சஹ்ரானின் மனைவிக்கு சிங்களம் புரியுமா..? தடுமாறிய பெண் பொலிஸ் அதிகாரி, நீதிவானும் விரைவில் கூண்டுக்கு
(எம்.எப்.அய்னா)
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவை கைது செய்யும் போது, பயங்கரவாதத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கியமைக்காக கைது செய்வதாக சிங்கள மொழியில் குற்றச்சாட்டு அவருக்கு கூறப்பட்டதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
அதன்படி, சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு சிங்கள மொழி தெரியுமா என்ற குறுக்கு விசாரணைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் குறித்த குற்றச்சாட்டின் ஒரு சொல்லைக் கூட தமிழில் கூற அந்த பெண் பொலிஸ் அதிகாரி தவறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்துஅறிந்திருந்தும் ( சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக ) , அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்கலாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் நிரலிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், இவ்வழக்கில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த 21 ஆம் திகதியும் அவ்விசாரணைகள் நடந்தன. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் விசாரணைகள் நடக்கின்றன. வழக்குத் தொடுநருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய மற்றும் லாபிர் ஆகியோர் ஆஜராகி சாட்சிகளை நெறிப்படுத்திய நிலையில், பிரதிவாதி ஹாதியாவுக்காக மன்றில் சிரேஷ்ட சட்டத்தணி ருஷ்தி ஹபீப் ஆஜராகி குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.
கடந்த 21 ஆம் திகதி 14 சாட்சியாளர்கள் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அதில் 6 பேரின் சாட்சியமே நெறிப்படுத்தப்பட்டது. இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஹாதியாவை கைது செய்யும் போது, அவரை கைது செய்வதற்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் ஹாதியாவுக்கு சிங்கள மொழி தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த சாட்சியாளரை மட்டும் குறிப்பாக ஹாதியாவின் சட்டத்தரணி கடந்த 21 ஆம் திகதி குறுக்கு விசாரணை செய்தார்.
இதன்போது ஹாதியாவுக்கு சிங்களம் தெரியும் என சாட்சியாளருக்கு எப்படி தெரியும் என அவர் குறுக்கு விசாரணை செய்தார். எனினும் அதற்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.
ஹாதியாவை கைது செய்யும் போது, சிங்கள மொழியில் ‘ திரஸ்தவாதயட ஆதார அனுபல தீம ‘ எனும் குற்றச்சாட்டுக்கு ( பயங்கரவாதத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை) அவரை கைது செய்வதாக கூறப்பட்டது என அந்த பெண் பொலிஸ் அதிகாரி கூறினார்.
இந்த நிலையில், குற்றச்சாட்டை சொல்லிக் கொடுத்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு தமிழ் தெரியுமா என மற்றொரு குறுக்கு கேள்வி தொடுக்கப்பட்டது. அதற்கு அந்த அதிகாரி தெரியாது என குறிப்பிட்டார்.
‘திரஸ்தவாதய ‘ எனும் சிங்கள சொல்லுக்கு தமிழில் என்ன கூறுவது என அந்த அதிகாரியிடம் வினவப்பட்டது. அதற்கும் அவர் தெரியாது என குறிப்பிட்டார்.
இந் நிலையில், கடந்த தவணையில் முன்னாள் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் சாட்சியமும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தினால் நெறிப்படுத்தப்பட்டது. அவரிடம் குறுக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது அடுத்த தவணையில் தொடரவுள்ளது.
இதனிடையே, ஹாதியாவுக்கு எதிரான ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவர் கோட்டை நீதிவானுக்கு வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தின் உண்மை விளம்பல் விசாரணையும் விரைவில் ஆரம்பிக்கப்படும் நிலைமையை எட்டியுள்ளது. அவ்வாறு அவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் இடத்து அவ்வாக்குமூலத்தை பதிவு செய்த கோட்டை நீதிமன்றின் முன்னாள் நீதிவானும் தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதியுமான ரங்க திஸாநாயக்கவின் சாட்சியம் பெறப்படும் சாத்தியம் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த விவகார வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 23, 24 ஆம் திகதிகளில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment