கொழும்பில் திரண்ட மாணவர்கள் - ஒடஓட அடித்து விரட்டியடிப்பு - 20 பேரை அள்ளிச்சென்ற பொலிஸார்
எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 20 பேர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
இலவசக் கல்வியை அழிக்கும் ரணில்-விஜேதாச அறிக்கையை கிழித்து எறியுமாறும், EPF, ETF நிதியத்தில் கை வைக்க வேண்டாம் எனவும், தரமற்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம், அடிமைத் தொழிலாளர் சட்டத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் எனத் தெரிவித்து மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், விகாரமாகாதேவி பூங்காவிற்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மற்றுமொரு குழுவினர் கிருலப்பனை சந்தியை நோக்கி எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தனர்.
எனினும், இந்த பேரணி மீது இரண்டு சந்தர்ப்பங்களில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஒன்றிணைந்திருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது மூன்று சந்தர்ப்பங்களில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
விகாரமகாதேவி பூங்காவில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் பின்தொடர்ந்தனர்.
போராட்டத்தை கலைப்பதற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் கொழும்பு பொது நூலக வளாகத்திற்குள் பிரவேசித்தபோது பொலிஸார் பலரை கைது செய்தனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலர் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Post a Comment