மாற்றுத்திறனாளி ஜஹீருதீன் அடித்துக் கொலை - நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்
லாரியில் அவர் மாட்டிறைச்சி ஏற்றிச் செல்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பிபிசி இந்தி, சம்பவம் நடந்த பிகார் மாநிலத்தின் சாப்ரா மாவட்டத்துக்கு நேரில் சென்றது.
சம்பவம் நடந்த இடத்தில் இன்னும் லாரியின் உடைந்த கண்ணாடிச் சில்லுகளும், சில செருப்புகளும் சிதறிக் கிடக்கின்றன. தாக்குதலுகு உள்ளான லாரியை போலீசார் கைப்பற்றிக் அருகிலிருக்கும் ஒரு இடத்தில் வைத்திருக்கின்றனர்.
லாரியைப் பார்க்கும்போது, சம்பவத்தன்று என்ன நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்க முடிந்தது. ஓட்டுநரின் இருக்கையிலும், அருகிலிருக்கும் இருக்கையிலும் கற்கள் கிடந்தன.
அதே லாரியில் இருந்த 55 வயதான கயூம் கான் நம்மோடு பேசினார்.
“சில பேர் வந்து வண்டியின் கண்ணாடியை உடைத்தார்கள். சில பேர் வந்து கத்தியைக் காட்டினார்கள். வண்டியின் டயரைக் கிழித்தார்கள். போலீசார் வந்தனர், ஆனால் கற்களையும் கூட்டத்தையும் பாத்தவுடன் அவர்களும் ஓடிவிட்டனர். வேறு யார் ஜஹீருதீனைக் காப்பாற்றியிருப்பார்கள்? நாங்கள் எப்படியோ தப்பி ஓடி உயிர்பிழைத்தோம்,” என்கிறார் கயூம் கான்.
இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவலின்படி, ஜூன் 28ஆம் தேதி மாலை, லாரியில் ஏற்பட்ட பழுதினால், ஓட்டுநர் ஜஹீருதீன் வண்டியை, பீகாரின் சாப்ரா மாவட்டத்திலுள்ள பாங்க்ரா கிராமத்ஹ்டில், ஒரு அனுமார் கோவிலுக்கு முன் நிறுத்தியுள்ளார்.
அவ்வழியே சென்ற ஒரு சிறுவன், வண்டியில் என்ன இருக்கிறது என்று விசாரித்திருக்கிறான். வண்டியில் எலும்புகள் இருக்கின்றன என்று ஜஹீருதீன் சொல்லவும், அச்சிறுவன் குரல் கொடுத்து மற்றவர்களை அழைத்திருக்கிறான். ஒரு கூட்டமே வந்து லாரியிலுள்ள எலும்புகளைச் சோதனை செய்தது.
ஆனால் அவர்கள் எலும்புகளுக்குக் கீழே மாட்டிறைச்சி இல்லை என்பதை ஏற்க மறுத்துவிட்டனர். எலும்புகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையின் உரிமையாளரோடு தொலைபேசியில் பேசிய பிறகும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த கயூம் கான், கடந்த காலங்களில், இதே வழியில் வண்டிகளில் எலும்புகளை ஏற்றிச் சென்றதாகவும், அப்போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் வந்ததில்லை எனவும் கூறினார். ஆனால் இப்போது வெளியில் செல்லவே பயமாக இருப்பதாகவும் கூறினார்.
சம்பவ இடத்திற்குச் சென்று எவ்வளவு முயன்றும் யரும் எதுவும் நம்மோடு பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டனர். ஆனால் அப்பகுதியின் சிறுவர்களை யாரோ இயக்குவதாக மட்டும் மெல்லிய குரலில் சொல்கிறார்கள்.
ஜஹீருதீன் ஒரு மாற்றுத்திறனாளி. கார் ஓட்டுநராக இருந்தபோது கல்கத்தாவில் நடந்த ஒரு விபத்திற்குப் பிறகு, ஒரு கால் சரியாக வேலை செய்யாது.
இருந்தும் லாரி ஓட்டி, நோய்வாய்பட்டிருக்கும் அவரது 75 வயதான தாயையும், 24 வயதான மகளையும்யும் ஆதரித்து வந்தார்.
அவரது தாயார் லைலா காதூன், தனது மகன் சம்பாதித்த பணத்தால்தான் தனது முதுகு வலிக்கு வைத்தியம் பார்த்து வந்ததாகக் கூறினார். “அவனது பிள்ளைகள் இன்னும் சொந்தக் காலில் நிற்கத் துவங்வில்லை. அவந்தான் எங்களின் ஒரே நம்பிக்கை. இபோது அவனும் இல்லை,” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், எலும்புகளை ஏற்றிக்கொண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வது அவர்களது பரம்பரைத் தொழில் என்றார். “ஆனால் இப்படி நடந்ததே இல்லை,” என்றார்.
ஜஹீருதீனின் மகள் சைதுன்னிஸா, பலமுறை தனது தந்தையிடம், அவரது கால்கள் சரியாக இல்லாததால் வேலையிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தியதாகச் சொல்கிறார். “ஆனால் அவர் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். அவர் எந்த சட்டவிரோதமான தொழிலும் செய்யவில்லை. அவருக்கு நீதி வேண்டும்,” என்றார்.
மாட்டிறைச்சி தொடர்பில் நடக்கும் இரண்டாவது கொலை
கடந்த 6 மாதங்களில், பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் மட்டும், மாட்டிறைச்சி கொண்டுசென்றதாகச் சந்தேகிப்பட்டு, நடந்த இரண்டாவது கும்பல் கொலை இது. இதற்குமுன் இதே மாவட்டத்தின் ரசூல்பூர் என்ற பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
சாப்ரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு எலும்பு பதப்படுத்தும் தொழிற்சாலையின் இயக்குநரான முகமது சஃபாகத்தைத் தொடர்புகொண்டோம்.
அங்கு இத்தொழில் பல ஆண்டுகளாக நடக்கிறது, என்கிறார் அவர். தனது தாத்தா காலத்திலிருந்தே இத்தொழில் நடப்பதாகவும். எலும்புகளைப் பொடியாக்கி, குஜராத்திலிருக்கும் ஒரு பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார்.
“இது சட்டவிரோதமான தொழில் இல்லை. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது. ஊருக்கு வெளியே வீசப்படும் செத்த விலங்குகளைச் சேகரித்து அவற்றின் எலும்புகளை எடுக்கிறோம்,” என்கிறார்.
இச்சம்பவம் குறித்து, பிபிசி, சாப்ரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்க்ளாவைத் தொடர்பு கொண்டது.
அவர், இதுவரை 7 முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாகவும், மேலும் அடையாளம் காணப்படாத 20-25 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும், பிபிசியுடனான ஒரு உரையாடலில் ஜூன் 29 நடந்த முதல்கட்டக் கைதுகளுக்குப்பின் இந்த வழக்கில் வேறந்த முன்னேற்றமும் இல்லை என ஒப்புக்கொண்டார்.
Post a Comment