Header Ads



முஜிபுர் ரஹ்மான், ஹிருணிக்கா உள்ளிட்ட 24 பேருக்கு தடை


முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(28) கொழும்பு கோட்டையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோட்டை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் துமிந்த நாகமுவ, ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர, சுதந்திர மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரித்த ஹேரத், வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 24 பேருக்கு கொழும்பின் சில பகுதிகள் மற்றும் பல வீதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதற்கிணங்க, இன்று(28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனை தவிர, CTU சந்தியிலிருந்து செரமிக் சந்தி, லோட்டஸ் வீதி, யோர்க் வீதி, வங்கி மாவத்தை, காலி முகத்திடல்  சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டம் வரையிலான காலி வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.


பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் மக்களை தூண்டும் வகையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. நீதிமன்றங்களை அரசியலில் உள்வாங்கப்பட்டு சூட்சுமமாக பொலிஸ் பெற்றுக் கொள்ளும் இந்த வகையான நீதிமன்றத் தீர்ப்புகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாக மீறும் செயற்பாடுகளாகும். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இந்த வகையான ஆர்ப்பாட்டங்கள் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற முன்பு அதில் கலந்து கொள்ளவிருக்கும் அரசியல்வாதிகளின் பெயர் குறிப்பிட்டு, அவர்கள் அங்கு கலந்து கொள்வதைத் தடை செய்வது முற்றிலும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயற்பாடாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.