Header Ads



48 மணித்தியாலங்களில் 14 ஆமைகள் இறந்த நிலையில் மீட்பு - நீதவானின் உத்தரவு


கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கு கடற்கரையில் 14 ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.


நேற்றும் (22) இன்றும் (23) வெள்ளவத்தையில் இருந்து காலி முகத்துவாரம் வரையான கரையோரத்திலும் நீர்கொழும்பு - சரக்குவ, பமுனுகம, கல்கிசை கரையோரங்களிலும் இறந்த நிலையில் கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்னன.


வெள்ளவத்தை தொடக்கம் காலி முகத்துவாரம் வரையான கடற்கரையில் நேற்று 7-க்கும் மேற்பட்ட ஆமைகளின் சடலங்கள் குவிந்திருந்தன.


இன்று காலை நீர்கொழும்பு - சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 05 கடலாமைகள் கரையொதுங்கின.


பமுனுகம கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் இரண்டு கடலாமைகள் கரையொதுங்கியிருந்ததுடன், கல்கிசையில் மற்றுமொரு கடலாமையும் இறந்த நிலையில் கரையொதுங்கியது.

 

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், 


காலி முகத்திடலில் கரையொதுங்கிய 04 கடலாமைகளின் உடல்களையும் மன்றில் முன்வைத்தனர்.


பிரேத பரிசோதனையை நடத்தி, கடலாமைகளின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறும் அது தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோட்டை நீதவான் திலின கமகே கால்நடை வைத்தியருக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.


இதனிடையே, 03 நாட்களாக சிலாபத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய் படலம் மிதந்தமையை காண முடிந்தது.


இதனால் குறைந்தளவான மீன்களே கிடைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.


கடலாமைகள் கண்டெடுக்கப்பட்ட கடற்கரையிலிருந்து 20 கடல்மைல் தொலைவிலேயே தீப்பற்றிய XPress Pearl கப்பலின் சிதைவுகள் காணப்படுகின்றன.

No comments

Powered by Blogger.