இளைஞர்கள் பேஸ்புக்கைப் பார்த்து முடிவெடுக்கிறார்கள், பெரியவர்கள் போன்று அறிவு இல்லை - பவித்ரா
"வரலாற்றில் சரியான முடிவுகளை எடுத்த ஒரு சக்தியாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் நாட்டை நேசிக்கும் சக்தியாக இருக்கிறோம். இந்த சக்தி முதலில் பண்டாரநாயக்காவால் பிறந்தது. அதன் பிறகு பல்வேறு தலைவர்கள் இந்த சக்திக்கு வந்தனர். வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டன. எந்தத் தலைவர்கள் வந்தாலும், என்ன பெயர் சூட்டினாலும், அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து நாட்டில் நிலைத்து நிற்கும் சக்தி இது. இந்த சக்தியிலிருந்து பிறந்த மகிந்த ராஜபக்ச அவர்களின் முடிவின்படியே நாட்டின் போர் முடிவுக்கு வந்தது. இந்த சக்தியால்தான் நாட்டை வளர்த்தார். கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க முடிவு செய்தது இந்த சக்திதான். சேதனப் பசளை போன்ற அவர் எடுத்த சில முடிவுகளால் சிக்கல்கள் எழுந்தன. நாட்டில் போராட்டம் நடந்ததால் பதவி விலகினார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க சரியான தீர்மானத்தை எடுத்தோம்.
பாராளுமன்றத்தின் ஜனாதிபதி தெரிவின் போது ரணில் விக்கிரமசிங்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் முன் நின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்று யோசித்தோம். அப்போது நாட்டின் ஜனநாயகம் குறித்த கேள்விகள் எழுந்தன. போராட்டங்கள் நடந்தன. நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன. இதைப் பார்த்துவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்தோம். அவருடன் எங்களுக்கு அரசியல் ரீதியாக பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவார், சர்வதேச உறவுகளின் அடிப்படையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் அவருக்கு ஆதரவளித்தோம்.
நாட்டின் இளைஞர்களின் அடுத்த தலைமுறையை ஏமாற்ற ஜே.வி.பி. முயற்சி செய்கிறது. இளைஞர்கள் பேஸ்புக்கைப் பார்த்து முடிவெடுக்கிறார்கள். பெரியவர்களான உங்களைப் போன்று சமுதாயத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. கியூபா போன்ற அரசாங்கத்தை கட்டியெழுப்புவதாக ஜே.வி.பி. கூறுகின்றது. அமெரிக்காவைப் போன்ற வாழ்வைக் கொடுப்பதாகவும் கூறுகிறது. இளைஞர்கள் சிலர் இந்தக் கயிறுகளை விழுங்குகிறார்கள். இதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
2015 இல் நாம் தோற்றபோது, பெரும்பான்மையான சக்திகள் எங்களுடன் இருந்தன. என்.ஜி.ஓ. க்களால் பராமரிக்கப்படுகின்ற சிலர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். போர் நடத்துவது தவறு என்றனர். கடன் வாங்குவது தவறு என்றனர். பெரும்பான்மை மக்களின் கருத்தை அடக்கி, பணம் வீசப்பட்டு என்.ஜி.ஓ சித்தாந்தங்களை நாட்டில் பரப்பி வருகிறார்கள். இன்றும் அது நடக்கிறது.
ஜே.வி.பி இன்று வரலாறு பற்றி பேசுகிறது. அவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள்? 88-89 இல் சுதந்திரக் கட்சியின் தலைவர்களைத் தேடித் தேடி வேட்டையாடினார்கள். இடதுசாரி தலைவர்கள் கொல்லப்பட்டனர். விஜய கொல்லப்பட்டார். ஐ.தே.க தலைவர்கள் கொல்லப்பட்டனர். 50 வருடங்களாக ஜே.வி.பி. நாட்டுக்கு என்ன செய்தது? பேருந்துகளை எரித்து, சொத்துக்களை அழித்து, மக்களைக் கொன்று நாட்டையே அழித்தார்கள். சந்திரகா அவர்களின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் எம்முடன் இருந்தனர். என்ன செய்தார்கள்? 1000 அணைகள் கட்டுகிறோம் என்று ஏராளமான பணத்தை வீணடித்தனர். அவர்களுக்கு திஸ்ஸமஹாராம உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தென்பகுதி மக்கள் வழங்கினர். அவர்கள் வேலைசெய்தார்களா? எனவே, அடுத்த முறை அவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. ஜே.வி.பி வெறும் வாய்ச் சொல் வீரர்களே.
போராளிகள் என்ன செய்தார்கள்? பாராளுமன்றத்தில் எம்முடன் இருந்த தோழர் அமரகீர்த்தி அடித்து நிர்வாணப்படுத்தப்பட்டு நடுவீதியில் கொலை செய்யப்பட்டார். எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. அமைச்சர் பிரசன்ன வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எங்கள் கட்சியினரும் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டனர்.
ஐரோப்பாவில் கோவிட் காரணமாக பலர் உயிரிழந்தனர். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஒக்ஸிஜன் இல்லாமல் இறந்தனர். அடக்கம் செய்ய இடமில்லை. அந்தளவுக்கு பலர் இறந்தனர். ஆனால் நாங்கள் அதை நடக்க விடவில்லை. நமது சக்தி நாட்டையும் மக்களையும் பாதுகாத்தது. அன்புள்ள கம்பஹா மக்களே, இந்த சக்தி அடங்கிப் போவதற்கு ஒருபோதும் இடமளிக்காமல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து கொள்வீர்கள் என்பதை நான் அறிவேன். மேலும் நான் சொல்கிறேன், அடுத்த தேர்தலில் எங்கள் கட்சியின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மேலும் யாரும் ஜனாதிபதியாகவும் முடியாது. பல்வேறு இன்னல்கள், தொல்லைகள், அவமானங்களுக்கு மத்தியில் நீங்கள் எங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றும் கூறினார்.
Post a Comment