Header Ads



மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூரம் - பலரும் கண்டனம், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம்


இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.


இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, மணிப்பூர் மாநிலம் தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் தேதி இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.


இது குறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


என்ன நடந்தது?

மே 3ஆம் தேதி 800 முதல் 1000 பேர் வரை நவீன ஆயுதங்களுடன் தௌபால் மாவட்டத்தில் அமைந்துள்ள தங்கள் கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பல் கொள்ளையடித்ததுடன் கிராமத்திற்கு தீ வைக்க ஆரம்பித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தை, சகோதரருடன் அருகேயிருந்த காடுகளை நோக்கி ஓடியிருக்கின்றனர்.


முதல் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களின்படி, இந்த பெண்களை காவல்துறையினர் காப்பாற்றினர். பின்னர் இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்; . ஆனால் காவல் நிலையத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு, கும்பல் அவர்களைத் தடுத்திருக்கிறது.


இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் இந்த பெண்களை காவல்துறையினரிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். பிறகு இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.


“மூன்று பெண்களும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நடக்க வற்புறுத்தப்பட்டனர். ஒரு இளம் பெண் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் 19 வயது சகோதரர் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் கொல்லப்பட்டார்.” என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


இது குறித்து பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு குற்றம் செய்தவர்கள் அந்தப் பெண்களுக்கான கொடுமையை மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.


அதே நேரத்தில், இந்தப் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக மகளிர் அமைப்பினர் அறிவித்ததை அடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தௌபால் ஆகிய 5 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.” என்று அவர் கூறினார்.


இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு தலைமை நீதிபதி பெஞ்ச் மத்திய அரசையும், மணிப்பூர் அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

1 comment:

Powered by Blogger.