Header Ads



121 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நினைவாக அமைதிப் பேரணிக்கு அழைப்பு




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டோரை நினைவு கூரும் வருடாந்த பிரார்த்தனை நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 12.08.2023 இடம்பெறும் அன்றைய தினம் கடைகளைப் பூட்டி அமைதிப் பேரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.


ஏறாவூர் நகரிலும் அதனை அண்டியுள்ள கிராமங்களிலும் நித்திரையிலிருந்தபோது பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீவைத்தும் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்த வருடாந்த பிரார்த்தனை கவன ஈர்ப்பு நிகழ்வு இடம்பெற்று வருகிறது.


1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி நடுநிசிக்குச் சற்று முன்னராக ஏறாவூருக்குள் புகுந்த ஆயுதக் கும்பலால் ஆற்றங்கரை, சுரட்டையன்குடா, ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடா வீதி, ஐயன்கேணி, சத்தாம்ஹ{ஸைன் ஆகிய கிராமங்களில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.


கொல்லப்பட்டவர்கள் ஏறாவூர் காட்டு பள்ளிவாசலின் புறம்பான பகுதியொன்றில் சுஹதாக்கள் (தியாகிகள்) பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.


இம்முறை இடம்பெறவுள்ள நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் அப்துல் லத்தீப் படுகொலை நினைவு கூரல் பேரணி இடம்பெறும் அந்த சந்தர்ப்பத்தில் பிரதேச செயலாளர் ஊடாக நாம் ஜனாதிபதிக்கும் சர்வதேசத்திற்கும் மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளோம்.


அதில் தற்போது ஜனாதிபதி சிறுபான்மைச் சமூக அரசியல் கட்சிகளோடு பேசி வருகின்ற இந்தத் தறுவாயிலே முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்; என்று நாம் கருதுகின்றோம். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் வகிபாகம் மிக முக்கியமானது. முஸ்லிம்களைப் புறந்தள்ளி விட்டு எடுக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் நாட்டில் ஒருபோதும்  நிரந்தர அமைதிக்கு வழிகோலப் போவதில்லை.


இதனை அரசாங்கமும் அனைத்து சமூக அரசில் தலைமைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


“தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரு தரப்பாருக்குமிடையிலான ஆயுதப் போராட்டத்தின் விளைவாக இடையில் அகப்பட்ட  முஸ்லிம் சமூகம், எல்ரீரீஈ உட்பட இன்ன பிற தமிழர் உரிமைப் போராட்டக் குழுக்களினால் இலக்கு வைக்கப்பட்டு தமது உயிர்களை மட்டுமல்ல அசையும் அசையாச் சொத்துக்களையும் நிலபுலன்களையும் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் வாழும் உரிமையையும் இழந்து நிற்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்.


தமிழர் உரிமைப் போராட்ட இயக்கங்களினால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களாகிய நாம் 1983ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக பல இழப்புக்களைச் சந்தித்து வந்திருக்கின்றோம். அதில் முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழ்வாதார குடி நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இழப்புகளுக்கெல்லாம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நிவாரணங்களும் கிடைக்கவில்லை.


எனவே, இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு, வாழும் உரிமை என்பன ஏற்றங்கீகரிக்கப்பட வேண்டும்.” என்றார்.

No comments

Powered by Blogger.