Header Ads



56 மதகுருமார்கள் சிறையில், 29 பேர் பிக்குகள் - 2 மௌலவிகள் - குற்றங்களின் விபரம் இணைப்பு


கொலை, பாலியல் துஷ்பிரயோகம், பண மோசடி மற்றும் புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 56 மதகுருமார்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இவ்வாறு சிறையில் இருப்பவர்களின் 34 பேர் தண்டனை பெற்றவர்கள் எனவும் அவர்களின் 29 பேர் பௌத்த மதகுருமார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், மூன்று இந்து மதகுருமார்களும் இரண்டு இஸ்லாமிய மதகுருமார்களும் இவ்வாறு தண்டனை அனுபவித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 19 பௌத்த மதகுருமார்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதுடன், குறித்த சுற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 4 பௌத்த மதகுருமார்களும், இந்து மதகுரு ஒருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் மூன்று பௌத்த மதகுருமார்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், குறித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு பௌத்த மதகுரு சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேலும் கொலைக்கு குற்றத்திற்காக இரண்டு பௌத்த மதகுருமார்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதுடன், குறித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு பௌத்த மதகுரு சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இரண்டு பௌத்த மதகுருமார்கள் கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றத்திற்காகவும், ஒரு பௌத்த மதகுரு சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதற்காவும் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


பண மோசடி குற்றச்சாட்டில் இரண்டு பௌத்த மதகுருமார்கள் மற்றும் இந்து மதகுரு ஒருவருக்கும், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூன்று பௌத்த மதகுருமார்களுக்கும் தண்டனை வழங்கப்படவுள்ளதாக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.