ஈஸ்டர் தாக்குதல் - 23270 குற்றச்சாட்டுக்களையும், நிராகரிக்கும் 25 பேர்
- எம்.எப்.அய்னா -
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாசித்து முடிக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த 23,270 குற்றச்சாட்டுக்களும் வாசித்து முடிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்களை சிங்கள மொழியில் நீதிமன்ற உரைப்பெயர்ப்பாளர் டி.டி. அபேகுனவர்தனவும் தமிழில் நீதிமன்ற உரைப் பெயர்ப்பாளர்களான ஏ.எஸ்.எம். ரிஸ்வான் மற்றும் டி.ரி. சதாம் ஆகியோரும் வாசித்துக்காட்டினர். இந்த நிலையில் தாம் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் நிரபராதிகள் என பிரதிவாதிகள் அறிவித்தனர். குற்றம் சுமத்தப்பட்ட 25 பேரில் 17 ஆவது பிரதிவாதி விளக்கமறியலில் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மட்டும் சட்ட மா அதிபர் மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் 7,9,10,11 ஆம் திகதிகளில் இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 7 ஆம் திகதி மட்டும் இந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாமில் அடங்கும் நீதிபதி நவரத்ன மாரசிங்க விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லை.
23270 குற்றச்சாட்டுக்கள் 25 பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுருக்க முறையில் வாசித்து காட்டும் நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிசாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு, போகம்பறை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் 24பேரும் அழைத்து வரப்பட்டனர்.
பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி ஜி.கே. கருனாசேகர, சட்டத்தரணி வஸீமுல் அக்ரம், சட்டத்தரணி சுரங்க பெரேரா, சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ், சட்டத்தரணி அசாத் முஸ்தபா, சட்டத்தரணி இம்தியாஸ் வஹாப், சட்டத்தரணி சச்சினி விக்ரமசிங்க உள்ளிட்டோர் ஆஜராகி வருகின்றனர்.
இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, பிரதி சொலிசிட்டர் ஜெனரால்களான சுஹர்ஷி ஹேரத், சஜித் பண்டார உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணி சுரேன் டி பெரேரா தலைமையிலான குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 7 ஆம் திகதி நீதிபதி நவரட்ன மாரசிங்க வருகை தராமையால், குற்றச்சாட்டுக்களை வாசித்துக் காட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. ஏனைய 3 நாட்களிலும் குற்ரசாட்டுக்களை வாசிக்கும் பணிகள் தொடர்ந்து அவை நிறைவு செய்யப்பட்டன.
7 ஆம் திகதி தலைமை நீதிபதி தமித் திட்டவத்த , உயர் நீதிமன்றின் கடிதம் ஒன்றினை மன்றில் வாசித்து, வழக்கு கோவையை உயர் நீதிமன்றுக்கு அனுப்புமாறு அறிவித்தல் வந்துள்ளதாகவும் அதனால் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் உயர் நீதிமன்ற விவகாரம் முடியும் வரை காத்திருப்பது சிறந்ததாக இருக்கும் என சுட்டிக்காட்டினார்.
எனினும் அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, உயர் நீதிமன்றினால் எந்த தடை உத்தரவும் இவ்வழக்கை தொடர இல்லாமையால், விசாரணைகளை தொடர முடியும் என குறிப்பிட்டார்.
எனினும் வழக்குக் கோவையை உயர் நீதிமன்றம் கோரும் பின்னணியில் வழக்கினை தொடர்வது தொடர்பில் தலைமை நீதிபதி தனது நிலைப்பாட்டினை முன் வைத்தார்.
இதன்போது பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ் மற்றும் கஸ்ஸாலி ஹுசைன் ஆகியோரும் மன்றில் விடயங்களை முன் வைத்தனர்.
இதன்போது, பிரதிவாதிகளில் இருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் முன் வைத்துள்ள பிணை மனு தொடர்பிலான விடயங்கள் அது தொடர்பிலான உயர் நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் மன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு பிரதிவாதிகள் மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்ட திருத்தங்கள் பிரகாரம், பிணை அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு உள்ள நிலையில், அதனை மையப்படுத்தி இந்த பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எனினும் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் உள்ள வழக்கு விசாரணை என்பதால், மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதில் தலையீடு செய்ய அதிகாரம் இல்லை எனவும், உயர் நீதிமன்றமே தலையீடு செய்ய முடியும் எனவும் சட்ட மா அதிபர் தரப்பு அந்த பிணை மனு தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைத்துள்ளது.
அந்த ஆட்சேபனைகளை நிராகரித்துள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் பிணை குறித்த நிலையான நீதிமன்ற அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கே இருப்பதாக அறிவித்திருந்தது.
இந் நிலையில், மேன் முறையீட்டு நீதிமன்றின் இந்த அறிவிப்புக்கு எதிராக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றில் சிறப்பு மேன் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், அது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது.
அதன்படி, உயர் நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றில் உள்ள பினை மனுவை விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்துள்ள நிலையிலேயே, குறித்த பிணை மனுக்கள் மற்றும் மேல் நீதிமன்றின் முன்னிலையில் உள்ள வழக்கின் மூல ஆவணக் கோவைகளை தமக்கு அனுப்புமாறு அவ்விரு நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரமே, மேல் நீதிமன்றின் ட்ரயல் அட்பார் குழாமின் தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த அக்கடிதத்தை முன்னிறுத்தி, மூல வழக்கேட்டினை உயர் நீதிமன்றுக்கு அனுப்பினால் உயர் நீதிமன்ற நடவடிக்கை முடியும் வரை, வழக்கு விசாரணைகளை ஒத்தி வைக்க வேண்டி வரலாம் என சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றூடாக உரிய விளக்கத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பில், வழக்குத் தொடுநர் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளிடையே இணக்கம் காணப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளுக்கும் தற்போதைய நிலையில் பிணையளிக்க முடியாது என சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி அறிவித்திருந்தது. இந் நிலையில் அந்த தீர்மானத்துக்கு எதிரான திருத்தல் மனுவை தாக்கல் செய்யாமல், நிலையான நீதிமன்ற அதிகாரம் இருப்பதலால் இரு பிரதிவாதிகள் மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரி பிணை மனுக்களை தாக்கல் செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வாசித்து காட்டும் நடவடிக்கை நிறைவடைந்த கையோடு, பிரதிவாதிகள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதால் வழக்கின் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்து அதற்கும் திகதி குறித்தது. அதன்படி வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 10,11,12 ஆம் திகதிகளில் முன்னெடுக்க நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. முதல் சாட்சியாளராக சி.ஐ.டி.யின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பி.அம்பாவில அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கான அறிவித்தலும் அனுப்பப்பட்டுள்ளது. இதனைவிட உதவி பொலிஸ் அத்தியட்சர் சமனுக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி
2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
5. அபூ பலாஹ் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப் ( விளக்கமறியலில் வைத்து மரணித்துவிட்டார்)
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சாஹிப் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்
-Vidivelli
Post a Comment