முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் திட்டமிடப்பட்ட விகாரைக்கு நல்லிணக்க விஜயம்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு, கருணை, நட்புறவு, கலாசாரம் என்பனவற்றை வளர்ப்பதற்கும் கலாசார விழுமியங்களை மதிப்பதற்குமான அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண் மதத் தலைவர்கள் கண்டிக்-கு இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த 10,11 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இருநாள் விஜயத்தில் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த 30 பெண் மதத்தலைவர்களும், 6 ஆண் மதத் தலைவர்களும் பங்கு கொண்டிருந்தனர். மதத் தலைவர்கள் மதங்கள் தொடர்பில் பூரண அறிவினையும், புரிந்துணர்வினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஸம் ஸம் பவுண்டேசனினால் இவ்விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஜயத்தில் பங்கு கொண்ட பெண் மதத் தலைவர்கள் திஹாரிய தன்வீர் அகடமிக்கு விஜயம் செய்தபோது ஹஜ் பெருநாள் தொடர்பான கண்காட்சியொன்றினையும் பார்வையிட்டனர். கண்டி, பிலிமதலாவையில் ஸ்ரீ குணதிலகராமய மெஹெனி ஆராமயவுக்கும் விஜயம் செய்து கலந்துரையாடலில் பங்கு கொண்டனர். மேலும் கண்டி, கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலின் நல்லிணக்க மையம், அம்பிட்டிய சில்வெஸ்டர் மொனஸ்டரி மொன்டே பானோ ஆலயம், திகன, மல்பான கங்கா திலக மஹாவிகாரை, கடலா தெனிய விகாரை, கண்டி திரித்துவ கல்லூரி ஆலயம், கண்டி புர்கானியா அரபுக்கல்லூரி, திகன மஸ்ஜிதுல் லாபீர் ஜும்ஆ பள்ளிவாசல் என்பனவற்றுக்கும் விஜயம் செய்தனர்.
மல்பான கங்கா திலக விகாரை
திகன, மல்பான கங்காதிலக விகாரைக்கு விஜயம் செய்த பெண் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய குழுவினரை விகாரை அதிபதியும், அக்கிராமத்து பெண்கள் உள்ளடங்கிய பொது மக்களும் மரியாதையுடன் வரவேற்றனர்.
திகன கலவரம் இந்த விகாரையிலிருந்தே திட்டமிடப்படிருந்தது. இங்கிருந்தே முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இக்கிராமத்துக்கும் விகாரைக்கும் நல்லிணக்க ஏற்பாடுடன் மேற்கொள்ளப்பட்ட விஜயம் குறித்து அவர்கள் வியந்தனர்.
அங்கு இடம் பெற்ற நிகழ்வில் பள்ளேகந்தே ரதன தேரர் கருத்துத் தெரிவிக்கையில், ‘முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் இடம் பெற்று பலவருடங்கள் கடந்து விட்டன. இதன் பிறகு ஒருபோதும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடக்கமாட்டாது என்பது உறுதி. இவ்வாறான மதத் தலைவர்களின் விஜயம் நல்லிணக்க, நட்புறவு உணர்வுகளைப் பலப்படுத்தும் என்றார்.
மல்பான கிராமத்திலிருந்து சில பெளத்த பெண்கள் தாங்களும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யவேண்டும். எங்களுக்குள் புரிந்துணர்வும் சகோதரத்துவமும் வலுப்பெறவேண்டும் என்று தெரிவித்து மதத் தலைவிகளுடன் இணைந்து திகன மஸ்ஜிதுல் லாபீர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர். திகன கலவரத்தின்போது இந்த பள்ளிவாசல் இனவாதிகளால் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திகன கலவரத்துக்கு மையப்புள்ளியாக இருந்த மல்பான கிராமத்தைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் மஸ்ஜிதுல் லாபீர் பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த 8 முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து பெண்கள் அணியொன்று நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஸம்ஸம் பவுண்டேசன்
குறிப்பிட்ட இரண்டு நாள் நல்லிணக்க, நட்புறவு, புரிந்துணர்வு விஜயத்தினை ஏற்பாடு செய்த ஸம்ஸம் பவுண்டேசனின் திட்ட முகாமையாளர் அஷ்ஷெய்க் சாஜித் ஹுமைதி ‘விடிவெள்ளி’க்கு கருத்துத் தெரிவிக்கையில்’ ‘சர்வமத பெண் மதத்தலைவர்களின் இவ்விஜயம் அடிமட்டத்தில் இருக்கும். சர்வமத பெண்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விஜயம் இனங்கள், மதங்களுக்கிடையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிச்சயம் பலப்படுத்தும் என்று தெரிவித்தார். இவ்வாறான விஜயங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார்.
கட்டுகலை நல்லிணக்க மையம்
கண்டி கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலின் நல்லிணக்க மையத்துக்கு விஜயம் செய்த பெண் மதத்தலைவர்கள் குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான வரலாற்று ஆவணங்களைப் பார்வையிட்டு அது தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் தெரிவித்தார்.
விஜயத்தில் பெளத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத் தலைவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.- Vidivelli
Post a Comment