Header Ads



நவம்பர் 6 வரை விளக்கமறியல் , நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.


வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து வழக்கு ஒன்றின் சாட்சியத்தை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் ஜே. ஸ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.


இதன்படி, கடந்த மார்ச் 17 ஆம் திகதி ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டிருந்தார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி, சந்தேகத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பதிவுசெய்யப்படாத ஜீப்பில் மதவாச்சியிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணித்தபோது, ​​செட்டிகுளம் வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் அலவ்வ, நவத்தல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான உத்தியோகத்தர் ஜி.உதய ஜயமினி புஷ்பகுமார என்பவர் உயிரிழந்தார்.


உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே காரை செலுத்திச் சென்றதாக தெரிவித்து விசாரணைகள் முடிந்ததாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.


எவ்வாறாயினும், விபத்து தொடர்பில் உயிரிழந்த சார்ஜன்ட் மனைவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா விபத்தை ஏற்படுத்தியமை தெரியவந்தது.


இதனையடுத்து சட்டமா அதிபர் வவுனியா மேல் நீதிமன்றில் 11 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்திருந்தார். இது குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.


எவ்வாறாயினும், விசாரணையில் சாட்சியமளித்த இருவருக்கு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்தது தொடர்பிலான விசாரணை அறிக்கை மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.


ஜே. ஸ்ரீ ரங்கா, 2011 ஆம் ஆண்டு வவுனியா முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட 6 பேருக்கு எதிராக விபத்தை மறைத்தமை மற்றும் குற்றவாளி தப்பிக்க உதவியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் ஆஜராகி அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.


சம்பந்தப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிபதி செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் சுகத் ரொஷான் சஞ்சீவவுக்கு தண்டனை விதித்தார்.


இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஸ்ரீ ரங்காவை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.


எனினும், சாட்சியத்தை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் ஜே. ஸ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.