உத்தியோகபூர்வ மொழி் அமுலாக்கம் தொடர்பான தேசிய மாநாட்டில் விசேட பேச்சாளர் தூதுவர் அமீர் அஜ்வத் ஆற்றிய உரை
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கனேடிய நிதியுதவியுடன் இயங்கும் தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்றத் திட்ட நிறுவனத்துடன் (NLEAP) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஆராயும் தேசிய மாநாட்டில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொள்கைத் திட்டமிடல், மீளாய்வு, திட்ட அமுலாக்கல், மற்றும் மனிதவள அபிவிருத்திக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகமும் ஓமான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான O.L. அமீர் அஜ்வத் விசேட பேச்சாளராக அழைக்கப்பட்டு “சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் மொழிச் சமத்துவத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இத்தேசிய கருத்தரங்கு கொழும்பிலுள்ள Galle Face ஹோட்டல் Grand Ballroom ல் 11 - 12 ஜூலை 2023 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
தூதுவர் அமீர் அஜ்வத் தனது விசேட உரையில்,
ஒரு தேசத்தின் மொழிகள் அத்தேசத்துக்கான அமைதியின் அத்திவாரம் எனக்குறிப்பிட்டார். தேசிய மொழிகள் பரஸ்பர புரிந்துணர்வுக்கும், பரஸ்பர புரிந்துணர்வு சமூக ஒருமைப்பாட்டுக்கும், சமூக ஒருமைப்பாடு சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக நல்லிணக்கம் தேசிய அமைதிக்கும் வழிவகுக்கிறது என சுட்டிக்காட்டினார். பரஸ்பர புரிந்துணர்வுக்கும் அமைதியான சகவாழ்வுக்கும் பங்களிப்புச் செய்வதில் தேசிய மொழிக் கொள்கையில் வெற்றிகண்ட பல சர்வதேச நாடுகளை உதாரணம் காட்டி உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், எமது நாட்டின் தேசிய மொழிகள் எமது கலாச்சாரப் பாரம்பரியம் எனவும் அவை தேசிய சொத்துகள் எனவும் அவற்றைப் பாதுகாத்து அவற்றால் பயனடைய வேண்டியது ஒவ்வொரு இலங்கையரதும் கடமை எனவும் வலியுறுத்தினார். இலங்கையின் சட்ட யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மொழிகளான சிங்களமும் தமிழும் மற்றும் இணை மொழியான ஆங்கிலமும் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திலிருந்தே கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்தார்.
இலங்கையின் கௌரவ பிரதமரும் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன இந்த இருநாள் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், NLEAP திட்ட களப் பணிப்பாளர், மைகல் எம்ப்லம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட உயர்மட்ட அரச அதிகாரிகள், தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நன்கொடை வழங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலானோர் இம்மாநாட்டில் பேராளர்களாக கலந்து கொண்டனர்.
மொழிபெயர்பாளர்களுக்கான கைநூலொன்றும் இம் மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Post a Comment