Header Ads



சிறையிலிருந்தபடி 3292 தடவைகள் Call எடுத்த, இரட்டைக் கொலை சந்தேக நபர்


- க. அகரன் -


வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 


வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த மாதம் 23 ஆம் திகதி  அதிகாலை புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர். இச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன், மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்திருந்தனர். 


இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இந்நிலையில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேக சந்தேக நபர் தொலைபேசி பாவித்துள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது. 


இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று (24.08) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் அழைப்பு எடுத்து கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 


இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.