின் பல பிரதான கடற்படைகள் தேவைப்பட்டன. ஆனால் இதை எங்களால் தனியாக செய்ய முடிந்தது. யுத்தம் நிறைவடைந்து தற்போது 14 வருடங்கள் கடந்துள்ளன. இப்போது நாம் நிகழ்காலம் குறித்தும்  எதிர்காலம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.


எமக்கு 2009 அல்லது 1983 இல் காணப்பட்ட  நிலைமை  இன்று மாறியுள்ளது.  உலக வல்லரசுகளின் போராட்டம் இந்து சமுத்திரதில் மையம் கொண்டுள்ளதால் அதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒருபுறம், பசிபிக் சமுத்திரத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகாரப் போட்டி உள்ளது. மறுபுறம், உக்ரைன் மற்றும் மேற்கு ரஷ்யா இடையே அதிகாரப் போட்டி உள்ளது. அந்த அதிகாரப் போராட்டமானது எமது இராணுவம் பணியாற்றும் மாலி நாட்டின் அண்டை நாடான  ஆபிரிக்காவின் நைஜர் நாட்டையும் எட்டியுள்ளது.


உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதை இந்து சமுத்திரத்தில் தான் அமைந்துள்ளது. இலங்கை அதில் ஒரு முக்கிய இடத்தைப் வகிக்கிறது. இந்த அதிகாரப் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல், பக்கசார்பின்றி முன்னேற வேண்டும். அங்கு நமது பாதுகாப்பு தொடர்பில்  கவனம் செலுத்த வேண்டும்.


பல நாடுகள்  உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.  இதற்கு நாமும் தயாராக வேண்டும். இன்று நாம் உலக அரசியலில் தொடர்புபட்டுள்ளோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.அவ்வாறானால்,எமது நாட்டின் எதிர்கால தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய நான் எதிர்பார்க்கிறேன். 


ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மீளாய்வை செய்து வருகின்றன.  நாட்டிற்கு எத்தகைய  அச்சுறுத்தல்கள் உள்ளன? நாட்டின் வளங்கள் என்ன?அவற்றை  எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் மீளாய்வு நடத்துகின்றனர். அதற்கேற்ப அவர்களது இராணுவ பலத்தையும் பொருளாதார பலத்தையும் ஒப்பிட்டு பார்த்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நாமும் அது குறித்து  கவனம் செலுத்த வேண்டும்.


இன்று, டோனர்  போன்ற பல நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. இந்து சமுத்திரத்தில்   நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, நமது கடல் பாதுகாப்புக்காக, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


மேலும், விமானங்கள் மற்றும் டோனர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படும்  என்று எம்மால் கூற முடியாது. இன்றைய காலத்தை விட எதிர்காலத்தில் அதிக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும்.


நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, துரித  வளர்ச்சியை எட்ட முடிந்தால், அதற்குத் தேவையான பணத்தை செலவிட முடியும். வறிய நாடாக எம்மால் இவற்றைச் செய்வது கடினம். எதிர்கால சவால்களை கடந்த காலத்திலிருந்து எதிர்கொள்ள முடியாது.


எனவே, இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறேன். புதிய பொருளாதாரப் போக்குகள் மற்றும் காலநிலை  மாற்றம் குறித்து கவனம் செலுத்தி இந்த மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அறிக்கை கிடைத்த பிறகு, தேசிய பாதுகாப்பு சபையின்  நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.


“Defense 2030” எனும் இந்த அறிக்கையை தயாரிக்க மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்கவின் தலைமையில்  மீளாய்வுக் குழு  நியமிக்கப்பட்டுள்ளது.


அதற்காக தனியான அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால சவால்களை ஆயுதங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. மேலும், அதை பணத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தவும் முடியாது.


அதேபோன்று,உங்களின் நலன்புரி குறித்தும் இராணுவ சேவைக்குப் பிறகு உங்களின் நலன் குறித்தும்  நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.  புதிய பாதுகாப்பு மீளாய்வில் அதனை இணைப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 


இந்த நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தென் மாகாண ஆளுநர் விலி கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற ) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடற்படைப் பதவிநிலைப் பிரதானி ரியர் அத்மிரல் ஜெயந்த குலரத்ன, தொண்டர் படையணியின் பிரதானி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

19-08-2023

No comments

Powered by Blogger.