Header Ads



அமெரிக்காவை துவம்சம் செய்யும் காட்டுத் தீ, காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி


அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவியில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன், "ஹவாய் வரலாற்றிலேயே இது மிக மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது," என்றார்.


மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டன என்றும் கூறினார்.


தீ வேகமாகப் பரவியதால் லஹைனா கடற்கரையில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் குதித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பல மணிநேரம் நடந்து தப்பிச் சென்றனர்.


பிபிசியிடம் பேசிய விக்ஸே ஃபோன்ஸேலின்கம், கரையை காட்டுத்தீ முற்றிலுமாக ஆக்கிரமித்த நேரத்தில் கடல்நீருக்குள் குதித்து தப்ப முயன்றவர்களில் அவரது குடும்பமும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.


லஹைனா நகர கடற்கரையில் எரிந்த நெருப்பு காரணமாக ஏராளமான பொதுமக்கள் கடலில் குதித்து தப்பிச் சென்றனர்.


அங்கு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் நெருப்பு காற்றில் மேலெழும்பியதாகவும் அந்தச் சம்பவம் குறித்து விவரித்த அவர், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அவரது குழந்தைகள் கிட்டத்தட்ட கடலோடு அடித்துப் போகும் அபாயத்தையும் எதிர்கொண்டதாக குரல் நடுங்கத் தெரிவித்தார்.


பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், தீவின் மேற்குப் பகுதியில் சுமார் 11 ஆயிரம் பேர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தவிக்கும் நிலை உருவானது.


பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தீ எரிந்து வரும் நிலையில், டோரா புயலின் காரணமாக வீசிய சூறாவளிக் காற்று தீ மேலும் பரவக் காரணமாக இருந்தது.

No comments

Powered by Blogger.