இம்ரானின் அரசியல் வாழ்வு முடியப் போகிறதா..? தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இம்ரான் கான் மீதான வழக்கின் தீர்ப்பு காரணமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று இம்ரான் கானின் கட்சியான தெக்ரீக்-இ-இன்சாப் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வரலாற்றில் மிக மோசமான இந்த விசாரணையில், ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி நீதியை கொலை செய்ய முயற்சித்துள்ளார், ஒரு குறிப்பிட்ட அஜண்டாவின் கீழ் வழக்கில் உள்ள உண்மைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
தோஷகானா என்பது அரசு கருவூலம். பிரதமர், அதிபர் அல்லது பிற முக்கியத் தலைவர்கள் விஜயத்தின்போது அளிக்கப்படும் பெறுமதிமிக்க பரிசுகள் இங்கு வைக்கப்படுகின்றன.
எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்படும் பரிசுகள், திரும்பி வரும்போது அவை தோஷகானில் வைக்கப்படும்.
தோஷகானில் வைக்கப்படும் பொருட்கள் நினைவுப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
பாகிஸ்தானில், இத்தகைய பரிசுப் பொருளின் மதிப்பு 30,000க்கும் குறைவாக இருந்தால், அதை சம்பந்தப்பட்டவர் இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு மேல் இருந்தால், அந்த விலையில் 50 சதவீதத்தை டெபாசிட் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
2020ஆம் ஆண்டுக்கு முன்பு, பொருட்களின் அசல் விலையில் 20 சதவீதம் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்தப் பரிசுகளில் பொதுவாக விலை உயர்ந்த கடிகாரங்கள், தங்கம், வைர நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், நினைவுப்பொருட்கள், வைரம் பதித்த பேனாக்கள், மண், பீங்கான் போன்றவற்றில் ஆன பாண்டங்கள், தரை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.
உண்மையில், இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வாங்கிய பரிசுப் பொருட்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே இம்ரான் கான், தோஷகானாவில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்து பல பரிசுகளை வாங்கியுள்ளார். இதில் சுமார் 85 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 60 லட்சம் மதிப்புள்ள கஃப், 87 லட்சம் மதிப்புள்ள பேனா, மோதிரம் ஆகியவை அடங்கும்.
இதேபோல் தோஷகானா நிறுவனத்திடம் இருந்து 7.5 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் 15 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தையும் 2.5 லட்சத்திற்கு இம்ரான் கான் வாங்கியுள்ளார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், இம்ரான் கான், 49 லட்சம் மதிப்புள்ள கஃப்லிங்க் மற்றும் கடிகாரங்கள் அடங்கிய பெட்டியை பாதி விலையில் வாங்கினார்.
இதுதவிர, பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு விற்பதற்கும் 2 கோடி ரூபாய்க்கு பதிலாக 80 லட்சம் ரூபாய் மட்டுமே தோஷகானாவிடம் வழங்கப்பட்டது.
ஆவணங்களின்படி, விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கைக்கடிகாரமும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் முதல் சௌதி அரேபிய பயணத்தின்போது பரிசாக இந்தக் கடிகாரம் வழங்கப்பட்டது.
இதன் விலை 85 கோடி எனக் கூறப்படுகிறது. இம்ரான் கான் இந்தக் கடிகாரத்தை 20 சதவீத விலை கொடுத்து வாங்கியுள்ளார். bbc
Post a Comment