110 வயதில் பாடசாலைக்குச் செல்லும் மூதாட்டி
நவ்தா அல்-கஹ்தானி சவூதி அரேபியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள உம்வா ஆளுநர் பிரிவிலுள்ள அல்-ரஹ்வா மத்திய நிலையத்தின் உதவியுடன் தனது கல்வியினை மீளத் தொடங்கியுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான நவ்தா அல்-கஹ்தானியின் மூத்த பிள்ளைக்கு 80 வயதாகிறது, அவரது கடைசி ஆண் பிள்ளை தனது 50 களில் இருக்கின்றார். படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வது தனது வாழ்க்கையை மாற்றியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
பல வாரங்களுக்கு முன்பு இந்த மத்திய நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கல்வியறிவின்மை ஒழிப்புத் திட்டத்தில் சேர்ந்ததிலிருந்து, அவர் தினமும் 50க்கும் மேற்பட்டவர்களுடன் பாடசாலைக்கு சென்று வருகின்றார்.
அனைத்து வயதுப் பிரிவுகளையும் கொண்ட மாணவர்களுக்கு எழுத்துக்களின் அடிப்படைகள் மற்றும் குர்ஆனின் சில வசனங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பாடங்களை மகிழ்ச்சியுடன் கற்பதாகவும், ஒவ்வொரு நாளின் முடிவிலும் தனது வீட்டுப் பாடத்தை செய்து முடிப்பதாகவும் அல்-கஹ்தானி தெரிவித்தார்.
பிஷாவில் உள்ள கல்வி அமைச்சின் கிளை, அல்-கஹ்தானி பற்றி டுவிட்டரில் ஒரு பதிவொன்றைப் பகிர்ந்துள்ளது. அதில் 110 வயதான அவர், கல்வியறிவின்மையை ஒழிப்பதற்காக எடுக்கும் முயற்சிகளுக்காக சவூதி அரேபியாவின் தலைவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கிறார்.
படிப்பிற்காக மீளச் செல்வது தொடர்பில் சிந்திப்பது ‘குறிப்பாக 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கடினமான விடயமாக இருந்தது,’ என அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த நடவடிக்கை நீண்ட காலமாக தாமதமாகிவிட்டதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பாடசாலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக தனது கல்வியை மேம்படுத்தாமல் இருந்தமைக்காக கவலை அடைவதாக தெரிவித்த அவர் இது நிச்சயமாக எனது வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக் காட்டினார்
இந்த தாமதம் தனது வாழ்க்கையில் உருவான தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்படவில்லை, ஆனால் புவியியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதால் தனது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பிராந்தியத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு இது பொதுவான நிலைமை எனவும் அவர் தெரிவித்தார்.
அல்-கஹ்தானியின் நான்கு பிள்ளைகளும் அவர் கல்வி கற்பதை ஆதரிக்கின்றனர் அத்துடன் அவரது வாழ்க்கையின் புதிய மாற்றம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
நவ்தா அல்-கஹ்தானியின் 60 வயது மகன் முகமது அல்-கஹ்தானி சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில், தினமும் காலையில் தனது தாயை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் சென்று வகுப்புகள் முடியும்போது அவரை மீள அழைத்து வருவதாக தெரிவித்தார்.
தனது தாய் தினமும் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறார் என்பதில் அவரது மகன் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றார்.
‘110 வயதைத் தாண்டிய எங்கள் தாயாருக்கு இந்த விடயம் எளிதானதாக இருக்காது என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம். ஆனால் இது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் பெருமைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். அவருக்கு சிறந்த கல்வி வசதியினை வழங்க நாங்கள் சரியான முடிவெடுத்திருக்கின்றோம்.’
ஆளுநர் பகுதியில் பெண்களுக்கான ஒரே ஒரு உயர்நிலைப் பாடசாலை மட்டுமே உள்ளது. அந்தப் பாடசாலையும் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏனையோர் கல்வியறிவு பெறவும், அவர்களின் கல்வியை கற்று முடிக்கவும் அதிகாரிகள் பொதுக் கல்விக்காக அதிக பாடசாலைகளை தாபிப்பார்கள் என்று தான் நம்புவதாக முகம்மத் அல்-கஹ்தானி மேலும் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கல்வியறிவின்மையை எதிர்த்துப் போராடவும் அகற்றவும் நாட்டின் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
எம்.ஐ.அப்துல் நஸார்
Vidivelli
Post a Comment