Header Ads



சிறந்த தமிழர்களும், முஸ்லிம்களும் என்னுடன் உள்ளார்கள் - வெள்ளாளர் ஏனையவர்களை மதிப்பதில்லை


புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிறுவர்களை போராளிகளாகவும் மக்களை பலியாட்களாகவும் பயன்படுத்திய போது என்னை இப்போது இனவாதியாக சித்தரிப்பவர்கள் கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்தார்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


சிறந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என்னுடன் உள்ளார்கள். காரைநகர் பகுதியில் நான் பல ஆண்டுகள் சேவையாற்றினேன். எனது சேவைக்காலம் முடிவடைந்த போது என்னை பிறிதொரு பகுதிக்கு இடாமாற்றம் செய்ய வேண்டாம் என தமிழ் மக்கள் அப்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்கள்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்ல, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களும் என்னுடன் இணக்கமாக உள்ளார்கள். ஒரு சில பிரிவினைவாதிகள் தான் தங்களின் அரசியல் இருப்புக்காக என்னை இனவாதியாக சித்தரிக்கின்றார்கள்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிறுவர்களை போராளிகளாகவும் மக்களை பலியாட்களாகவும் பயன்படுத்திய போது என்னை இப்போது இனவாதியாக சித்தரிப்பவர்கள் கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்தார்கள்.


நாங்களே தமிழ் மக்களை பாதுகாத்தோம். 295,000 தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யும் போது தற்போது என்னை விமர்சிப்பவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை. 8,000 வீடுகளை எமது சொந்த நிதியில் நிர்மாணிக்கும் போதும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் போதும் எவரும் முன்வரவில்லை.


ஆனால் தற்போது நான் கூறாத விடயங்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு போராடுகிறார்கள். இனியாவது இவர்கள் தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கும் நலன்புரி திட்டங்களுக்கும் முன்னிலையாக வேண்டும். இனவாதி என்று விமர்சிக்கப்படும் நாங்கள் தான் தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்தோம்.


வடக்கில் வெள்ளாளர் சாதியினர், ஏனைய சாதியினரை மதிப்பதில்லை. இதுவும் ஒரு வகையான மனித உரிமை மீறல் தான். ஏன் எவரும் இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழர்களை இலங்கை இராணுவம் பாதுகாத்துள்ளது. ஆகவே இனியாவது என்னை இனவாதியாக சித்தரிப்பதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சரத் வீரசேகர போன்றவர்கள் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத நபர். இல்லையென்றால் இன்று முழு இலங்கையும் தமிழ் பயங்கரவாதத்தின் மடியில் விழுந்திருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.