கட்டணம் செலுத்தும் வாட்டிலும், குழந்தைகள் மாற்றப்படுமா..?
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் ஊடாக பிறந்த குழந்தை, கம்பஹா வைத்தியசாலையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது.
இந்நிலையில், 22 நாட்களேயான அந்த ஆண் குழந்தை தங்களுடையது அல்லவென, அந்தக் குழந்தையை வைத்தியசாலையின் சவச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (09) பார்த்துவிட்டு வந்த இளம் ஜோடி, கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர். கம்பஹா வைத்தியசாலையின் சவச்சாலைக்குச் சென்ற கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத், முதற்கட்ட நீதவான் விசாரணையை நடத்தினார்.
அவ்விடத்தில் அந்த இளம்ஜோடியும் இருந்துள்ளது. மரணமடைந்து இருக்கும் இந்த சிசு, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தான் பெற்ற சிசு அல்லவென அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உண்மையான பெற்றோர் யார்? என்பதை கண்டறிவதற்காக மரபணு (டீ.என்.ஏ) பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர். அவ்விடத்தில் இருந்த கணவனும், இந்த சிசு, தன்னுடைய மனைவியால் பிரசவிக்கப்பட்டது அல்லவென தெரிவித்துள்ளார்.
இதன்பின்னரே, சடலத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பதில் நீதவான், பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் வாட்டில் அப்பெண், குழந்தையை பிரசவிப்பதற்காக மே மாதம் 29ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் சத்திரசிகிச்சையின் மூலமாக அப்பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
Post a Comment