Header Ads



இந்த மோசடியில் சிக்கியிருந்தால், உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள்


79 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ள ONMAX DT தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் ஆறு உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான 95 வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ONMAX DT தனியார் நிறுவனம் தொடர்பான விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளது.


ONMAX DT தனியார் நிறுவனம் பிரமிட் திட்டத்தை மேற்கொண்டது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதன்படி, நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை அறிக்கை செய்தனர்.


அங்கு, ONMAX DT தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சம்பத் சந்தருவன், அதுல இந்திக்க சம்பத், கயாஷான் அபேரத்ன, மதுரங்க பிரசன்ன, சாரங்க ரந்திக மற்றும் தனஞ்சய கயான் ஆகியோர் தங்களின் வங்கி கணக்குகளில் 79 கோடி ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக  விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 


அதன்படி, சம்பந்தப்பட்ட 79 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளை முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.


இவர்கள் எவ்வளவு பணத்தை மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து இதுவரை கூற முடியாதுள்ளதாக தெரிவித்த விசாரணை அதிகாரிகள், பணிப்பாளர் சபையைச் சேர்ந்த 6 பேரின் வங்கிக் கணக்கில் உள்ள 79 கோடி ரூபாயை விட இருபது மடங்கு அதிகமாக சம்பாதித்துள்ளதாக சந்தேகிக்கின்றனர்.


குறித்த நிறுவனத்தின் முதலீடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித ஆதாரங்களுடனும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதற்கிடையில், இந்த பிரமிட் திட்டத்தில் சிக்கியவர்கள் இது குறித்து இதுவரை முறைப்பாடு அளிக்கவில்லை என்றும், இந்த மோசடியில் சிக்கியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  அளிக்குமாறும் விசாரணை அதிகாரிகள் பொது மக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

1 comment:

  1. இந்த பிரமிட் வியாபாரத்தைக் கள்ளத்தனமான மோசடி எனக்குறிப்பிடும் இந்த அதிகாரிகள், அதனை நடாத்தும் கணக்குகள் 79 நீதிமன்ற உத்தரவின்படி மூடிவிட்டார்களாம். இன்னும் பல வங்கிக் கணக்குகள் பற்றி ஆராய்கின்றனராம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட யாரும் முறையிடவில்லையாம். இது களவாடியது என கருதும் பொருட்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். ஆனால் களவாடிய கள்ளன்கள் இல்லை. களவுபற்றி யாரும் முறையிடவுமில்லை. இது யாரோ யாருடைய விருப்பத்துக்கேற்ப நடிக்க வைக்கப்படும் நாடகமாகத் தெரிகிறது. இதன் பின்னாலுள்ள இரகசியம் இன்னும் தெரியவிலலை. காலம்போகப் போகத்தான் தெரியவரும்.அரச சொத்துக்கள், அதிகாரிகளின் நேர காலத்த வீணாக்கி அரச சொத்துக்களை வீண்விரயமாக்கி மேற்கொள்ளப்படும் ஒரு நாடகம்.

    ReplyDelete

Powered by Blogger.