புத்தளத்தில் இப்படியும் நடக்கிறது
- எம்.யூ.எம்.சனூன் -
பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் பண மோசடி தொடர்பான தகவல் புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்துக்கு கிடைத்துள்ளன.
இவ்வாறான மோசடிகளிலிருந்து பொது மக்களையும் குறிப்பாக வர்த்தக வியாபாரிகளையும் பாதுகாப்பதற்காக வர்த்தக சங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வர்த்தக சங்கத்தின் கூட்டுனர் ஹிசாம் ஹூசைன் தகவல் தருகையில்,
கடந்த 23.07.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, புத்தளம் நகருக்கு அருகில் கிராமமொன்றில் அமைந்துள்ள சிற்றுண்டி நிலையமொன்றின் உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
அவ்வழைப்பை எடுத்தவர் தன்னை "PHI ரத்திநாயக்க" என அறிமுகம் செய்துகொண்டதோடு இச்சிற்றுண்டி உற்பத்தி நிறுவனத்தை A Grade தரத்துக்கு உயர்த்துவதாகவும் அதற்கான கட்டணமாக ரூ. 17,500 ஐ இன்னுமொரு அலைபேசி இலக்கமொன்றைக் கூறி அவ்விலக்கத்துக்கு Easy Cash செய்யுமாறும் கூறியுள்ளார்.
தனது சிற்றுண்டி உற்பத்தி நிறுவனத்தைத் தரம் உயர்த்துவதற்கு விரும்பிய அந்த உற்பத்தியாளர் தொலைபேசி அழைப்பில் கூறியவாறு ரூ. 17,500 ஐ அந்த நபர் கூறிய தொலைபேசி இலக்கத்துக்கு Easy Cash மூலம் பணம் அனுப்பியுள்ளார்.
அதேபோல் 24ஆம் திகதி புத்தளம் நகரில் ஒரு சிற்றுண்டிச்சாலை ஒன்றுக்கும் PHI ரத்நாயக்க என்ற பெயரில் முன்னைய சம்பவத்தில் தரமுயர்த்துதல் போன்று தெலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
எனினும், இவ்வாறான தரமுயர்த்தல் - சான்றிதழ் வழங்குதல் - அறிக்கை விநியோகித்தல் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை பணத்தை தனிப்பட்ட அலைபேசி இலக்கமொன்றுக்கு செலுத்துதல் குறித்து சந்தேகம் ஏற்பட்ட அச்சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் வர்த்தக சங்க நிருவாக் குழு உறுப்பினரொருவருக்கு இதனை தெரியப்படுத்தினார்.
இது தொடர்பாக புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவரை சந்தித்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொண்டபோது, அரச நிறுவனங்கள் என்பவை மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் என்பதனால் மேல்கூறப்பட்டவாறு தரமுயர்த்துதல், சான்றிதழ் வழங்குதல், மற்றும் அறிக்கை விநியோகித்தல் அல்லது அதுபோன்ற பணிகளின்போது பணம் அறவிடுவதில்லை.
அரச நிறுவனமொன்றில் பணியொன்றைப் பெற்றுக்கொள்ளும்போது எச்சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட அலைபேசி இலக்கங்களுக்கோ வங்கிக் கணக்குகளுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என அவ்வதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அநுராதபுரம், ஆனமடு பகுதிகளிலும் இதே விதமாக பண மோசடி நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளதையும் பொது சுகாதார அதிகாரி குறிப்பிட்டார்.
Post a Comment