Header Ads



தம்பதிகளின் படுகொலைக்கு காரணம் என்ன..? இன்னும் சிலரை பிடிக்க துரித நடவடிக்கை


வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது வீட்டுக்குள் புகுந்த 8 பேர், அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.


அங்கு வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் தம்பதி உயிரிழந்தனர்.


பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதேவேளை, வவுனியா பொலிஸார் மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 05 பேர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 03 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவினரால் 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


அதன்படி நேற்று பிற்பகல் வவுனியா வைரவ புளியங்குளம் குளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சில வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இச்சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு அந்த பகுதியில் உள்ள திருமணமான கிராம சேவகர் ஒருவருடன் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.


இந்நிலையில், விசாரணையில், கிராம சேவகருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு திருமணமான நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


மேலும் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு இந்த கொலையை செய்ய ஒப்பந்தம் கிடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.