ஊசியால் இளம் தாய் மரணம்
திடீர் வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையால் வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல வடக்கு படகம, எவேரியா வத்த வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த ஹன்சிகா சஜனி பெரேரா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை அதிகாரி சேனாநந்தா முன்னிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளருமான அமிலபத்து திஸாநாயக்க சாட்சியமளித்துள்ளார்.
“ கடந்த 26ஆம் திகதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் ராகம போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. பித்தப்பையில் சிறிய கல் இருந்ததால், மருத்துவமனையின் 37வது அறையில் அனுமதிக்கப்பட்டார்.
28ஆம் திகதி மதியம் அவர் நலமாக இருப்பதாகவும், வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனவும் வைத்தியசாலையில் இருந்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மாலையே அவரது உடலுக்குள் கிருமி பரவியிருப்பது தெரிய வந்தது.
அவருக்கு சிகிச்சையாக ஊசி போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் 29ஆம் திகதி மதியம் 2.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் உடலில் நுழைந்த கிருமிக்கு சிகிச்சையாக வழங்கப்பட்ட தடுப்பூசி ஒவ்வாமை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment