மாற்றப்படும் முஸ்லிம்களின் வரலாறு, பள்ளிவாசலுக்கு மேலே பெளத்த கொடி - சமூகத்திற்கு எதிரான மாபெரும் கொடுமைகள்
அங்கே மக்களிடம் நான் கண்டது வெறுப்பையும் வன்முறையையும் ஆகும். பலான்கொடை நகரிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் அப்பால் காணப்படுகின்ற “கூரகலை” அல்லது நாங்கள் அனைவரும் அறிந்த ஜெய்லானி பள்ளிவாசலுக்கு நாங்கள் மேற்கொண்ட பயணத்தைப் பற்றியே இங்கு பேசுகிறேன்.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் தோற்றம்
பலாங்கொடையைச் சேர்ந்த மொஹமட் லெப்பை மரிக்கார் அபூசாலி 1960 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, சிங்கள பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து தடவைகள் பாராளுமன்றம் சென்ற ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி. பல ஆண்டு காலமாக அவரும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஜெய்லானி பள்ளியை பராமரித்து வந்துள்ளார்கள். இன்றும் அவருடைய மகள் சட்டத்தரணி ரொஷானா அபுசாலி ஜெய்லானி பள்ளியின் நிர்வாக சபையில் ஒரு அங்கத்தவராக இருக்கின்றார்.
ஜெய்லானி பள்ளிவாசலின் வரலாற்றைப் பற்றி அபுசாலி எழுதிய “தர்பர் ஜெய்லானி” என்ற நூல் ஜெய்லானி பள்ளியின் தோற்றத்தை பின்வருமாறு கூறுகின்றது. “ஈராக்கினைச் சேர்ந்த சன்மார்க்கப் போதகரும், அறிஞருமான குதுப் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் பாவா ஆதம் மலையை தரிசிப்பதற்காக கி.பி 1132 இல் இலங்கைக்கு வந்துள்ளார். அப்போது அவர் இன்றைய ஜெய்லானி பள்ளிவாசல் காணப்படுகின்ற மலையில் 12 வருடங்கள் நோன்பு நோற்று தியானத்தில் ஈடுபட்டுள்ளதாக “பார்த்தசாரதி நாயுடு” மற்றும் “சத்துர ஷங்காரம்” எனும் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானியின் ஞாபகார்த்தமாக தப்தர் ஜெய்லானி என இப்பிரதேசத்திற்கு பெயர் சூட்டப்பட்டு இம்மலைப் பிரதேசத்தினை பாரம்பரிய வணக்கஸ்தலமாக முஸ்லிம்கள் மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக இங்கு வர ஆரம்பித்துள்ளனர். வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி 1922இல் இங்கே ஒரு கற்குகையை கூரையாக வைத்து இந்த பள்ளி கட்டப்பட்டுள்ளது”
ஜெய்லானி பள்ளியின் இன்றைய நிலை
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களினால் கொடியேற்றம் செய்யப்பட்டு சமய வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஜெய்லானி பள்ளிவாசலில் மூன்று நல்லடியார்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு இரவோடு இரவாக இரண்டு அடக்கஸ்தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அது பற்றி தொல்பொருள் திணைக்களத்திடம் கேட்டால் அவர்கள் எந்த ஒரு பதிலையும் வழங்கவில்லை என ஊர் மக்கள் கூறுகின்றார்கள். இது பற்றி கேட்பதற்காக நாங்கள் அண்மையில் ராஜினாமா செய்து கொண்ட முன்னாள் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுரா மனதுங்கவை தொடர்பு கொண்ட போது, தான் தற்போது அந்தப் பொறுப்பில் இல்லை என்பதால் தன்னால் அது பற்றி எதுவும் கூற முடியாது என கூறினார்.
கூரகலை விகாரைக்கு நீங்கள் செல்லும்போது முதலில் ஒரு சிங்கத்தை காண்பீர்கள். அதன்பின்னர் ஒரு கப்பல் வடிவிலான மலை உச்சிக்கு செல்வீர்கள். அதன்பின்னர் அங்கிருந்து கீழே இறங்கி ஒரு திறந்த வெளிக்கு செல்வீர்கள். அந்தத் திறந்தவெளியின் இடது புறத்திலே ஐந்து அரச மரங்கள் நடப்பட்டு இருக்கும். அந்த இடத்திலே முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் பல இருந்துள்ளன. மேலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ள அடக்கஸ்தலம் ஒன்றும் அங்கே காணப்படுகின்றது. அந்த ஐந்து மரங்களுக்கு மேலே தொல்பொருள் திணைக்களத்தின் ஒரு காரியாலயமும் தரைமட்டம் ஆக்கப்பட்ட அடுத்த அடக்கஸ்தலமும் இருக்கின்றது. அதனோடு மேலே முஸ்லிம்களுக்கு பள்ளிக்கு வருவதற்காக ஒரு சிறிய பாதை வழங்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டியது விகாரைக்கு உட்புறத்திலிருந்து அரச மரங்களை தாண்டி ஒரு பௌத்த தூபிக்கு கீழால் ஆகும்.
வெறுமனே ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஜெய்லானி பள்ளியைத் தவிர மிகுதி 56 ஏக்கர் நிலப்பரப்பை உடைய அந்த பிரமாண்டமான பௌத்த வணக்கஸ்தலத்தின் வேறு எந்த ஒரு இடத்திலும் “இங்கே துப்ப வேண்டாம்” என்ற பதாகையை நாம் காணவில்லை.
ஜெய்லானி பள்ளிக்குள் நாம் உட்கார்ந்து இருக்கும்போது, ஒரு சிங்கள சகோதரர் 10 ,15 பேருடன் அங்கே வந்து பள்ளியின் உட்பகுதியை காட்டி “இங்கே புத்த பெருமானுடைய ஒரு சிலை இருந்துள்ளது. அதனை உடைத்து தான் இவர்கள் பள்ளியை கட்டி இருக்கின்றார்கள். நல்ல வேளை கோட்டாபய ராஜபக்ஷ , சவேந்திர சில்வா போன்ற வீரம் படைத்தவர்கள் இருந்ததால் இந்த புனித பூமி காப்பாற்றப்பட்டுள்ளது. நான் அரசியல் பேசவில்லை ஆனால் இதுதான் உண்மை” என இரண்டே நிமிடத்தில் அவர் அறிந்த ஜெய்லானி பள்ளியின் வரலாற்றை பிறருக்கும் எத்தி வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கூரகல விகாரையின் புனர்நிர்மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் இடம்பெற்றன. சுமார் இரண்டு வருடங்களிற்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த புனரமைப்பு பணிகளுக்கு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களினால் நிதியுதவி வழங்கப்பட்டதாக நெல்லிகல தேரர் தெரிவித்திருந்தார். இதன் நிர்மாணப் பணிகளுக்கும் இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் முழுநேர பூரண ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றது. 2022 வெசாக் தினத்தின் போது (மே 7) அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் புனரமைப்பு செய்யப்பட்ட கூரகல உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பள்ளிவாசலுக்கு மேலே பறக்கும் பெளத்த கொடி…
திறந்தவெளியில் இருந்து நேராக சென்று மேலே ஏறினால் 40 அடி உயரமான தூபியை காண முடியும். அங்கிருந்து வலது புறத்திலே ஒரு மிகப்பெரிய பௌத்த கொடி மலைக்கு மேலே அசைந்து கொண்டிருக்கின்றது. எனக்கு அருகில் இருந்த ஒரு வயோதிப பௌத்த மத சகோதரர் அவருடைய வயது முதிர்ந்த மனைவியை நோக்கி ஒரு பெருமிதத்துடன் “அங்கே பார், முஸ்லிம் பள்ளிக்கு மேலே அந்த பௌத்த கொடி நடப்பட்டுள்ளது” இப்பள்ளிவாசலை இலகுவில் அடையாளம் காண்பதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த மினாரா (வரவேற்பு கோபுரம்) கடந்த வருடம் பலவந்தமாக உடைக்கப்பட்டது. அந்த இடத்திலே இன்று ஒரு மிகப்பெரிய பௌத்த கொடி பறந்து கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் கடைகளுக்கு செல்ல விடாமல் தடுக்கின்ற இராணுவத்தினர்
விகாரையை முழுமையாக பார்வையிட்டு கீழே இறங்கும் போது வலதுபுறத்திலே மிக உயரமான மதில்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த மதில்களுக்கு வெளியே இருந்து ஒரு சில வியாபாரிகள் தண்ணீர் போத்தல்களையும் ஐஸ்கிரீம்களையும் விற்பனை செய்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்களுடைய கடைகள் பாதையோரமாக இருந்தாலும் கொஞ்சம் பதற்றத்துடன் தான் அங்கே அவர்கள் பொருட்களை விகாரையில் இருந்து கீழே இறங்குகின்ற சிங்களவர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். மிகவும் களைப்பாக இருந்ததால் நாங்கள் கீழே சென்று பிரதான பாதையின் ஊடாக அந்த கடைகள் இருக்கின்ற பக்கத்திற்கு வந்தோம். அப்போது இராணுவத்தினரால் அந்தப் பாதை மூடப்பட்டு ஆயுதம் ஏந்திய ஒரு இராணுவ வீரன் உங்களை மேலே உள்ள முஸ்லிம் கடைகளுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என மறுத்தார்.
ஏன் செல்ல முடியாது ?
உங்களை அனுப்பினால் தேரர் எமக்குத்தான் ஏசுவார் !!
அங்கே இலங்கை இராணுவத்தினருக்கு கட்டளையிடுவது கூரகல விகாரையினை அமைத்த நெல்லிகல தேரர்!
நாங்கள் ஊடகவியலாளர்கள் என குறித்த இராணுவ வீரனிடம் தெரிவித்த பின்னரே எங்களை அவர் முஸ்லிம் கடைகள் உள்ள பகுதிக்கு அனுப்பினார். அங்கே சென்றதும் நான் கேட்ட கேள்வி, ஏன் எங்களை வரவிடாமல் தடுத்தார்கள்.
“உங்களை மட்டுமல்ல விகாரைக்கு வருகின்ற எவரையும் எங்கள் கடைகளுக்கு வர அனுமதிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் ‘நீங்கள் பல வருடங்களாக பள்ளிக்கு வருகின்ற முஸ்லிம்களிடம் இருந்து சம்பாதித்து விட்டீர்கள். இனிமேல் விகாரைக்கு வருகின்ற பௌத்தர்களிடமிருந்து பௌத்த வியாபாரிகள் சம்பாதிக்கட்டும். உங்களுக்கு நாங்கள் சம்பாதிக்க இடம் தர மாட்டோம்” எனக் கூறினார்களாம்.
இது பற்றி நாங்கள் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத்திடம் வினவினோம். அது பற்றி ஆராய்ந்து பதில் தருவதாக கூறி இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணுவ பொறுப்பதிகாரியிடம் தாம் வினவியதாகவும் அவர் அத்தகைய தடுப்புக்கள் எதுவும் அங்கே இல்லை என தமக்கு கூறியதாகவும் பிரிகேடியர் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் கூறினார்.
நாங்கள் குறித்த கடைக்குச் சென்று ஒரு குவளை தண்ணீரை குடிப்பதற்கு முன்னரே மதிலோரமாக ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்த, அந்தக் கடையின் உரிமையாளரின் மகன் கையில் இருந்தவற்றை தூக்கிக் கொண்டு “ரங்க வருகிறான், ரங்க வருகிறான்” என்றவாறு கூறிக்கொண்டு கடைக்குள்ளே ஓடி வந்து ஒளிந்து கொண்டான்.
யார் அந்த “ரங்க”
கூரகலை விகாரையில் மஞ்சள் நிறத்தில் டீசேர்ட் அணிந்த கிட்டத்தட்ட 20 காவலாளிகள் எப்போதும் இருப்பார்களாம். அவர்களின் தலைவன் போல் இருப்பவன் தான் ரங்கா. நாங்கள் முதலிலே மேலே சென்றபோதும் அவர்கள்தான் விகாரைக்கு வருகின்ற பக்தர்களை வழி நடத்தினார்கள். அவர்கள் முஸ்லிம் கடைகளுக்கு வருகின்ற சிங்களவர்களை விரட்டுவதோடு மதிலோரமாக பொருட்களை விற்பனை செய்கின்ற முஸ்லிம்களுக்கு ஏசுவதை நாங்கள் அவதானித்தோம். நாம் அங்கே செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சிங்களவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்த காரணத்திற்காக அவர்கள் உடைத்து நொறுக்கிய கடை ஒன்றை அங்கிருந்த ஒருவர் எங்களுக்கு காட்டினார்கள். நாம் அங்கே கடைக்குள் உட்கார்ந்திருக்கும் அதே நேரம் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை மஞ்சள் நிற டி ஷர்ட் அணிந்த காவலாளிகள் மிகவும் இழிவான முறையில் மிரட்டுவதையும் நாம் கண்டோம்.
தகர்க்கப்பட்டுள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான வியாபார நிலையம்…
“இது இன்று நேற்று நடக்கின்ற ஒரு விடயம் அல்ல. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த பாதையை இராணுவத்தினர் மூடியே உள்ளனர். எந்த ஒரு வாகனத்திற்கும் மேலே வருவதற்கு அனுமதி இல்லை. எங்களை இங்கிருந்து விரட்டுவது தான் அவர்களுடைய முழு முயற்சியாக இருக்கின்றது. எங்களுடைய கடைகளுக்கு மேலே பின்னால் இருக்கின்ற மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். தினமும் தொல்லை தருகின்றார்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய மனைவியையும் மிகவும் கேவலமான முறையில் அவர்கள் ஏசுகின்றார்கள். நாங்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தால் நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் என அவர்களும் எமக்கு கூறுகின்றார்கள் என தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு முஸ்லிம் சகோதரர் இவ்வாறு கூறினார். அவர் மட்டுமல்ல அந்த கடைகளில் இருந்த எவருமே தம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. “நீங்கள் இந்தக் கதைகளை கேட்டுவிட்டு சென்று விடுவீர்கள். நாங்கள் தான் அதன் பிறகும் அடிபட வேண்டும். எங்களுடைய உயிருக்கே இப்போது உத்தரவாதம் இல்லை” என்றார் அவர்.
ஐசிசிபிஆர் “ICCPR” வலை
அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடங்கப்படாதுள்ள மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக 2007ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஐசிசிபிஆர் எனப்படுகின்ற “அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை” சட்டம் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. ஆனால் அண்மைய காலங்களாக இந்த சட்டத்தை அரசு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காகவும் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காகவும் பயன்படுத்துவதை நேரடியாகவே நாங்கள் அவதானித்து வருகின்றோம். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, எழுத்தாளர் சக்திக சத்குமார, கவிஞர் அஹ்னாப் ஜெசீம் மற்றும் அண்மையில் கைது செய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரிய போன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க பொலிசார் பயன்படுத்திய ஐசிசிபிஆர் என்ற சட்டம் தான் முஸ்லிம் கிராமத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு எதிராக கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நாற்பது வருடங்களாக கூரகல பள்ளிவாசலுக்கு அருகில் வியாபாரம் செய்து வரும் அவர் தனக்கு நேர்ந்த அநீதியை இவ்வாறு கூறினார். ‘‘கடந்த ஆண்டு நோன்பு காலத்தில் திடீரென தனது கடைக்கு வந்த பொலிசார் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக “கல்தொட” காவல் நிலையத்திற்கு வருமாறு கூறினர். அங்கே சென்று பல மணி நேரம் நான் காத்துக் கிடந்தேன். அதன் பின்னர் ‘ஜீரரத்ன” என்ற உப பொலிஸ் அதிகாரி என்னிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றது போல் ஏதோ எழுதி கையொப்பம் ஒன்றையும் பெற்றுக் கொண்டார். பொலிசாரை நம்பி நானும் கையெழுத்திட்டேன். பின்னர் காலையில் என்னை பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 28 நாட்கள் குருவிட்ட சிறைச்சாலையில் அடைத்து வைத்தார்கள். அதன் பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது ஏதோ ICCPR என்ற சட்டத்தின் மூலம் என்னை கைது செய்துள்ளார்கள் என்று. அவர்கள் எனக்கு எதிராக முன் வைத்துள்ள குற்றச்சாட்டு, நான் இன்னும் ஒருவருடன் சேர்ந்து ஜெய்லானி பள்ளியின் உண்டியலை உடைத்தேன் என்பதாகும். பள்ளியில் தொழுது விட்டு வெளியே வரும்போது, பள்ளியின் தூசி கூட என் வீட்டுக்கு வரக்கூடாது என்று என் சாரத்தைக் கூட தட்டி விட்டுத் தான் நான் வருவேன். அப்படிப்பட்ட எனக்கு எதிராக இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது மிகவும் வேதனையை அளிக்கின்றது’’ என கூறும்போதே அவரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
இவருக்கு எதிரான இந்த வழக்கு இன்னும் பலாங்கொடை நீதிமன்றத்தில் வழக்கு எண் B159/2022 கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் குறித்த பொலிஸ் நிலையத்தின் தலைமை பொறுப்பு அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்த “தரங்க” என்ற அதிகாரிக்கு எதிராக கொழும்பிலிருந்து விசாரணை ஒன்று நடந்து கொண்டிருப்பதாகவும், ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட தன்னைத் தேடி கொழும்பிலிருந்து ஒரு குழு வந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுச் சென்றதாக அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் உதவி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகரவிடம் நாம் வினவிய போது, இது தொடர்பில் ஆராய்ந்து எமக்கு அறிவிப்பதாக கூறினார்.
கூரகல தஞ்சந்தென்ன கத்தோலிக்க மக்கள் என்ன சொல்கிறார்கள்?
கூரகல விகாரை மற்றும் ஜெய்லானி பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள தஞ்சந்தன்ன கத்தோலிக்க தேவாலயத்திற்கு நாங்கள் சென்றோம். அங்கிருந்த கத்தோலிக்க மக்களிடம் நாங்கள் கலந்துரையாடினோம்.
“இந்த கிராமத்தில் கத்தோலிக்கர்கள், பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். நான் அறிந்த வகையில் நாங்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்தோம். ஆனால் ஞானசார தேரர் 2013 ஆம் ஆண்டு இங்கே வந்து பெரும் பிரச்சினையை உருவாக்கினார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினைகள் ஏற்பட தொடங்கியது. எனது தந்தை கூறியதன் படி இங்கே முஸ்லிம்கள் தான் முதலில் இருந்துள்ளார்கள். அந்த காலத்தில் சிங்களவர்கள் யாரும் அங்கே செல்வதில்லை என அவர் கூறியுள்ளார்”
உண்மையைச் சொல்வதாயின், இக்கிராமத்தில் சிங்கள மக்களுக்கு எப்போதும் முஸ்லிம்கள் பயந்தவர்களாகவே இருந்தார்கள். எங்களுக்கு தெரிந்த வரையில் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தார்களே தவிர நீங்கள் சொல்வது போல் சிலைகளை உடைத்து எதையும் அழிக்கவில்லை. ஒருமுறை எங்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சகோதரிகள் இருவர் கூரகல விகாரைக்கு செல்ல வேண்டும் என ஆசையுடன் அங்கே சென்றார்கள். அப்போது அவர்கள் தண்ணீர் போத்தல்களை வாங்க மேலே கடைகளுக்கு செல்லும் போது அவர்களை இராணுவத்தினர் செல்ல விடாமல் தடுத்துள்ளார்கள். அப்போது அந்த சகோதரிகள் நாங்கள் எந்தவொரு கலவரத்திற்கும் செல்லவில்லை இரண்டு தண்ணீர் போத்தல்களை வாங்கத்தான் செல்கின்றோம் எனக் கூறியும் அவர்களை இராணுவத்தினர் செல்ல விடாமல் தடுத்தார்களாம். இதிலிருந்தே உங்களுக்கு புரிந்து கொள்ள முடியும் அங்கே என்ன நடக்கின்றது என்று”
50 வருட போராட்டத்தின் வெற்றியா கூரகல?
நெல்லிக்கல தேரர் ஏறுகின்ற எல்லா மேடைகளிலும் உரத்த குரலில் கூறுகின்ற ஒரு விடயம் தான், “ஐம்பது வருடகாலப் போராட்டத்தின் மூலம் தாம் வென்றெடுத்த இடம் கூரகல விகாரை” என்பதாகும். இது குறித்து தஞ்சந்தன்ன பிரதேச கத்தோலிக்க மக்களிடம் நாம் வினவிய போது அவர்கள் “இது முற்றிலும் போலியான ஒரு வாதம். அவர் இங்கே வந்தபோது மக்கள் யாரும் அவரை எதிர்க்கவில்லை. அவர் கூறியது போல் இரண்டு வருடங்களில் இதனை செய்து முடித்தார். அவர் உண்மையிலேயே இந்த ஊரை முன்னேற்றி இருக்கின்றார்.
ஆனால் அவர் கூறுகின்ற சில விடயங்கள் நமக்கும் ஒரு சில எங்களுடைய பௌத்த நண்பர்களுக்கும் மிகவும் மன வருத்தத்தை அளிக்கின்றது. உண்மையிலேயே மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்த இந்த ஊர் முஸ்லிம் சிங்கள மக்களுடைய ஒற்றுமையை அவர் சீர்குலைத்துள்ளார்”
அத்துடன் தேரர் மேடைகளில் அடிக்கடி கூறுகின்ற ஒரு விடயம் தான் முஸ்லிம்களிடமிருந்து இந்த காணிகளை பணம் கொடுத்து நான் வாங்கியுள்ளேன் என்பது. இது பற்றியும் நாங்கள் ஊர் மக்களிடம் கேட்டோம். “அது முற்றிலும் பொய். ஒரு சிலரிடம் மாத்திரமே காசு கொடுத்து அவர் காணிகளை வாங்கினார். அதுவும் குளம் ஒன்றை கட்டுவதற்கு. வேறு எவரும் எதையும் விற்கவும் இல்லை வாங்கவும் இல்லை”
இது பற்றி நெல்லிகல தேரர் கூறுவது என்ன ?
நீண்ட சிரமத்துக்கு மத்தியில் நாங்கள் நெல்லிக்கல தேரரிடம் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி வினவினோம். முதலிலே அவர் அங்கே கடை வைத்திருக்கின்ற முஸ்லிம் வியாபாரிகள் மிகவும் மோசமான முறையில் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்கள். குறிப்பாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாகவும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார். அதனாலேயே தான் அங்கே விகாரைக்கு வருபவர்களுக்கு வியாபாரம் செய்யக்கூடாது என தடை விதித்ததாக கூறினார். மேலும் தான் அந்த முஸ்லிம் கிராமத்துக்கு எந்த ஒரு இன மத வேறுபாடும் இன்றி உதவி செய்வதாகவும் பாடசாலை மாணவர்களுக்கும் அதே போன்று கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி செய்துள்ளதாகவும் கூறினார். ஆனாலும் அவ்வூர் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமே எப்போதும் உதவி செய்பவர்களாக இருப்பதாகவும் அவர்கள் எப்போதும் பெரும்பான்மை மக்களை விட்டு விலகிச் செல்ல முற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் விகாரையை அமைப்பதற்கு முன்னர் தாம் ஜம்இயத்துல் உலமாவிடம் சென்று இது பற்றி கலந்துரையாட முயற்சி செய்தபோது அவர்கள், ‘ஜெய்லானி என்பது மரணித்தவர்களை வணங்கி வழிபடுகின்ற ஒரு பள்ளிவாசல். அவர்களைப் பற்றி எமக்கு எதுவும் தெரியாது. நீங்கள் வக்பு சபையுடன் தான் அதுபற்றி பேச வேண்டும்’ என கூறினார்கள்.
நாங்கள் இது பற்றி ஜம்இய்யத்துல் உலமாவிடம் வினவிய போது, தேரர் கூறியதை முற்று முழுதாக மறுத்தனர். குறித்த தேரர் ஜம்இய்யத்துல் உலமாவிடம் இது பற்றி கலந்துரையாடுவதற்காக வருகை தந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு முன்னமே, சூபி முஸ்லிம்கள் சிலை வணங்குபவர்களா? அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? போன்ற கேள்விகளை கேட்டதாகவும் உலமா சபை முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் “அப்படி எதுவும் இல்லை. இறந்தவர்களையும் கப்ருகளையும் பராமரிப்பது இஸ்லாத்தில் சுன்னாவாகும். அதனை நாங்கள் மறுக்க மாட்டோம். அவர்களும் முஸ்லிம்கள் தான்” என கூறினோம்.
அதன் பின்னர் நெல்லிகல தேரர் தமது சொந்த செலவில் அங்கே வேறு ஒரு இடத்தில் புதிய பள்ளி ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாகவும் மேலும் அங்கே வழக்கு ஒன்று சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு பதில் கொடுத்த ஜம்இய்யத்துல் உலமா அங்கே வழக்கு ஒன்று சென்று கொண்டிருப்பதால் தங்களால் எதையும் செய்ய முடியாது எனவும் இது வக்பு சபை எடுக்க வேண்டிய முடிவு எனவும் கூறியது என எம்மிடம் பேசிய உலமா சபை முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
ஊர்மக்கள் கூறுகின்ற விடயங்களை முற்றுமுழுதாக மறுத்த நெல்லிக்கல தேரர் அவ்வாறான எந்த ஒரு விடயமும் தனக்கு இதுவரை அறிய கிடைக்கவில்லை என கூறினார். அத்துடன் முஸ்லிம்களுடன் தனிப்பட்ட ரீதியில் தனக்கு எந்தவித கோபமும் இல்லை எனவும் கூறினார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததாக பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்கள் கட்டடங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கூரகலை பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினை 2015ஆம் ஆண்டுகளில் வரும் போது அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டிருப்பது 1922ஆம் ஆண்டில் என்பதால் அது தொல்பொருள் அல்ல, என்ற நிலைப்பாட்டிற்கு தொல்பொருளியலாளர்கள் வந்ததாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் முதுகலை விரிவுரையாளர் ஒருவர் கூறினார்.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு கல்தொட கூரகல ஆகிய பிரதேசங்களில் தொல்லியல் முதுகலை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளில் பின்னர் வெளியிடப்பட்ட “Kaltota Survey – Phase 1” நூலில் மிகவும் தெளிவாக கூரகல மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் காணப்படுகின்ற தொல்பொருள் ஆராய்ச்சிகள் மற்றும் அதன் முடிவுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2012- , 13 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஜெய்லானி பள்ளிக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பானது இன்றைக்கு 8000 வருடங்கள் பழைமையானது என காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு இடத்திலும் புதிதாக எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியாது என மிகத் தெளிவாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் முதுகலை நிறுவன பேராசிரியர் கூறினார். ஆகவே அங்கே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விகாரையும் ஏனைய கட்டுமானங்களும் எவ்வாறு யாருடைய அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்புகள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
அங்கே சென்று அங்கே நடக்கின்ற விடயங்களை கண்களால் கண்ட ஒருவராக என்னால் கூற முடியும், ஒரு பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை மக்களுடைய வரலாற்றையும் இருப்பையும் அழிக்கின்றார்கள். பல வருடங்களாக முஸ்லிம்கள் வணங்கி வந்த ஒரு வணக்கஸ்தலத்தை இராணுவத்தின் உதவியுடன் பெரும்பான்மை அரசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் சேர்ந்து ஆக்கிரமித்துள்ளார்கள். இலங்கை பூராகவும் இன்றளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற சிறுபான்மையினரின் பூர்வீகங்கள் கைப்பற்றப்படுவதன் ஓர் அங்கமாகவே இதனை நான் காண்கின்றேன். இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு என்பது தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த இருப்பை உறுதி செய்கின்ற விடயங்களாகவே இது போன்ற பழைய பள்ளிகளும் அவுலியாக்களின் ஸியாரங்களும் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் வரலாற்றை பறைசாற்றுகின்ற வரலாற்றுத் தளங்களாக காணப்படுகின்ற இது போன்ற இடங்கள் அழிக்கப்படுவதை நாங்கள் கண்டும் காணாதது போல் இருந்தால் நிச்சயமாக நாமும் முஸ்லிம் சமூகத்தின் அடையாள அழிப்புக்கு துணை போனவர்களாக மாறிவிடுவோம். முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளேயே மதத்தை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பில் காணப்படுகின்ற முரண்பாடுகள் மேலும் இவற்றை அழிப்பதற்கு மறைமுகமாக துணை செய்கின்றன. மேலும் முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற பன்மைத்தன்மை என்ற விடயம் இல்லாமல் ஆக்கப்படும் அபாயமும் உள்ளது. அதன் பின்னர் சிங்கள இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்ற நிலை ஏற்படலாம் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரீன் அப்துல் சரூர் கூறினார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கல்ப ராஜபக்ஷ உடன் நாம் இதுபற்றி கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு கூறினார். அண்மையில் காலம் சென்ற பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மிலன் குந்தேரா கூறியது போன்று “நாம் செய்கின்ற சகல போராட்டங்களும், மறக்கடிக்கப்படுவதற்கும் மறுக்கப்படுவதற்கும் எதிராக இருக்க வேண்டும். அதாவது அரசும் ஆட்சியாளர்களும் எடுத்த பிழையான முடிவுகள் காரணமாக மனித குலம் முகம்கொடுத்த பிரச்சினைகள் மறக்கப்படுவதற்கு எதிராக எம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும்” என்றார்.
நீங்கள் கூறிய இந்த விடயமும் மிலன் குந்தேரா கூறியது போன்ற ஒன்றாகும்.
‘‘நான் இலங்கையில் தற்போது காண்கின்ற இந்த கான்கிரீட் பௌத்த மதமானது மிகப்பெரிய ஒரு அரசியல் லாபத்துக்காகவும் சமூகத்தில் ஒரு வகுப்பை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுடைய முதலீடுகளுடன் நடத்தப்படுகின்ற ஒரு வியாபாரமாகவே நான் காண்கின்றேன். இந்த சகல சம்பவங்களுக்கும் பின்னால் காணப்படுகின்ற மூலதனத்தை நீங்கள் ஆராயும் போது இந்த யதார்த்தம் உங்களுக்கு தெரிய வரும்’’ எனக் கூறினார்.
மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று பீட பீடாதிபதி பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவ்சிரி இந்தக் “கூரகல” விடயம் பற்றி குறிப்பிடும் போது,
இது மிகவும் சிக்கலான ஒரு அரசியல் பிரச்சினையாகும். இதிலே காணப்படுகின்ற அரசியல் மிகவும் ஆபத்தானது. அனைத்து மதங்களினதும் மதத் தலைவர்களுடைய ஒரு கனவு தனக்கென ஒரு அடையாளத்தை சமூகத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது. எனவே அதற்காக அவர்கள் தெரிவு செய்கின்ற ஒரு எளிய விடயம் மத வழிபாட்டு தலங்களை உருவாக்குவதாகும்.
கூரகலவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செல்வதும் அதன்பின்னர் இந்த இடங்களை திரும்பவும் பௌத்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்து சமூகத்தில் பரப்பப்படுவதும் பிறகு பிரச்சினைகள் உருவாவதும் ஒரு அரசியல். இலங்கை போன்ற ஒரு நாட்டில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஒரு இடத்திற்கு சுற்றுலாக்காக செல்வது என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. சாதாரண மக்கள் ஏனைய சுற்றுலா தளங்களை தரிசிப்பதை விட இது போன்ற இடங்களுக்குச் செல்வதை அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக இது போன்று பாரிய போராட்டங்களின் பின்னர் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடம் அல்லது மத வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றை பார்வையிடுவதை மக்கள் அதிகம் விரும்புவார்கள். இன்னும் சரளமாக கூறினால், மனதை பதற வைக்கின்ற உடல் நடுக்கத்தை ஏற்படுத்துகின்ற செய்திகளை மக்கள் அதிக ஆவலுடன் கேட்பார்கள். இந்த எல்லாவிதமான பிரச்சனைகள் காரணமாகவும் கடைசியில் அவதிப்படுவது சமூகத்தில் இருக்கின்ற ஒரு வகுப்பு சாரார் மாத்திரமே என பேராசிரியர் இறுதியாக கூறினார்.
முஸ்லிம் சமூகம் என்பது ஒரு பன்மைத் தன்மை வாய்ந்த சமூகம் என்ற விடயம் ஒரு சில முஸ்லிம்களாலேயே இன்று மறுக்கப்பட்டு நாங்கள் பொறுமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு முஸ்லிம்களே உதாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஒருபுறம் அழிக்கப்பட்டு வருகின்றது! முஸ்லிம்களின் இருப்பு மறுபுறம் மறுக்கப்பட்டு வருகின்றது! முஸ்லிம்களின் இளைஞர்களின் கல்வியும் எதிர்காலமும் இன்னொரு புறம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! இந்த அனைத்துக்கும் மத்தியில் முஸ்லிம்களுக்குள்ளேயே மதத்தை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி மிகப்பெரிய ஒரு முரண்பாடு !
இந்த கூரகல ஜெய்லானி பள்ளியின் இன்றைய அரசியலையும் எமது முஸ்லிம் சமூகம் அதனை காண்கின்ற விதத்தையும், 1937 இ-ல் ஜெர்மனில் ஹிட்லரின் ஆட்சியைப் பற்றி மார்டின் நிமோலர் (Martin Niemoller) எழுதிய இந்த உலகப்புகழ் பெற்ற வரிகளின் நினைவுபடுத்துகின்றது.
அவர்கள் முதலில் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் இல்லை
பின்னர், தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்
நான் தொழிற்சங்கவாதி இல்லை
அதற்குப் பின்னர், யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்
நான் யூதன் இல்லை
அடுத்து, கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்
நான் கத்தோலிக்கன் இல்லை
கடைசியாக, என்னைத் தேடி வந்தார்கள்
எனக்காகப் பேச அப்போது யாருமே இல்லை.
– Vidivelli
Post a Comment