Header Ads



அரசியல்வாதிகளிடம் அதிகளவு, ஆயுதங்கள் இருப்பது அம்பலம்


நாடாளுமன்றத்தில் உள்ள அதிகளவான உறுப்பினர்களிடம் தற்போதும் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட ஆயுதங்களை குறித்த தரப்பினர் இதுவரை திருப்பித்தரவில்லை என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர் , சில அரசியல் கட்சிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கூட வழங்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்ட சில தரப்பினர் தற்போது உயிருடன் இல்லை எனவும் இதனால் அவர்களுக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந் நிலையில் ஆயுதங்களை தமது கையிருப்பில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டுமென பிரமித்த பண்டார தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.


குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் வரை அரசியல்வாதிகளிடம் உள்ள ஆயுதங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை மா அதிபர், ஏனைய பொறுப்பதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு பிரிவினருக்கு தான் பணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதேவேளை, இலங்கையின் ஆயுத கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர், குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.